அமெரிக்காவிடம் சுயாதீனத்தை இழந்த இலங்கை
ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஆழ்த்தியிருந்தாலும், உலகில் பரவலான அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.
ஈரானின் அணுசக்தி ஆற்றலை அழிப்பதற்காக என்ற பெயரில் முன்னர் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை, ஆட்சி மாற்ற நடவடிக்கையாக, ஈரானின் தலைமைத்துவத்தை அழிக்கும் நடவடிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை உலகம் பெரும்பாலும் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டது உலகில் பரவலான அச்சத்தை உருவாக்கியுள்ளது. (படம்: AP / Times of Israel)
இன்றைய இந்த நிலை, நாளை தங்களுக்கும் கூட ஏற்படலாம் என்பதைப் பல நாடுகள் மறந்து விட்டிருக்கின்றன.
தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களைக் கவிழ்க்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போக்கை விமர்சித்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது இலங்கைக்கும் கூட ஆபத்தானது எனக் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் சரியான கருத்து.
அமெரிக்காவை எதிர்க்கின்ற நாடுகளின் தலைவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்ற நிலையே இன்று ஏற்பட்டிருக்கிறது.
தலைவர்களின் படுகொலை வரலாறு
மத்திய கிழக்கில், முதலில் ஹமாஸ் தலைவர்கள் அழிக்கப்பட்டார்கள், அடுத்து ஹிஸ்புல்லா தலைவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
சிரியாவின் பஷார் அல் அசாத் குறிவைக்கப்பட்ட போது, அவர் கடைசி நேரத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இப்போது ஈரானின் உயர்தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா தன்னை எதிர்க்கின்ற நாடுகளின் தலைமையை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையை ஈவிரக்கமின்றி மேற்கொண்டு வந்திருக்கிறது.
சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் இஸ்ரேலைக் கொண்டும் அதை நிகழ்த்தியிருக்கிறது.
ஈராக்கிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிப் போர் தொடுத்து சதாம் ஹுசைனைப் பிடித்துத் தூக்கிலிட்டது.
லிபியாவில் அதேபோன்று கேணல் முவம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
அதே வரிசையில் இப்பொழுது ஈரானிய உயர்தலைவர் மற்றும் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அண்மையில் வெனிசுவேலாவிலும் கூட அமெரிக்கப் படைகள் தரையிறங்கி அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவைச் சிறைபிடித்துச் சென்றபோது உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆக மொத்தத்தில் அமெரிக்காவை எதிர்க்கின்ற நாடுகளின் தலைவர்களின் கதி இதுதான் என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.
இது ஒரு எழுதப்படாத விதியாக மாற்றப்பட்டிருக்கிறது.
இலங்கையின் நடுநிலை கேள்விக்குறி
இந்தப் பிரச்சினையில் இலங்கையின் நடுநிலை தொடர்பாகக் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஒரு நாட்டின் தலைவரின் மறைவுக்கு அதனுடன் நெருங்கிய உறவு பேணும் நாடுகள் இரங்கல் தெரிவிப்பது வழக்கம்.
நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பதுடன், இறுதிச் சடங்கிலும் பங்கேற்பதும் வழமையானது.
இலங்கை-ஈரான் இராஜதந்திர உறவுகள் — ஈரான் பல தசாப்தங்களாக இலங்கைக்குப் பெரும் உதவிகளை வழங்கி வந்திருக்கிறது. (படம்: News First / Iran MFA)
இலங்கையும் அவ்வாறான பாரம்பரியத்தையே பின்பற்றி வந்தாலும், ஈரானின் உயர்தலைவர் கமேனி படுகொலை விடயத்தில் அதற்கு மாறாகவே செயற்பட்டுள்ளது.
இந்தப் படுகொலை நடந்து, 5 நாட்களாக இலங்கை அரசாங்கமோ அரசாங்கத் தலைவர்களோ வாய் திறக்க முடியாதளவுக்குத் திராணியற்றவர்களாக மாறியிருந்தனர்.
இங்குக் கொல்லப்பட்டவர் யார் என்பது முக்கியமானதாக இருக்கவில்லை, யாரால் கொல்லப்பட்டார் என்பதே முக்கியமானதாக இருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதால் தான், இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் கூட அமைதியாக இருக்கிறது.
அண்மையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட போது, அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஆனால், ஈரான் நிலவரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு முதலில் வெளியிட்ட அறிக்கையில் அனைத்துத் தரப்புக்களும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும், பதற்றத்தைக் குறைக்க வேண்டும், உலகளாவிய மோதல்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்ததே தவிர, யாரையும் கண்டிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.
அதைவிட ஈரானின் உயர்தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாகவோ, குறைந்தபட்சம் அதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலோ அந்த அறிக்கையில் எதுவுமே இடம்பெற்றிருக்கவில்லை.
ஈரானுடனான நெருங்கிய உறவு
இந்தளவுக்கும் ஈரான் இலங்கையில் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் முக்கியமான பங்கு வகிக்கும் நாடு.
முன்னர் ஈரானிடம் இருந்தே, இலங்கை எரிபொருளைக் கொள்வனவு செய்து வந்தது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டிக் கொடுத்ததும் ஈரான் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா திட்டத்துக்கு நிதியளித்ததும் ஈரானே.
ஈரானைச் சர்வதேசக் கூட்டாளியாக இலங்கை எப்போதும் கருதி வந்தது.
சர்வதேச அரங்கில் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம், இலங்கைக்கு ஈரான் ஆதரவளித்து வந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கும் ஈரான் ஆதரவு வழங்கியதுடன், ராஜபக்ஷ அரசாங்கம் ஈரானுடன் மிக நெருங்கிய நட்புப் பாராட்டி வந்தது.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானதும், நாமல் ராஜபக்ஷ மாத்திரமே, அவர் ஒரு இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி என குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஈரானை உண்மையான நண்பன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை-அமெரிக்கா உறவுகள் — அமெரிக்காவின் முழுக்கவனம் இலங்கை மீது குவிந்திருக்கிறது. (படம்: Newswire.lk / Economy Next)
ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடிக்கிறது.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்த பின்னரும் கூட, ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனாலும், இலங்கையின் நெருங்கிய ஒரு கூட்டாளி மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகின்ற போது, இலங்கை அமைதியைக் கடைப்பிடிப்பது, இராஜதந்திர மட்டங்களில் வியப்பைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவின் பிடியில் இலங்கை
கமேனியின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும், மரியாதை நிமித்தமாக இரங்கலையாவது வெளியிட்டிருக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருந்தது.
நடுநிலை நாடாகக் காட்டிக் கொண்டாலும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலைப் பகைத்துக் கொள்ள இலங்கை விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் ஈரானுக்கு ஆதரவாக வெளியிடப்படும் கருத்துக்கள் அமெரிக்காவைச் சீற்றத்துக்கு உள்ளாக்கும் என்ற பயம் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது.
ட்ரம்ப் அரசாங்கத்துடன் மிக அவதானமாகவே இருக்க வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது.
இலங்கை மீது அமெரிக்காவின் முழுக்கவனம் குவிந்திருக்கிறது, இலங்கையைத் தனது தேவைக்காகப் பயன்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.
அதனால் இலங்கைக்குத் தேவையான பல வளங்களைக் கொடுத்து அதனைத் தன் கைக்குள் போட்டுக் கொள்கிறது.
அமெரிக்காவைப் பகைக்கும் வகையில் எடுக்கின்ற எந்த ஒரு நடவடிக்கையும் அரசாங்கத்தை உறுதியற்ற நிலைக்குத் தள்ளலாம் என்ற அச்சம் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — ஈரான் உயர் தலைவரின் மரணம் பற்றி வாய்திறக்காத நிலை இலங்கையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. (படம்: Times of India / FT)
இதனைத் தவிர்ப்பதற்காக வீண் குழப்பங்களை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக அமெரிக்காவுடன் தவிர்க்க முடியாத தந்திரோபாயக் கூட்டை வைத்திருக்க வேண்டிய நிலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
இல்லாவிட்டால் ஈரான் விடயத்தில் இலங்கை அமைதியாக இருக்க முடியாது.
ஈரான் இலங்கைக்குப் பல தசாப்தங்களாகப் பெரும் உதவிகளை வழங்கி வந்திருக்கின்ற நாடு, தனிப்பட்ட ரீதியாகவோ அரசு என்ற ரீதியாகவோ இலங்கை அதற்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறது.
அப்படியிருந்தும் ஒரு துக்கச் செய்தியைக் கூடப் பரிமாறிக்கொள்ள முடியாத நிலையில், அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் சிக்கியிருக்கிறது.
இது இலங்கையின் நடுநிலைக் கொள்கைக்கு அல்லது அணிசேராக் கொள்கைக்கு ஒரு பெரும் சவால்.
இஸ்ரேலுடனும் தவிர்க்க முடியாத உறவுகளை அது பேணத்தொடங்கி விட்டது.
பொருளாதார மீட்சிக்காக இத்தகைய ஒரு பாரம்பரிய உறவைப் பணயம் வைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இலங்கையின் இந்த அமைதியையிட்டு ஈரான் அதிருப்தி அடைந்திருக்கிறது என்பதை, ஈரானின் தூதுவரின் செவ்வியொன்று வெளிப்படுத்தியிருக்கிறது.
நடுநிலை என்பது, அமைதியாக இருப்பதல்ல என்று அவர் கூறியிருந்தார்.
இலங்கைத் தரப்பில், கண்டனமோ, இரங்கலோ வெளியிடப்படாத நிலையில், ஈரானியத் தூதரகம், கடந்த புதன்கிழமை இரங்கல் புத்தகத்தைத் திறந்தது.
அதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கையெழுத்திட்ட பின்னரே, இரங்கலை வெளியிட்டார்.
இது தவிர்க்க முடியாதபடி வெளியிடப்பட்ட இரங்கல்.
முன்னதாகக் கடந்த திங்கட்கிழமை, இலங்கையின் மௌனம் குறித்து, ஊடகச் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, வெளிவிவகார அமைச்சின் ஊடாக விரைவில் இரங்கல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் புதன்கிழமை இரங்கல் பதிவேடு திறக்கப்படும் வரை அவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதலைக் கண்டித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஈரான் மீதான தாக்குதல் பற்றி வாய்திறக்கவில்லை.
ஈரான் உயர் தலைவரின் மரணம் பற்றி வாய்திறக்கவில்லை.
இந்த நிலையானது, இலங்கைத் தீவு தனது சுயாதீனத்தன்மையையும் இறைமையும் அமெரிக்காவிடம் இழந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
0 Comments