இலங்கையின் வாசலை தட்டிய போர்
ஈரான் மீதான போர், இவ்வளவு விரைவாக இலங்கையின் வாசலைத் தட்டும் என, யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இலங்கைக்கு அருகே, ஈரானிய போர்க்கப்பலை குறிவைத்தல் மூலம், அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலும் ஒரு போர்முனையை திறந்து விட்டிருக்கிறது.
ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற அதி நவீன போர்க்கப்பல், கடந்த 4ஆம் திகதி அதிகாலையில், அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட, எம்.கே-48 (Mark 48) டோர்பிடோவினால் மூழ்கடிக்கப்பட்டது. (சில ஊடகங்கள் IRIS Dena என்பதனை இரிஸ் டேனா என குறிப்பிடுகின்றன. இது தவறு. IRIS என்பது இரிஸ் அல்ல, ஈரானிய இஸ்லாமிய குடியரசு கப்பல் என்பதன் சுருக்கமே அது)
ஈஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் — மார்ச் 4, 2026. (படம்: Newswire.lk)
அதிகாலை 5.08 மணியளவில், கடலில் சடலங்கள் மிதப்பதாக மட்டுமே தமக்கு முதலில் தகவல் கிடைத்தது என, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்திருந்தார். உடனடியாக விமானப்படையின் பீச் கிராஃப்ட் விமானம் அனுப்பப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்ட போது, கப்பலின் எந்த எச்சமும் அங்கு காணப்பட்டிருக்கவில்லை. அது முற்றாக மூழ்கி போயிருந்தது. எண்ணெய் படலம் மட்டுமே சம்பவ இடத்தை அடையாளப்படுத்துவதற்கான தடயமாக காணப்பட்டது.
உயிர்காப்பு படகுகளில் சிலர் தத்தளித்துக் கொண்டிருந்தனர், சிலர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர், பலரது சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. உடனடியாக விரைந்த இலங்கை கடற்படைப் படகுகள் முதலில் உயிர்தப்பிய — காயமடைந்திருந்தவர்களை மீட்டு கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. அதையடுத்து சடலங்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டது.
90 சடலங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை ஒப்படைக்குமாறு ஈரான் அதிகாரபூர்வமாக கேட்டிருக்கின்றது. ஆனால் உடனடியாக அவற்றை ஒப்படைப்பதற்கான பொறிமுறைகள் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
IRIS டேனா மூழ்கிய பின்னர் இலங்கை கடற்படை முகாமிலிருந்து ஆம்புலன்ஸ் வெளியேறுகிறது — காலி, மார்ச் 4, 2026. (படம்: Al Jazeera / Reuters / Thilina Kaluthotage)
இலங்கைக் கடற்பரப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, முதலில் தகவல்கள் வெளியான போதும், அது இலங்கைக் கடல் எல்லைக்குள் நடக்கவில்லை என, கடற்படையும், அரசாங்கமும் கூறியிருக்கின்றன. இலங்கையின் கடல் எல்லை — கரையில் இருந்து 12 கடல் மைல்கள் தொலைவு வரை மட்டுமேயாகும். அதற்கு அப்பால் 200 கடல் மைல்கள் வரையான தூரம் பொருளாதார கடல் எல்லையே தவிர, இலங்கைக்கு உரித்தான கடற்பகுதியல்ல. அங்கு மீன்பிடிப்பதற்கான உரிமை மட்டும் இலங்கைக்கு உள்ளது.
காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது 19 கடல் மைல்கள் தொலைவில் தான், இந்த சம்பவம் இடம்பெற்றதாக அரசாங்கம் உறுதி செய்திருக்கிறது. இந்தியக் கடற்படை, காலியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறது. இது ஒன்றும் மிகப்பெரிய தொலைவு அல்ல.
சுமார் 95 மீட்டர் நீளமான — 1500 தொன் எடை கொண்ட ஈரானிய போர்க்கப்பலில் 180 மாலுமிகள் பணியாற்றினர். அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டு விட்டனர்.
கப்பல் ஏன் இலங்கைக்கு அருகே இருந்தது?
விசாகப்பட்டினத்தில் நடந்த மிலன் -2026 கூட்டுப் பயிற்சி மற்றும் சர்வதேச கடற்படை மீளாய்வில் பங்கேற்பதற்காக, ஈரானில் இருந்து ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பல் வந்திருந்தது. பெப்ரவரி 26ஆம் திகதி கூட்டுப் பயிற்சி முடிந்த நிலையில், இலங்கையில் தரித்துச் செல்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டது. அப்போது 3 போர்க்கப்பல்களை, துறைமுகத்திற்கு, ஒத்துழைப்பு வருகையாக, அனுப்புவதற்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சு, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியது.
அப்போது, ஈரானில் போர் தொடங்கவில்லை. ஆனாலும் உடனடியாக அரசாங்கம் அதற்கு பதில் அளிக்கவில்லை. அதை ஆராய்ந்த போது ஈரானியக் கப்பல்கள், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் காணப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியிருக்கிறார். ஒத்துழைப்பு வருகைக்கான அணுகுமுறை அதுவல்ல என்றும், அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், போர் தொடங்கியதால், அதனுடன் தொடர்புடைய ஒரு தரப்புக்கு அனுமதி கொடுப்பது முறையல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.
IRIS டேனாவில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் கராப்பிட்டிய வைத்தியசாலை நீதி மருத்துவ அதிகாரியிடம் அழைத்து செல்லப்படுகின்றனர் — மார்ச் 5, 2026. (படம்: Al Jazeera / Chamila Karunarathne / EPA)
இந்த நிலையில், ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்க ஈரான் உதவி கோரியது. அந்த உதவி வழங்கப்பட்டு, கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரானிய கப்பல்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் — காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரான் ஐஆர்ஐஎஸ் டேனா தரித்து நின்ற போதே, அமெரிக்க நீர்மூழ்கி தாக்கியழித்திருக்கிறது. எச்சரிக்கை எதையும் வழங்காமலேயே அமெரிக்க நீர்மூழ்கி தாக்கியதாகவும், இதன் மூலம் அமெரிக்கா விபரீதமான விளைவுகளை எதிர்கொள்ளும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட, ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை. கிட்டத்தட்ட 36 மணித்தியாலங்களின் பின்னர், கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்லவும், அதிலிருந்த 208 பேரையும் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கவும் அரசாங்கம் தீர்மானித்தது. இந்த விவகாரத்தில் பல இரகசியங்கள் மறைந்துள்ளதால், இதுபற்றி இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக பல விடயங்களை கூற தயங்குகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட IRIS டேனா டோர்பிடோ தாக்குதல் காணொளி — மார்ச் 4, 2026. (படம்: Newswire.lk)
இந்தியாவில் அழைப்பின் பேரில் வந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஈரானிய போர்க்கப்பல்கள் மாத்திரமல்ல, ஏனைய நாடுகளின் போர்க்கப்பல்களும் கூட வருகை தருவதற்கு தயங்க கூடும்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய நீர்மூழ்கி எதுவென்று இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதில் 3 அவுஸ்திரேலிய கடற்படையினர் இருந்தனர் என்பதை, அவுஸ்திரேலியப் பிரதமர் உறுதி செய்திருக்கிறார். எம்.கே-48 ரக டோர்பிடோ தான் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிடம் உள்ள மூன்று வகையான நீர்மூழ்கிகளிலும், இதனை பயன்படுத்த முடியும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க IRIS புஷேர் கப்பல் தொடர்பான சிறப்பு செய்தியாளர் சந்திப்பு — மார்ச் 5, 2026. (படம்: Newswire.lk)
இந்தச் சம்பவம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. உடனடியாக இலங்கைக் கடற்படையும், விமானப்படையும் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் — சர்வதேச உடன்பாடுகளுக்கு அமைய இலங்கை செயற்பட்டிருந்தாலும் — அமெரிக்காவுடனான அண்மைக்கால பாதுகாப்பு கூட்டு தொடர்பாக, அதிகம் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஈரான் போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக, அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு சூழல் குறித்தும் கலந்தாலோசனை நடத்தியிருந்தார். ஈரான் மீதான தாக்குதலுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே, அமெரிக்க பசுபிக் தளபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டாரா என்ற சந்தேகங்களும் முன்னர் எழுப்பப்பட்டிருந்தன.
அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் இலங்கை பயணம் — ஈரான் மீது போர் தொடங்குவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர் — பெப்ரவரி 19, 2026. (படம்: Newswire.lk)
அவர் இலங்கைப் பயணத்தை முடித்து சரியாக 12 நாட்களில், ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை — அமெரிக்க உறவுகள் விடயத்தில், வெளிப்படைத்தன்மை தொடர்பாக சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது.
அமெரிக்கா நிகழ்த்தியுள்ள இந்த தாக்குதல், இந்திய பெருங்கடலில் அமைதியைக் குலைத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில், அமைதியான பாதுகாப்பான வெளிப்படையான கப்பல் பாதையை உறுதி செய்வதே தமது கொள்கை எனக் கூறி வந்த அமெரிக்காவே இன்று அதனை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் பேச்சுகளை நடத்துகின்ற போது — அமைதியான பாதுகாப்பான வெளிப்படையான கப்பல் பாதை பற்றிய வாக்குறுதியையே எதிர்பார்த்தது. அதையே தனது கொள்கையாகவும் நிலை நிறுத்தி வந்தது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில வாரங்கள் முன்னதாக, சீனாவில் இருந்து ஈரானுக்கு ஏவுகணை தயாரிப்புக்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணித்த சரக்கு கப்பல் ஒன்றை — இலங்கைக்கு அருகேயுள்ள கடற்பகுதியில் அமெரிக்க கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். ஏவுகணை தயாரிப்புக்கான பெருமளவு கருவிகள் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டு, அந்தக் கப்பலைத் தொடர்ந்து பயணிக்க அமெரிக்க கடற்படை அனுமதியளித்திருந்தது. இது இந்தியப் பெருங்கடலின் அமைதி குலையத் தொடங்கியதற்கான ஆரம்ப அறிகுறி தான்.
இந்தச் சம்பவங்களில், இலங்கையின் பங்களிப்பு என்ன என்ற கேள்விகளும் உள்ளன. இலங்கை தவிர்க்க முடியாதபடி அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களும், கண்காணிப்பு விமானங்களும், ஹெலிகாப்டர்களும், இலங்கையின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டவை அல்ல. அவை அமெரிக்காவின் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இலங்கைக்கு வழங்கப்பட்டவை என்பது நிரூபணமாகி வருகிறது.
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஒரு போர்முனையை திறந்திருப்பது, இலங்கை ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. போருக்கு அப்பாற்பட்ட ஒரு தரப்பாக — இலங்கை தன்னைக் காட்டிக் கொண்டு வந்தது. ஆனால் இலங்கையின் நடுநிலை ஏற்கனவே கேள்விக்குள்ளாகி விட்ட நிலையில் — போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், இன்னமும் கேள்விகள் அதிகரித்திருக்கின்றன.
ஈரான் மீதான போர் ஒரு வலிந்த நடவடிக்கை தான். தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அது நியாயப்படுத்தும் விதம் கவனிக்கத்தக்கது. இது ஈரானுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல, எதிர்காலத்தில் இலங்கைக்கு கூட இவ்வாறான அச்சுறுத்தல்கள் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
0 Comments