elugai

அரச புலனாய்வு ‘மூளை’யின் கதி: சுரேஷ் சாலேயின் கைது சொல்லும் திடுக்கிடும் உண்மைகள்!

அரச புலனாய்வு 'மூளை'யின் கதி

அரச புலனாய்வு 'மூளை'யின் கதி

கட்டுரையாளர் - சுபத்ரா

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பேலியகொடவில், அவர் தற்போது பணியாற்றும் சிந்தனைக் குழுவொன்றுக்கு பெப்ரவரி 25ஆம் திகதி காலை, 7.50 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர்.

சுரேஷ் சாலே கைது பெப்ரவரி 2026 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலே — கைது செய்யப்பட்டது பெப்ரவரி 25, 2026. (படம்: Newswire.lk)

குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் உத்தரவு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பல குழுக்களால் சோதனையிடப்பட்டது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி மோசடி குறித்த குற்றச்சாட்டுகள், எரிவாயு நெருக்கடி, மகா சங்கத்தின் அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு அதிகரித்துள்ள சூழலில் — இந்த கைது நடவடிக்கை இன்னும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையில் கூட, இந்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவோ, பிரதான சூத்திரதாரி கண்டறியப்படவோ, குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவோ இல்லை. இந்த விசாரணைகளை முடிக்க முடியாமல் இருப்பது, அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது.

அண்மைக்காலங்களில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் சிக்கலாக இருப்பதாகவும், சாட்சியங்கள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதால், புலனாய்வாளர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் கூறியிருந்தார்.

நெகோம்போ செபாஸ்டியன் ஆலயம் ஈஸ்டர் தாக்குதல் 2019 நெகோம்போவில் செபாஸ்டியன் ஆலயத்தை தாக்குதலுக்குப் பின்னர் ஆய்வு செய்யும் இலங்கை அதிகாரிகள் — ஏப்ரல் 21, 2019. (படம்: Al Jazeera / Getty Images)

எவ்வாறாயினும், ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களை சந்தித்த போது, கூடிய விரைவில் இராணுவ உயர் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். அதையடுத்து உயர்மட்ட கைதுகள் நடக்கவுள்ளதாக ஊகங்கள் நிலவினாலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைது மிகவும் தாமதமாகவே இடம்பெற்றிருக்கிறது. இந்த கைது முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்தார் என்றும், ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில், குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், முழுக்க முழுக்க அந்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், சனல் 4 வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெறுவதானால், அது ஜனாதிபதி அனுரகுமார ஆட்சிக்கு வந்தவுடன் அல்லது சில மாதங்களுக்குப் பின்னர் நடந்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம், கடந்த அக்டோபர் மாதத்திலாவது நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மிகவும் மெதுவாகவே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி AKD நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் புலனாய்வு நவம்பர் 2025 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு தடைகளை விளக்கினார் — நவம்பர் 18, 2025. (படம்: Newswire.lk)

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், ஊடகங்களிடம் பொலிஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இந்தக் கைது, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களில் ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களுக்கு முண்டு கொடுக்கும் சிங்களத் தேசியவாத தரப்பினர் முக்கியமானவர்கள். ஏனென்றால், அவர்களுக்கு மிகவும் நெருக்கமான-நம்பிக்கையான இராணுவ அதிகாரிகளில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முதன்மையானவர். மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் இராணுவ சாதனை வரலாறு, அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும், கவசமாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

சாலேயின் இராணுவ சாதனைகள்

இராணுவப் புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலே, விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் புலிகளின் முக்கியமான பல இலக்குகளை அழிப்பதற்கு காரணமாக இருந்தவர். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கியமான ஒரு பிரிவான, இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக இருந்தவர் பிரிகேடியர் சுரேஷ் சாலே. போர்க்காலத்தில் இராணுவத்தின் விசேட படைப்பிரிவு மற்றும் ஆழ ஊடுருவும் அணி போன்றவற்றை கையாண்ட பிரிவு தான் இது. விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை வழிநடத்தியவர்.

இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் மீளவும் தலையெடுக்க முடியாதளவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எடுக்கப்பட்ட இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். மலேசியாவில் கேபி எனப்படும், குமரன் பத்மநாதனை, கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்து சேர்ந்தவர். புலனாய்வு வித்தைகளை கையாண்டு இலங்கை இராணுவத்திற்கும், அரசாங்கத்துக்கும் வரலாற்று வெற்றிகளை தேடிக் கொடுத்தவர். அப்படிப்பட்டவர், இப்படியானதொரு குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதை பலரால் நம்ப முடியவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தில் இருந்து நீக்கப்பட்டு, மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த போது புதுடெல்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கைநெறிக்காக இணைந்திருந்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து மூன்று வாரங்களிலேயே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அரச புலனாய்வு சேவையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ அதிகாரி இவர் தான். இந்த நியமனம் அப்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரச புலனாய்வு சேவை இராணுவ மயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பிறகும் கூட அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சில நாட்களுக்கு பின்னர், அரச புலனாய்வு சேவை தலைவர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே நீக்கப்பட்டார்.

சனல் 4 ஆவணப்படம் CID விசாரணை பிள்ளையான் நவம்பர் 2024 சனல் 4 ஆவணப்படத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக CID விசாரணை; பிள்ளையான் CIDக்கு அழைக்கப்பட்டார் — நவம்பர் 11, 2024. (படம்: Newswire.lk)

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி முன்னர் வெளியான குற்றச்சாட்டுகளை நிராகரித்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இப்போது கைது செய்யப்பட்டிருப்பது, இந்த சம்பவங்களுடன் அவருக்கு உள்ள தொடர்புகள், ஏதோ ஒரு வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத இடமளிக்கிறது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, கைது செய்து சிறையில் அடைப்பது அரசாங்கத்துக்கும், தமக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரியாத விடயம் அல்ல. இது அரச படையினரை பழிவாங்குவதாக எடுத்துக் கொள்ளப்படும் ஆபத்து இருப்பதால், மிகக் கவனமாகவே இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டிருக்கும். இவரது கைது நடவடிக்கை பல மாதங்கள் தாமதமாகவே இடம்பெற்றிருப்பதால், கூடுதல் ஆதாரங்களை குற்றப் புலனாய்வு பிரிவு திரட்டியிருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ராஜபக்ஷவினரை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக இராணுவப் புலனாய்வு பிரிவின் ஒரு மூத்த அதிகாரியே சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு பாரதூரமான ஒன்று. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது தனியே மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்காது. ஒட்டுமொத்த இராணுவப் புலனாய்வு பிரிவையும் அரச பாதுகாப்பு கட்டமைப்புகளையும் கூட, புரட்டிப் போடும்.

மகிந்த ராஜபக்ஷ சுரேஷ் சாலே கைது தொடர்பாக கருத்து மார்ச் 2026 "நான் காரணம் அறியேன். ஆனால் காரணம் இருக்கும்" — சுரேஷ் சாலே கைது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ கருத்து — மார்ச் 3, 2026. (படம்: Newswire.lk)

சுரேஷ் சாலேயின் கைது அரசாங்கத்துக்கு ஒரு பக்கம் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் அதற்குள்ள நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான வழியாகவும் இருக்கும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்புபட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால், அது ஒரு பாரதூரமான இராணுவச் சூழ்ச்சியாக இருக்கும்.

1962ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, ஒரு இராணுவ புரட்சிக்கு திட்டமிடப்பட்டு, ஆரம்பத்திலேயே தோல்வியை தழுவியது.

அதற்குப் பின்னர், 1966ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க அரசைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு பல படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்ற விசாரணைகளில் அதனை நிரூபிக்க முடியாமல் போனது.

2010 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், சரத் பொன்சேகா அதிகாரத்தைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இந்த இராணுவப் புரட்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

ஆனால், ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், இராணுவ பின்புலத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என நிரூபிக்கப்பட்டதால், மறைமுக இராணுவ ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தால், ஒட்டுமொத்த இராணுவமும், இதற்குப் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

2023 ஆம் ஆண்டு ஜூன் 19, 20 ஆம் திகதிகளில் நடந்த, ஐ.நாவின் மூன்றாவது உயர்மட்ட தீவிரவாத முறியடிப்பு மாநாட்டில், அரச புலனாய்வு சேவையின் தலைவராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பங்கேற்றிருந்தார்.

அங்கு உரையாற்றிய போது, "21ஆம் நூற்றாண்டில் சர்வதேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது, இது உறுதித்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, சமூக நம்பிக்கையை பாதிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் அமைதியை சீர்குலைக்கிறது. அப்பாவி உயிர்களையும் சமூகங்களையும் பாதிக்கும் கொடூரமான வன்முறைச் செயல்களை நாம் கண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே.

அரச புலனாய்வு சேவையின் தலைவராக அப்போது அவர் இதனை கூறியிருந்தாலும், இதனை கூறுவதற்கு தகுதியான ஒருவராக அவர் இருந்தாரா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ஏனென்றால், ஒரு தீவிரவாத நடவடிக்கைக்கு அவர் ஏதோ ஒரு வகையில் உதவியிருப்பது நிரூபிக்கப்படுமேயானால், அது அவரது ஒட்டுமொத்த புலனாய்வு செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்தும்.

இலங்கையில் தீவிரவாதத்தை அழிப்பதற்கு பங்களித்ததாக உரிமை கோரிய ஒருவரே, அதே தீவிரவாதத்திற்கு ஊக்கமளித்தவராக கைது செய்யப்பட்டிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.

சுரேஷ் சாலே மூன்றாவது குற்றவாளி நீதிமன்றம் மார்ச் 2026 மார்ச் 5, 2026 — CID கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சாலேயை ஈஸ்டர் விசாரணையில் மூன்றாவது குற்றவாளியாக பெயரிட்டது; 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். (படம்: Newswire.lk)
அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டது இதுதான் முதல்முறையா அல்லது விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போதும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாரா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும்.

விடுதலைப் புலிகள் மீது சர்வதேச கோபத்தை தூண்டிய, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டிய பல தாக்குதல்களை இடம்பெற்றிருந்தன.

அத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால், இதுபோன்ற தொடர்புகள் இருந்திருக்காது என்ற கேள்வி கூட, எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால், போரில் வெற்றியீட்டுவதற்காக புலனாய்வு அமைப்புகள், இப்படிப் பல தந்திரங்களைக் கையாளுவது ஒன்றும் புதிதில்லை.

Post a Comment

0 Comments