elugai

இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்: ஈரானியப் போரும் தடம்மாறும் பொருளாதார மீட்சியும்!

மூளுமா மூன்றாம் உலகப் போர்?

மூளுமா மூன்றாம் உலகப் போர்?

கட்டுரையாளர் - கண்ணன்

சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர், உலகம் ஒரு பெரும் போர் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், பல கொடிய போர்கள் இடம்பெற்றிருக்கின்றன. மூன்று மில்லியன் மக்களை விழுங்கிய கொரிய போர், ஒரு மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்ட ஈராக் போர், இந்திய-சீனப் போர், இந்திய-பாகிஸ்தான் போர்கள், 3.8 மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட வியட்நாம் போர் என்று பல போர்களை சந்தித்திருக்கிறது. இந்த போர்களில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இந்த போர்கள் அனைத்தும், ஏதோ ஒரு வரையறைகளுக்குள்ளேயே காணப்பட்டது.

இப்போது நடக்கின்ற போர்கள், சில எல்லைகளுக்குள் நடப்பதாக தெரியவில்லை, பரந்துபட்டதாக மாறியிருக்கிறது. பல நாடுகள் தொடர்புபடுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் உக்ரைன்-ரஷ்யப் போர், 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், இஸ்ரேல்-பலஸ்தீனப் போர் முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் ஈரான் மீது, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ஆரம்பித்த போர், பரந்துபட்ட ஒன்றாக மாறியிருக்கிறது.

ஈரான் போர் — அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் வரைபடம் 2026 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களும் ஈரானின் பதில் தாக்குதல்களும் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பதை காட்டும் வரைபடம் — மார்ச் 2026. (படம்: Al Jazeera)

ஈரான் மீது தொடங்கப்பட்ட தாக்குதல் இப்போது, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து விரிவடைந்திருக்கிறது. 3200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே வரை, அதன் நேரடித் தாக்கம் இருக்கிறது. ஈரானுக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபடும், ஹிஸ்புல்லா அமைப்பைத் தாக்கும் போர்வையில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. அதேவேளை, தன் மீதான தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தப்படுகின்ற அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குகிறது. அங்குள்ள அமெரிக்கப் படைத்தளங்களை இலக்கு வைத்து, ஈரான் நடத்துகின்ற தாக்குதல்களால், மத்திய கிழக்குப் போர், கிட்டத்தட்ட 15 நாடுகளுக்கு மேல் பங்கேற்கின்ற போராக மாறியிருக்கிறது.

அதேவேளை, உக்ரைன்-ரஷ்ய போரில், வடகொரியாவின் நேரடியான பங்களிப்பும் சீனாவின் மறைமுகமான பங்களிப்பும் இருக்கிறது. ஆக, உலகின் மொத்த நாடுகளின் எண்ணிக்கையில் 10 வீதமான நாடுகள் இந்த போர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கின்றன. இது மூன்றாவது உலகப்போருக்கான திறவுகோலாக இருக்கலாமோ என்று ஐயம் உருவாகிவிட்டது.

உலகப் போரின் இயல்பு

உலகப் போர் என்பது திடீரென மூளுகின்ற ஒன்றல்ல. மகாபாரதப் போர் போல, குறித்த நாளில் குறித்த நேரத்தில் தொடங்கப்படுவதல்ல. ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களின் தூண்டுதலாக வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டு, பின் ஒரே புள்ளியை நோக்கி ஈர்க்கப்பட்டே, உலகப்போர்கள் உருவாகியிருக்கின்றன. முதலாம் உலகப்போரும் சரி, இரண்டாம் உலகப்போரும் சரி அப்படித்தான் உருவாகின. தொடக்கத்தில் எல்லா நாடுகளும் அதில் பங்கேற்கவும் இல்லை, குறிப்பிட்ட சில நாடுகள் தொடங்கிய போர் பின்னர் தீவிரம் அடைந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் தொடங்கிய நாடுகளை விட, வேறு நாடுகள் தான் தீவிரமாக சமர்களை நடத்தின, இழப்புகளை எதிர்கொண்டிருந்தன.

உலகப் போர் என்பது எப்போது வெடிக்கும் என தெரியாத ஒரு எரிமலையை போன்றது. அது உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் வெளியே தெரியாது, திடீரென வெடித்துச் சிதறும்.
தெஹ்ரான் மீது தாக்குதல் புகை — மார்ச் 2026 அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் தெஹ்ரான் மீது புகை திரண்டது — "Operation Epic Fury" என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் 900க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன — பெப்ரவரி 28, 2026. (படம்: AP / CNN)

பனிப்போர் காலத்தில் இருந்து இன்று வரை

மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் பல தசாப்தங்களாகவே நீடித்து வருகிறது. பனிப்போர் காலத்தில் இந்த அச்சுறுத்தல் மிகவும் உச்சத்தில் காணப்பட்டது. ஏனென்றால் அப்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் தமக்கென தனித்தனியான முகாம்களை உருவாக்கிக்கொண்டு, ஆதரவு அணிகளை வைத்துக்கொண்டு படைபலத்தைக் காட்டுவதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. நாடுகளை வசப்படுத்துவது, ஆட்சிகளை வீழ்த்துவது, உள்நாட்டு கிளர்ச்சிகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகள் அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருந்தது. அது, மூன்றாம் உலகப் போருக்கான கொதி நிலையை அதிகளவில் தக்கவைத்திருந்தது.

பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் சோவியத் ஒன்றியம் உடைந்து போனது. கம்யூனிச நாடுகள் பலவீனம் அடைந்ததால் பொருளாதார ரீதியான பின்னடைவுகளைச் சந்தித்தன. இதனால், பொருளாதார ரீதியாக தங்களை மீள வளர்த்துக்கொண்டு போருக்கான தயார்படுத்தல்களை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ரஷ்யா தன்னை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு தான், உக்ரைன் மீதான பாரிய தாக்குதலை தொடங்கியது.

ரஷ்யாவின் இந்தப் போர் தனியே உக்ரைனுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது, ஐரோப்பிய நாடுகளின் கணிப்பு. எதிர்காலத்தில் ரஷ்யா தங்களின் மீது படையெடுப்புகளை நிகழ்த்தலாம் என்ற பயம் ஐரோப்பிய நாடுகளிடம் உள்ளது. அதனால் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தோற்கடிப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம். அமெரிக்கா கைவிட்டாலும் கூட, உக்ரைனுக்கு அதிகளவில் உதவிகளை கொடுத்து அதனை தற்காப்பு நிலையில் வைத்திருப்பதில் ஐரோப்பிய நாடுகளுக்கு கணிசமான பங்கு உள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதல் 2026 ஈரான் ஏவுகணைத் தாக்குதல் — அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ராணுவ பலத்தை குறைத்து மதிப்பீடு செய்தன என்று இந்தத் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன — மார்ச் 2026.

ஈரான் போர் — ஒரு திட்டமிட்ட தவறு

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர், இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கிறது. அது ஈரான் மீதான ஒரு தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. ஈரானை அமெரிக்காவும் சரி, இஸ்ரேலும் சரி சரியாக மதிப்பீடு செய்யவில்லை. அதன் திறன்களை குறைத்து மதிப்பிட்டுள்ளன. அந்தக் குறைமதிப்பீடு தான் இந்த போர் அவர்களால் வெல்லப்பட முடியாததாக நீண்டு செல்வதற்குக் காரணம்.

ஈரானிடம் அணுசக்தி ஆற்றல் இருக்கிறதோ இல்லையோ — அதனை அழிப்பதற்காக திட்டமிட்டு தொடங்கப்பட்ட போர், இது. ஈராக்கை அழிக்க எப்படித் திட்டமிட்டு, அமெரிக்காவைப் போருக்குள் சிக்க வைத்ததோ, அதுபோலவே இப்போது ஈரான் போருக்குள்ளே அமெரிக்காவை சிக்க வைத்திருக்கிறது இஸ்ரேல். இந்தக் குற்றச்சாட்டை கூறிவிட்டு — ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும், தன்னால் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்தப் போரை ஆதரிக்க முடியாது என்றும், கூறிவிட்டுப் பதவி விலகியிருக்கிறார் அமெரிக்காவின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோ கென்ட்.

இஸ்லாமிய அரசை வீழ்த்தி ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, அதன் வசம் உள்ள நவீன ஏவுகணைகளை அழிப்பது தான் இஸ்ரேலிய-அமெரிக்க நோக்கம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கியதோ இல்லையோ அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதோ இல்லையோ — சக்திவாய்ந்த ட்ரோன்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறது. அது சார்ந்த நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்திருக்கிறது. இதனை அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் அந்த ஆற்றலை அழிக்கவே, போரைத் தொடங்கின.

இந்தப் போர் சில நாட்களுக்குள் முடிந்துவிடும் என்றே தப்புக் கணக்கு போடப்பட்டது. ஒரு வாரத்துக்குள் முடியும் என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஈரானின் இராணுவ பலம் முடிந்துவிட்டது, அவர்களால் இனி தாக்குப் பிடிக்க முடியாது என்றெல்லாம் ட்ரம்ப் கதை சொல்லிக்கொண்டிருந்தார். ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் இத்தகைய கதைகளைப் பதிவிடும் போதே, ஈரான் திரும்பத் திரும்பத் தாக்கிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுது ட்ரம்பும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் போர் முடிவுக்கு வரும் சரியான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் ஈரானின் பலத்தை அவர்களால் இன்னமும் மதிப்பீடு செய்ய முடியாமல் உள்ளது. ஈரானின் ஏவுகணை பலம் குறைந்துவிட்டதாக சொல்லும் போதே அது மூர்க்கத்தனமாக தாக்குகிறது. புதிது புதிதாக ஏவுகணைகளை அறிமுகப்படுத்துகிறது. இது, தாக்குதல்களை மட்டுப்படுத்தி, போரை நீடிக்கச் செய்து எதிரியை களைப்படையச் செய்யும் உத்தியை ஈரான் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்ரம்ப் நெதன்யாகு சந்திப்பு ஈரான் போர் 2026 அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் போர் தொடர்பாக கலந்தாலோசித்தனர் — "நோபல் பரிசுக்காக 8 போர்களை நிறுத்தினேன்" என பீற்றிய ட்ரம்ப் இப்போது மத்திய கிழக்கை நெருப்பில் தள்ளியிருக்கிறார் என விமர்சகர்கள் சாடுகின்றனர்

உலகப் போரின் நுழைவாயிலில்

இந்தப் போர் நீடிக்க நீடிக்க உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியும், போர் அச்சுறுத்தலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இப்போது, 20 வரையான நாடுகள் பங்கேற்கும் இந்தப் போரில் எதிர்காலத்தில் இன்னும் பல நாடுகள் இணையலாம், அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. ஹோர்மூஸ் நீரிணையில், ஈரானுக்கு எதிராக சீனாவையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கொண்டுவந்து நிறுத்துவதற்கு அமெரிக்கா பெரும் பிரயத்தனம் எடுக்கிறது.

ஆனால் யாருமே அதற்குள் வந்து சிக்கிக்கொள்வதற்கு தயாராக இல்லை. அப்படி அவர்கள் உள்ளே வந்தால், இந்த போருக்குள் அவர்களும் இழுக்கப்படுவார்கள். அவ்வாறான நிலையில், இந்தப் போர் இன்னும் விரிவடையும், அந்த அச்சத்தினால் தான் ஐரோப்பிய நாடுகள் இந்த போர் நடவடிக்கையில் இருந்து விலகி இருக்கின்றன. ட்ரம்ப் எதிர்பார்த்தது போல, அவர்களை இந்த போருக்குள் இழுத்துவர முடியவில்லை. பல நாடுகள் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளில் இருந்து பின்வாங்கிவிட்டன. ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.

இது ட்ரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பினும், அவர் விடாப்பிடியாக இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை நொருக்குவதில் உறுதியாக இருக்கிறார். இந்த போர் உலகப்போராக மாறுமா இல்லையா என்று இப்போது கணிக்க முடியாது, ஆனால் இப்போது, இது உலகப் போர் ஒன்றுக்கான நுழைவாயிலில் நிற்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

எட்டுப் போர்களை நிறுத்தினேன் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் புலம்பித் திரிந்த ட்ரம்ப், நோபல் பரிசுக்காக அலைந்து திரிந்தவர். அது கிடைக்காத ஏமாற்றத்தில், மத்திய கிழக்கில் போர் வெறிகொண்டு அலைகின்றதை காண முடிகிறது. இவ்வாறான தலைமைத்துவங்கள் உலகளவில் இருக்கின்ற சூழலில், மூன்றாம் உலகப் போருக்கான அபாயம் ஒருபோதும் குறையாது.

Post a Comment

0 Comments