elugai

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம்: அமெரிக்காவின் அதிகரிக்கும் கவனம்

இலங்கையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு

இலங்கையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு

கட்டுரையாளர் - ஹரிகரன்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க படைகள் தயார் நிலையில் இருப்பதாக, வெள்ளை மாளிகைக்கு, பென்டகன் அறிக்கை சமர்ப்பித்த காலப்பகுதியில், அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணம் அவசரமானதாக இருக்கவில்லை. ஆனால், அந்த மூன்று நாள் பயணம் அமெரிக்காவுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. பசுபிக் கடற்படைத் தளபதி அண்மைக்காலத்தில் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது.

அட்மிரல் கோஹ்லர் இலங்கை வருகை பெப்ரவரி 2026 அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர் இலங்கையில் — பெப்ரவரி 19-21, 2026. (படம்: Newswire.lk)

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தயார் நிலையில் உள்ள சூழலில், பசுபிக் கடற்படைத் தளபதியின் இந்த பயணம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்கு இலங்கையைத் தளமாக பயன்படுத்துவது குறித்து பேசவே அவர் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார் என்றும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அமெரிக்கா அவ்வாறான ஆதரவை கோரியதாக எந்த ஆதாரபூர்வமான தகவல்களும் இல்லை.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சினை இருந்தாலும் — ஈரானுடனும், அமெரிக்காவுடனும், இலங்கை நெருங்கிய உறவுகளை பேணுகிறது. தற்போதைய அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் மிக கவனமாக உறவுகளை கையாண்டு வருகிறது. சீன சார்பு அரசாங்கம் என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்வதற்கு இந்த இரண்டு நாடுகளுடனும் அதிகபட்ச சகிப்புத்தன்மையுடன் கூடிய உறவுகளை கையாண்டு வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவின் தடைகளுக்கும் மத்தியில், ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதை இன்னமும் இலங்கை நிறுத்தவில்லை. ஏற்கனவே வழங்கிய கடனை, தேயிலை மூலம் திருப்பி செலுத்துவதாக கூறி, இலங்கை அரசாங்கம் இதனை சமாளித்துக் கொண்டிருக்கிறது. ஈரானுடன் டொலரில் வர்த்தகம் செய்ய முடியாது என்பதால், பண்டமாற்று மூலம் கடனை தீர்ப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

அமெரிக்க ஈரான் தடை இலங்கை ஏற்றுமதி ஜனவரி 2026 ஈரானுடன் வர்த்தகம் தொடர்வதால் இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்க கூடுதல் வரி அச்சுறுத்தல் — ஜனவரி 2026. (படம்: Newswire.lk)

இப்படியான சூழலில், அமெரிக்கா இலங்கையிடம் ஒத்துழைப்பு கோரியிருக்குமா என்ற கேள்விகள் இருந்தாலும், அமெரிக்க நிர்வாகம் இத்தகைய அழுத்தங்களை கொடுக்காது என அறுதியாக கூற முடியாது. ஈரான் மீது தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் தளங்கள் இருக்கின்றன. அது தவிர உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போன்ற மிதக்கும் தளங்களை, மத்திய கிழக்கில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.

முன்னர், ஆப்கானிஸ்தான் போர், ஈராக் மீதான படையெடுப்புக்கு போன்றவற்றுக்கு அமெரிக்கா டியாகோகாசியாவில் உள்ள தளத்தை பயன்படுத்தியிருந்தது. டியாகோகாசியா பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட தீவு. அதனை மீண்டும் மொறிசியசிடம் ஒப்படைக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. அந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது திரும்பியிருப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிப்பதற்கில்லை.

ஈரானுக்கும் டியாகோகாசியாவுக்கும் இடையிலான தூரத்தை விட ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான தூரம் குறைவானது. அதற்காக இலங்கையை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக அர்த்தம் கொள்ள முடியாது. ஈரான் மீதான தாக்குதல் எந்தளவுக்கு சாத்தியம் — அது எந்தளவுக்கு விரிவானதாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை. ஆனாலும், ஒரு தற்காப்பு முன்னேற்பாடாக, இலங்கையில் சில வசதிகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா விரும்பியிருக்கலாம். அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது.

ஜனாதிபதி AKD ஈரானிய போர்க்கப்பல் IRIS Bushehr இலங்கை அருகே மார்ச் 2026 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — ஈரானிய கடற்படை கப்பல் IRIS புஷேர் இலங்கை கடற்பரப்பில் தோன்றியதை விளக்கினார் — மார்ச் 5, 2026. (படம்: Newswire.lk)

அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு

ஏற்கனவே, நல்லாட்சி அரசின் காலத்தில் அமெரிக்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகள் ஏற்பட்டு, சில பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளும் செய்து கொள்ளப்பட்டன. 2007இல் கையெழுத்திடப்பட்ட, கையகப்படுத்தல் மற்றும் பரஸ்பர சேவை ஒப்பந்தம் (ACSA) 2017ஆம் ஆண்டு 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டதுடன், அமெரிக்கப் படைகளின் நிலை (SOFA) ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு பேச்சுகள் நடத்தப்பட்டன. அதேவேளை, அரபிக் கடலிலும், இந்திய பெருங்கடலிலும், நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளுக்கான விநியோகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், அத்தகைய விநியோகங்களுக்கு தடைவிதித்தது. தற்போதைய அரசாங்கம் அதனை விட கடுமையான போக்கில் அமெரிக்காவுடன் செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முன்னைய அரசாங்கத்தை விட நெகிழ்வான போக்கையே கையாண்டு வருகிறது. இப்போது அமெரிக்கா இலங்கையை தனக்கு சாதகமான முறையில் வடிவமைக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்து வழிகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்புகளையும் உறவுகளையும் அது வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு நான்காவது ரோந்துக் கப்பல் P628 — பெப்ரவரி 2026 அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு வழங்கிய நான்காவது ரோந்துக் கப்பல் P628 பால்டிமோரில் இருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டது — பெப்ரவரி 21, 2026. (படம்: Newswire.lk)

இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் ஜேன் ஹோவெல் (Jayne Howell), தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அதன் முன்னுரிமைகள் குறித்து அண்மையில் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவை மிகவும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், செழிப்பானதாகவும் மாற்றுவதே வெளியுறவுக் கொள்கையின் முதன்மை நோக்கம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த இலக்கை அடைவதற்கு தம்முடன் ஒத்துழைத்து செயற்படக் கூடிய நாடுகளையும் அதே நிலையில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முற்படுகிறது. அவ்வாறு அமெரிக்கா தனது சிறகுக்குள் வைத்திருக்க விரும்பும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.

ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்தையும், தமது பாதுகாப்புக்கு முக்கியமான பகுதியாக அமெரிக்கா வரையறுத்திருக்கிறது. அண்மையில் தெற்காசியா தொடர்பான, நாடாளுமன்ற துணைக் குழுவின் விசாரணையில் சாட்சியமளித்த, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) இதனை சார்ந்து பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவம் மிகையான ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

"இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பூட்டானை உள்ளடக்கிய தெற்காசியா அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இவர்களின் எல்லைகளையும் நீர்வழிகளையும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் பாதுகாக்க உதவுகிறது. கவனமாக இலக்கு வைக்கப்பட்ட முதலீடு, இந்த அரசுகளுக்கு, துறைமுகங்கள், தொலைத்தொடர்பு வலையமைப்பு மற்றும் எரிசக்தி தளங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு உயர்தரமான வெளிப்படையான, ஆதரவை வழங்க வேண்டும். கடன் பொறி இராஜதந்திரத்தின் ஆபத்துகளைத் தவிர்க்க அவர்களுக்கு இது உதவும். தெற்காசியாவை ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஒரு விரோத சக்தி, உலகப் பொருளாதாரத்தின் மீது வலிந்த செல்வாக்கை செலுத்தக் கூடும். இது நடப்பதை அமெரிக்கா தடுக்க வேண்டும். பிராந்தியத்தை சுதந்திரமாகவும் திறந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். எமது இலக்குகளை அடைய, சுமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். எமது கூட்டாளிகள் மூலோபாய திறனை உருவாக்க உதவ வேண்டும், இதனால் அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும், சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்திற்கு பங்களிக்கவும் முடியும். இதைச் செய்ய தெற்காசிய நாடுகளுடனான எங்கள் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டும்" என்றும் போல் கபூர் கூறியிருந்தார்.

நாடுகளின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் அவற்றின் திறனை அதிகரித்து, அதன் ஊடாக, அமெரிக்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவம் இவரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் மீது அமெரிக்காவின் கவனம் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

கொழும்பு துறைமுகம் கிழக்கு கொள்கலன் முனையம் கொழும்பு துறைமுகம் கிழக்கு கொள்கலன் முனையம் — 2025ல் வரலாறு காணாத சரக்கு அளவை பதிவுசெய்தது. அமெரிக்காவின் மூலோபாய கவனமும் இத்துறைமுகத்தை மையப்படுத்துகிறது. (படம்: Newswire.lk)

அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வர்த்தகத்தை பாதுகாப்பாக விரிவுபடுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தார். அத்துடன் தற்போது இந்தியாவின் மசாகோன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கின்ற கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துடனான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அவர் நேரில் ஆராய்ந்திருந்தார். இது தனியே வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல. கொழும்பு டொக்யார்ட் கப்பல்களை பழுதுபார்க்கும் வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா தனது கப்பல்களை பழுதுபார்ப்பதற்கான ஒரு வசதியை ஏற்படுத்துவது குறித்து ஆராய்கிறதா என்ற கேள்வியை அட்மிரல் கோஹ்லரின் கொழும்பு டொக்யார்ட் பயணம் எழுப்ப வைத்திருக்கிறது.

அதேவேளை, இந்திய பெருங்கடலின் வழியாக இடம்பெறும் வர்த்தகத்தை ஒழுங்கமைப்பதும், அதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அமெரிக்காவின் இன்றைய முன்னுரிமைக்குரிய விடயங்களாக உள்ளன. இந்த பாதை அமைதியாகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதன் மூலம் அமெரிக்கா தனது செழிப்பை உறுதிப்படுத்த முனைகிறது. அமெரிக்காவின் செழிப்பு என்பது இப்போது அந்த நாட்டின் எல்லைப் பரப்புக்குள் மாத்திரம் இல்லை என்று அமெரிக்க இராஜதந்திரிகள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள்.

அமெரிக்க எல்லைக்குள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முதன்மையானது. அதற்கு அடுத்து அதன் வர்த்தகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்து அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் உறுதித் தன்மையும் பாதுகாப்பும் செழிப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே அமெரிக்கா தனது பாதுகாப்பையும் செழிப்பையும் வலிமையையும், உறுதியாக நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் இப்பொழுது அதை நோக்கியே அமெரிக்காவை தயார்படுத்துகிறார்கள். அதனால் தான் அவர்கள் இந்திய பெருங்கடலில் இலங்கை போன்ற நாடுகளை தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க முற்படுகிறார்கள்.

அமெரிக்கா இலங்கை விமானப்படைக்கு King Air விமானம் வழங்கியது அக்டோபர் 2024 அட்மிரல் கோஹ்லர் இலங்கை விமானப்படைக்கு Beechcraft King Air 360ER கண்காணிப்பு விமானத்தை கையளித்தார் — அக்டோபர் 10, 2024. (படம்: Newswire.lk)

இலங்கையை தளமாக்குவதற்கு பதிலாக இலங்கையை வலுவாக்க அவர்கள் முற்படுகிறார்கள். இதன் ஊடாக பிராந்தியத்திலும் இலங்கையை சுற்றிய கடற்பகுதியிலும், இலங்கையை கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா முற்படுகிறது. இது இலங்கைக்கு பலனளிக்கிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்கு நன்மையளிக்கும். இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள நான்காவது ரோந்துக் கப்பலும் சரி, 10 ஹெலிகாப்டர்களும் சரி, இதற்கான முதலீடுகள் தான். அமெரிக்கா இன்னொரு நாட்டுக்கு எதையாவது கொடுக்கிறது என்றால், ஏதோ ஒரு இலாபம் அல்லது நலன் அதற்கு இருக்கிறது என்று பொருள், இலங்கையும் அதற்கு விதிவிலக்கானது அல்ல.

இலங்கையிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பது இப்போதைக்கு ஒரு தளமாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான பாதுகாப்பு நலன்களை அடைவதற்கு முற்படுகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Post a Comment

0 Comments