elugai

மாற்றம் காணும் இராணுவ அணிவகுப்பு: இலங்கை எந்த வழியில் செல்ல முற்படுகிறது?

மாற்றம் காணும் இராணுவ அணிவகுப்பு

மாற்றம் காணும் இராணுவ அணிவகுப்பு

கட்டுரையாளர்: சுபத்ரா

இலங்கையின் 78வது சுதந்திர தினம் கடந்த 4ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது, வடக்கிலும் கிழக்கிலும் கரிநாளாக கடைப்பிடிக்கப்பட்டு, எதிர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த எதிர்ப்புப் பேரணிகளுக்கு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. கடந்த காலங்களிலும் இவ்வாறான கரிநாள் பேரணிகள் இடம் பெற்றிருந்தாலும், இம்முறை தெற்கின் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழர் கரிநாள் போராட்டம்
வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தன்று கரிநாளாக கடைப்பிடித்த தமிழர்கள்

அதேபோல, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு, சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது சுதந்திர தின நிகழ்வு இது.

இலங்கை சுதந்திர தின அணிவகுப்பு
இலங்கையின் 78வது சுதந்திர தின இராணுவ அணிவகுப்பு

செலவுகள் குறித்த விவாதம்

2004 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில், சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 107 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. அதனை வீண் செலவு என விமர்சித்த என்பிபி அரசாங்கம், செலவை குறைப்பதாக கூறி கடந்த ஆண்டு 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது. அதிலும் மிச்சப்படுத்தப்பட்டு, 67 மில்லியன் ரூபா மட்டுமே செலவானதாக அரசாங்கம் கூறியிருந்தது. இந்த ஆண்டில் சுதந்திர தின நிகழ்வுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதும் - கடந்த ஆண்டு போலவே செலவுகள் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு செலவு ஏற்பட்டது என்று இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் அதிக செலவினங்களை கொண்டதாக அல்லது அதிகளவு செலவை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை உள்ளடக்கியதாக இருந்திருக்கவில்லை. இதுதான் இந்த சர்ச்சைக்கு பிரதான காரணம்.

இராணுவத்துக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதா?

குறிப்பாக சுதந்திர தின பேரணியில் இலங்கைப் படையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை குற்றம்சாட்டுகின்ற வாய்ப்பாக, இதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுகின்றன. ஒவ்வொரு இராணுவப் படையணியும் ஜனாதிபதியை கடந்து செல்லுகின்ற போது அவற்றின் சாதனைகளை பட்டியலிடுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யப்படவில்லை, பேரிடரில் உணவுப் பொதிகள் விநியோகித்தது பற்றிய பெருமைகள் மட்டும் பேசப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அத்துடன், போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காட்சிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், போரில் பெரும் தியாகங்களை செய்த, வீரத்தை வெளிப்படுத்திய படையினருக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாக, அவர்களை அரசாங்கம் ஓரம்கட்டுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் பெற்றே முன்னெடுக்கப்படும் நிலையில், கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும், அதனைத் தவிர்ப்பதன் மூலம், அரசாங்கம் பாரிய உயிர்த் தியாகத்தால் ஈட்டப்பட்ட போர் வெற்றியை சிறுமைப்படுத்துவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசநாயக்க கூறியிருக்கிறார்.

போர் வெற்றி மனோபாவம்

இலங்கை படையினரிடம் உள்ள ஆயுத தளபாடங்களை காட்சிப்படுத்துவதன் மூலமாக, போர் வெற்றியை பெருமைப்படுத்தலாம் என்ற மனோநிலையிலேயே எதிர்க்கட்சியினர் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்னமும் போர் வெற்றி மனோபாவத்தில் இருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் ஒரு போரில் இராணுவ வெற்றி நிரந்தரமானது அல்ல. நிலையான அமைதியை ஏற்படுத்துவதன் மூலமே அதனை நிரந்தரமானதாக்க முடியும்.

2009 ஆம் ஆண்டு, இலங்கைப் படையினர் போரில் ஈட்டிய வெற்றியை உறுதி செய்ய வேண்டுமானால், நிரந்தரமான அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நிலையான அமைதியை கொண்டு வருவதில் தோல்வியடைந்து விட்டது. அதனால் தான் சுதந்திர தினத்தன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கரிநாளாக பேரணி நடத்துகின்ற நிலை ஏற்பட்டது.

நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாத, போரின் வெற்றியை இராணுவ அணிவகுப்பின் மூலம் பெருமைப்படுத்தலாம் என்ற தவறான கற்பிதம் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இருப்பதே, நிலையான அமைதிக்கு உள்ள முக்கிய தடைகளில் ஒன்றாகும். சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்தின் டாங்குகள், பீரங்கிகள், ஏனைய போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம், இராணுவத்தினரை பெருமைப்படுத்தலாம் என நம்பிக் கொண்டிருப்பது அவர்களின் முட்டாள்தனம்.

சீனா இராணுவ அணிவகுப்பு
சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

உலக நாடுகளின் இராணுவ அணிவகுப்புகள்

அதேவேளை பல நாடுகள் தங்களின் தேசிய தினம் அல்லது சுதந்திர தினம் அல்லது போர்வெற்றி நாள் போன்றவற்றில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்புகளை நடத்துவது வழமை. இலங்கையும் கடந்த காலங்களில் அவ்வாறான அணிவகுப்புகளை நடத்தி வந்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று இவ்வாறான அணிவகுப்பு இடம்பெறும்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தினால் போர் வெற்றி நாள் கொண்டாடப்பட்டது. அதற்காக பெருமளவில் இராணுவ வளங்கள் கொழும்பில் ஒன்று குவிக்கப்பட்டு, பிரம்மாண்டமான அணிவகுப்பு, போர்த்தளபாடங்களின் காட்சிப்படுத்தல் இடம்பெற்று வந்தது. அது தமிழ் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை தோற்றுவித்தது. நல்லாட்சி அரசின் காலத்தில், போர் வெற்றி விழா போர் வீரர்கள் நாளாக மாற்றப்பட்டது.

தற்போது, அது குறைந்தளவு முக்கியத்துவத்துடன் இடம்பெற்றாலும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நடந்த தேசிய போர் வீரர்கள் நாள் நிகழ்வை தவிர்க்க முனைந்த போதும், விமர்சனங்கள், அழுத்தங்களை அடுத்து அதில் பங்கேற்றிருந்தார். அதன் மூலம் படையினரை கௌரவிப்பதில் ஏனைய தலைவர்களுடன் தாமும் சமமாக நிலையில் இருப்பதாக உறுதிப்படுத்தினார். அதேவேளை, இம்முறை சுதந்திர தின விழாவில் போர்த்தளபாடங்கள் காட்சிப்படுத்தப்படாதமைக்கு, புதிய கலாசாரம் ஒன்றை உருவாக்கும் முயற்சி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சீனா, வடகொரியா, ரஷ்யா மாதிரி

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றி நாள் கொண்டாட்டத்தில், மிகப் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு தியனன்மென் சதுக்கத்தில் இடம் பெறும். அதில் சீனாவின் அதிநவீன போர்த்தளபாடங்கள், ஆயுதங்கள், இடம்பெறுவது வழக்கம். சீனா புதிதாக எந்த ஆயுதத்தை கண்டுபிடித்திருக்கிறது எனக் கண்டறிவதற்கு இந்த அணிவகுப்பை மேற்குலக புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பது வழக்கம்.

வடகொரியாவும் அதேபோல தங்களின் பிரம்மாண்டமான இராணுவ அணிவகுப்பில் ஏவுகணைகளையும், போர்த்தளபாடங்களையும் காட்சிப்படுத்தி உலகத்தை பிரமிக்க செய்து வருகிறது. ரஷ்யாவிலும் பிரம்மாண்டமான இராணுவ மற்றும் போர்த் தளபாட அணிவகுப்பு இடம் பெறுவது வழக்கம். பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளிலும் சுதந்திர தினம், அல்லது குடியரசு தினம் போன்றவற்றின் போது பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இது ஒரு வகையில் நாட்டின் படை பலத்தை வெளிப்படுத்துவதற்கான உத்தியாக மட்டுமின்றி, எதிரி நாடுகளை அச்சம் கொள்ள வைப்பதற்கான ஒரு உத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்துவதும், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிகளை காட்சிப்படுத்துவதும், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை அச்சமூட்டுவதற்கான ஒரு உத்தியாகத் தான் பயன்படுத்துகிறது. அப்படிப் பார்த்தால், இராணுவ அணிவகுப்புகளின் மூலம், இலங்கை யாரை அச்சுறுத்த விரும்புகிறது?

முன்னர் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளுடன் போரிட்ட போது, அவர்களை அச்சுறுத்துவதற்காக- உளவியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்காக மாத்திரமன்றி - அரச படையினரையும் சிங்கள மக்களையும் உற்சாகமூட்டுவதற்கும் இத்தகைய பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புகளை அரசாங்கம் நடத்தியது. ஆனால் இப்போது, விடுதலைப்புலிகள் இல்லை, போரும் இல்லை, எனவே இலங்கைக்கு இந்த அணிவகுப்பு அவசியமற்றது.

அமெரிக்கா இராணுவ அணிவகுப்பு
வாஷிங்டனில் நடந்த அமெரிக்க இராணுவத்தின் 250வது ஆண்டு விழா அணிவகுப்பு

அமெரிக்க பாணி

உலகில் எல்லா நாடுகளும் தங்களின் படை பலத்தை காட்சிப்படுத்தும் இராணுவ மற்றும் போர்த்தளபாட அணிவகுப்புகளை நடத்துவதில்லை. குறிப்பாக, அமெரிக்கா தேசிய தினம் உள்ளிட்ட நிகழ்வுகளில் தனது படைபலத்தை காட்டுவதில்லை. டாங்குகளையோ, கவச வாகனங்களையோ, ஆட்டிலறிகள், ஏவுகணைகளையோ அல்லது போர்க்கப்பல்களையோ, விமானங்களையோ அணிவகுப்பில் கொண்டு செல்வதில்லை.

கடந்த 2025 ஜூன் 14ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாஷிங்டனில் பாரிய இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. 1991 வளைகுடா போர் வெற்றிக்குப் பின்னர் வாஷிங்டனில் நடத்தப்பட்ட முதலாவது தேசிய இராணுவ அணிவகுப்பு இது தான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்னரே இது நடத்தப்பட்டது. அந்த அணிவகுப்பில் கூட, 6,600 படையினரும், 150 டாங்குகள், பீரங்கிகள் போன்ற இராணுவ வாகனங்களும், 50 விமானங்களுமே பங்கேற்றிருந்தன.

ஆனால், இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில், முப்படைகள், பொலிசாரை உள்ளடக்கியதாக 4,602 படையினர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தேசிய தினத்தன்று, படையினரின் வாத்திய அணிகள் பங்கேற்கும் சாதாரண அணிவகுப்பே இடம்பெறும். கிட்டத்தட்ட அதே பாணியிலான அணுகுமுறையை தான் இப்போது இலங்கையும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை எந்த வழியில் செல்கிறது?

ராஜபக்ஷவினரின் காலத்தில் இருந்து சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை பின்பற்றி பிரமாண்ட இராணுவ மற்றும் போர்த்தளபாட அணிவகுப்பை நடத்தி வந்த இலங்கையை, சீன முகாமை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலேயே, அமெரிக்க பாணியை பின்பற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இப்போது இலங்கை எந்த வழியில் செல்ல முற்படுகிறது?

Post a Comment

0 Comments