elugai

கௌரி லங்கேஷ்: தோற்கடிக்க முடியாத துணிச்சலின் அடையாளம்!

கௌரி லங்கேஷ்: ஊடக உலகின் அறிவுப் பெட்டகம்!

கௌரி லங்கேஷ்: ஊடக உலகின் அறிவுப் பெட்டகம்!

இன்று கௌரியின் பிறந்தநாள்.. அவரை அவசியம் நினைவுகூர வேண்டிய நாள்!

நான் உயிருக்கு உயிராக நேசிக்கும், என் பத்திரிகைத் துறை சார்ந்த பெண் போராளி! பெங்களூரில் சொந்தமாகவே ஒரு பத்திரிகையை நடத்தி வந்தவர். மிகச் சிறந்த இலக்கியவாதி.. 55 வயது அறிவுப் பெட்டகம்!

தன்னுடைய அப்பா லங்கேஷ் போலவே, இவரும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்பெண் கௌரி நினைத்திருந்தால், வசதியான, வளமான வாழ்வு வாழ்ந்திருக்கலாம். ஆனால், அநீதிக்கு எதிராகப் போராடும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். அதற்குப் பக்கபலமாகப் பத்திரிகையைத் துணையாக வைத்துக் கொண்டார். இதனால் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார்.

"பத்திரிகே" என்பதுதான் கௌரி நடத்தி வந்த நிறுவனத்தின் பெயர். கடைசி வரை எவ்வித ஒரு விளம்பரமும் இல்லாமல், முழுக்க முழுக்க தன்னுடைய வாசகர்களின் சந்தாவை மட்டுமே வைத்து, கடினமான சூழலிலும் வைராக்கியத்துடன் அந்தப் பத்திரிகையை நடத்திக் காட்டினார்.

வட மாநிலப் பெண்ணான இவருக்கு ஆரம்பத்தில் கன்னடம் தெரியாது. ஆனால் அனைத்து விதமான சிந்தனையும், ஒரு மாநில மக்களுக்குப் போய் சேர வேண்டும் என்றால், அது அவர்களின் தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று உறுதியாக நம்பினார். அதற்காகவே கன்னட மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டார்.

"டாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் பிறந்த நான், அம்பேத்கரைப் போலவே மதப் பாகுபாட்டுக்கு எதிராக என் வாழ்நாள் முழுக்கப் போராடிக்கொண்டே இருப்பேன்" - கௌரி லங்கேஷ்.

இறுதியில் தலையங்கம், கட்டுரைகள் எழுதும் அளவுக்குத் தன்னை மெருகேற்றியும் கொண்டார். அநீதிகளை "தோலுரிக்கும்" எழுத்துகளை எழுதி எழுதித் தீர்த்தார். கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தந்தவர் கௌரி... "இன்னொரு குஜராத்" போலவே கர்நாடகத்தை மாற்ற நடந்த முயற்சிக்கு, தன்னுடைய எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இரவு 8 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்தபோது, வீட்டு வாசலிலேயே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் 7 முறை இவரைச் சுட்டுவிட்டனர். சுருண்டு விழுந்து அங்கேயே சாவைத் தழுவிக்கொண்டார்.

இவரது மிக நெருங்கிய நண்பரான நடிகர் பிரகாஷ் ராஜ், எந்த மேடையில் பேசினாலும் சரி, கௌரியை நினைவு கூராமல் தன் பேச்சை முடிப்பது கிடையாது. "உண்மை ஒருநாள் வெளிவரும்... நீதி வென்றே தீரும்.. மக்கள் விழிப்படைய வேண்டிய காலகட்டம் இது... இன்னொரு கௌரி பலியாகாமல் நாம்தான் போராட வேண்டும்" என்ற பிரகாஷ் ராஜ் சொன்ன வரிகளை இன்றைய தினம் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

கௌரியின் சிறப்பியல்புகள்:
  • தன் அறைக்கு வந்த பழங்குடி மக்கள் கழிவறையை அசுத்தப்படுத்தியபோதும், முகம் சுளிக்காமல் தானே சுத்தம் செய்த மனிதாபிமானி.
  • இந்துத்துவா பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீரசமர் புரிந்தவர்.
  • தலித் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காகக் கடைசி வரை குரல் கொடுத்தவர்.
  • நக்ஸலைட்டுகள் மனம் திருந்தி, மீண்டும் எளிய வாழ்க்கையை வாழப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.
  • வெளிப்படைத்தன்மையுடன் கூடிய துணிச்சல் மிகுந்தவர்.

கௌரியின் எழுத்துகள் அத்தனையும் வசந்தத்தின் இடிமுழக்கங்கள் என்றே சொல்லலாம்! அவைகள் ஒவ்வொன்றும் பழமைவாதிகளின் காதுகளில் கணீரென ஒலித்தது. அதேசமயம் அற்ப சுகங்களைப் புறம் தள்ளிவிட்டு, கடைசி வரை மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மடிந்த நிஜப் போராளி கௌரி லங்கேஷ்.

Post a Comment

0 Comments