ஈரானிய மாலுமிகளை அனுப்ப மறுத்த இலங்கை
ஈரான் மீதான போரை, இந்தியப் பெருங்கடலுக்குள் இழுத்துச் சென்ற அமெரிக்கா, இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கூறப்படுவதை, அரசாங்கம் மறுத்து வருகிறது.
இந்த விடயத்தில், அமெரிக்காவினால் இலங்கைக்கு அழுத்தங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு கூறினாலும், அது எந்தளவுக்கு உண்மையானது என்ற சந்தேகங்கள் உள்ளன.
கடந்த 4ஆம் திகதி காலிக்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது, இலங்கை முற்று முழுதாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.
இலங்கைக்கு தெரியாமலேயே - இலங்கைக்கு மிக அருகாமையில் நடமாடிய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்திருந்தது.
ஐஆர்ஐஎஸ் டேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் காலி மருத்துவமனையில் — மார்ச் 4-5, 2026. (படம்: Eranga Jayawardena / AP)
இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று, சர்வதேச போரியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
எதற்காக அமெரிக்கா இந்த இடத்தில் இந்த இலக்கை தேர்ந்தெடுத்தது என்ற கேள்வியையும் கூடவே அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
இலங்கை மற்றும் இந்தியாவுடனான நட்புறவு மற்றும் பாதுகாப்பு உறவுகளை அலட்சியம் செய்யும் வகையில் அமெரிக்கா எடுத்த தீர்மானம் என்றும், போரியல் வல்லுனர்களும், முன்னாள் படைத்தளபதிகளும் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் குறித்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.
ஐஆர்ஐஎஸ் புஷேர் — இழுபறி நீடிக்கிறது
ஆனால், ஈரானிய மாலுமி தொடர்பான விடயத்தில், ஈரானிய கப்பல் தொடர்பான விடயத்தில் இன்னமும் குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் தவிர, அதற்கு உதவியாக வந்த விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் 15 ஈரானிய மாலுமிகளுடன் கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் தரித்து நிற்கிறது.
அதில் இருந்த 206 மாலுமிகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு வெலிசற கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட, தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே சரியானது.
அவர்கள் வெலிசற கடற்படைத் தளத்திற்கு வெளியே சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஐஆர்ஐஎஸ் புஷேர் (A 422) கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் நங்கூரமிட்டு நிற்கிறது — இலங்கை கடற்படை போட்டோ, மார்ச் 2026. (படம்: Naval News / Sri Lanka Navy)
அதேபோல, அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளில் சிலர், இன்னமும் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்கள் கொக்கல விமானப்படைத் தளத்தில் அதேபோன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் தாமதம்
அரசாங்கம் அறிவித்தபடி, ஈரானிய அரசாங்கத்துடன் இணங்கியபடி, விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலை கடற்படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அந்தக் கப்பலை, திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அந்தக் கப்பல் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை இலங்கை கடற்படை பொறுப்பேற்றிருந்தாலும், இன்னமும் ஈரானிய கடற்படை மாலுமிகள் 15 பேர் அதில் உள்ளனர். அவர்கள் அதிலிருந்து இறங்க மறுத்து விட்டனர்.
5000 தொன் எடை கொண்ட, 2000 தொன் எரிபொருள் கொண்ட அந்தக் கப்பலை, திருகோணமலை வரை நகர்த்திச் செல்வதற்கு ஏற்ற இழுவைப் படகுகள் இல்லை என ஒரு காரணம் கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு இரண்டு இலட்சம் டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன், இதுபற்றி கலந்துரையாடியிருந்தார். அப்போது, இதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இலங்கை கடற்படையினர் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை கரைக்கு கொண்டு வருகின்றனர் — காலி, மார்ச் 4, 2026. (படம்: இலங்கை ஜனாதிபதி ஊடக பிரிவு / AP)
அமெரிக்க அழுத்தமே அடிப்படை காரணம்
அதேவேளை இந்தக் கப்பலை இலங்கை கடற்படை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், அதனை இழுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கும் இன்னொரு காரணம் இருக்கிறது.
சம்பந்தப்பட்ட கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என்பதே உள்ள முக்கியமான பிரச்சினை. ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், ஐஆர்ஐஎஸ் டேனா குறிவைக்கப்பட்டது போல, ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலும் கூட எந்த நேரத்திலும் குறிவைக்கப்படலாம்.
அதனால் தான், இந்தக் கப்பலை நெருக்கடிமிக்க கொழும்பு துறைமுகத்திற்குள் கொண்டு வர அரசாங்கம் மறுத்தது. அது ஏனைய கப்பல்களின் வருகையை தடுக்கலாம், குழப்பலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம் இருக்கிறது.
கப்பலை இழுத்துச் செல்வதானால் கூட அதற்கு ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற தரப்புகளுடன் பேசி, பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அதனை செய்யாமல் அரசாங்கத்தினால் கப்பலை திருகோணமலைக்கு நகர்த்துவது ஆபத்தானது. இது தான் இந்த விவகாரத்தில் இழுபறி ஏற்படக் காரணம்.
சடலங்கள் ஈரானுக்கு — மாலுமிகள் இன்னும் தடுப்பில்
அதேவேளை, ஐஆர்ஐஎஸ் டேனா கப்பலில் இருந்து உயிரிழந்த 84 மாலுமிகளின் சடலங்கள் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு, கடந்த 17ஆம் திகதி தெஹ்ரானின் பல்வேறு அரங்குகளில் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தச் சடலங்கள் துருக்கியின் அன்தால்யா விமான நிறுவனத்தின் ஏ340 வாடகை விமானம் மூலமாக, ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 13ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் 84 மாலுமிகளின் சடலங்களுடன் மத்தள விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டது.
அது நேரடியாக ஈரானுக்கு செல்லவில்லை, இந்தியாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து 133 ஈரானிய மாலுமிகளை ஏற்றிக்கொண்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணி அளவில் புறப்பட்டு, ஆர்மேனியாவின் யெரேவான் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து சடலங்களும், மாலுமிகளும், தெஹ்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஐஆர்ஐஎஸ் டேனா கப்பலில் உயிரிழந்த மாலுமிகளின் சடலங்கள் தெஹ்ரானில் பெறப்படுகின்றன — மார்ச் 17, 2026. (படம்: AP / AFP)
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய கடற்படையின் மீளாய்வு அணிவகுப்பில் பங்கேற்ற 3 ஈரானிய கப்பல்களில் ஒன்று, கடந்த மார்ச் 4ஆம் திகதி, இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் புகலிடம் தேடியது. தரையிறங்கு கப்பலான, ஐஆர்ஐஎஸ் லாவனில், 183 மாலுமிகள் இருந்தனர். அவர்களில், கப்பல் குழுவினரான 50 பேர் தவிர, ஏனைய 133 பேரே, வாடகை விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், இதேபோன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட, ஐஆர்ஐஎஸ் புஷேரில் இருந்த ஈரானிய மாலுமிகள் இன்னமும் வெலிசற கடற்படைத் தளத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்த 32 மாலுமிகளையும், ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலில் இருந்த 206 மாலுமிகளையும் அந்த விமானத்தில் கொண்டு செல்வதற்கே ஈரான் விரும்பியது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.
இதுதொடர்பாக, ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் பேச்சுகளை நடத்தியிருந்தார். அப்போது, உயிருடன் உள்ள ஈரானிய மாலுமிகளை உடனடியாக திருப்பி அனுப்ப முடியாதென விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
முதல் கட்டமாக, சடலங்களை ஒப்படைக்கப்படும். அடுத்த கட்டமாக, ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும். மூன்றாவது கட்டமாகவே மாலுமிகளை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி இந்த விடயத்தில், சர்வதேச சட்டங்களுக்கு அமையவே தாங்கள் செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அணிசேரா கொள்கையில் இலங்கை உறுதியாக இல்லை
உடனடியாக ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்புவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்பதே இது தெளிவுபடுத்துகிறது.
ஏனென்றால், இதே சூழலில் இந்தியாவினால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் 133 பேர், தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அவர்களுக்கு பொருந்தக் கூடிய சட்டங்களின் அடிப்படையில், இலங்கையும் இந்த விவகாரத்தைக் கையாள கூடிய சூழல் இருந்தது. ஆனால், இந்தியா அந்த மாலுமிகளை திருப்பி அனுப்பியுள்ள போதும், இலங்கை அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கிறது.
இதற்கு அடிப்படை காரணம் அமெரிக்கா கொடுத்திருக்கின்ற அழுத்தம் மாத்திரமேயாகும். இந்த விடயத்தில் நாங்கள் யாருடைய பக்கமும் இல்லை, யாருக்காகவும் செயற்படவில்லை, யாருடைய அழுத்தங்களின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்கவில்லை என அரசாங்கம் கூறினாலும், அமெரிக்க தரப்பின் அழுத்தங்கள் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அமெரிக்க தரப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே, அரசாங்கம் செயற்படுகிறது. அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொள்ளாமல் செயற்படுவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதனால் தான் ஈரானிய மாலுமிகளை அரசாங்கம் விமானத்தில் அனுப்பி வைக்கவில்லை.
அமெரிக்கா எப்போது கண் காட்டுகிறதோ அப்போதுதான் அவர்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இது, இலங்கை இன்னமும் அணிசேரா கொள்கையில் உறுதியாக இல்லை என்பதை காட்டுகிறது.
0 Comments