அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட, இலங்கைக்கான துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட், இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலை தொடர்பான சில விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அதில் ஒன்று, இலங்கையில் அந்நிய முதலீட்டுக்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை என்பதாகும். இது என்பிபி (NPP) அரசாங்கத்தினால் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவில்லை. ஆனால் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரின் பார்வையில் இது முக்கியமான கருத்து. வெளிநாட்டு முதலீடுகளுக்கான பாதுகாப்பு இல்லை என்றும், அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் நீண்ட இழுபறிகள் ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குப் போராடிவரும் அரசாங்கம் இந்த விடயத்தில் அக்கறையின்றி இருக்கிறது என்பதை, துருக்கியே தூதுவரின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையின் முதல் பத்து வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக துருக்கியே இருக்கும் நிலையில் அதன் கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது.
அதேவேளை, இலங்கைப் படையினருக்குத் தேவையான ட்ரோன்களை வழங்குவதற்கு துருக்கியே தயாராக இருப்பதாக தூதுவர் செமி லுட்பு துர்குட் கூறியிருக்கிறார். 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய ரீதியாக ட்ரோன் ஏற்றுமதி சந்தையில் 65 வீதத்தைக் கட்டுப்படுத்துகின்ற நாடாக துருக்கியே உள்ளது.
இப்போது, தனது நாட்டு ட்ரோன்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அந்த நாடு விரும்புகிறது. இதுதொடர்பாக துருக்கியே தூதுவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி இருக்கிறார். அண்மையில் இலங்கை இராணுவ தளபதியுடனும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால் இன்னமும் இந்த ட்ரோன் விற்பனை தொடர்பாக எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை.
துருக்கியும் இலங்கையும் நீண்டகால நட்பு நாடுகள். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – அங்காராவில் இலங்கைத் தூதரகமும், கொழும்பில் துருக்கியே தூதரகமும் அமைக்கப்பட்டன. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக துருக்கியே பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்திருக்கிறது.
மேற்குலக நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோவில் (NATO) துருக்கியே அங்கம் வகித்தாலும், ஒரு இஸ்லாமிய நாடு என்ற வகையிலேயே இலங்கைக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வந்திருக்கிறது. நேட்டோ நாடு என்ற வகையில் அது இலங்கையுடன் முரண்பட்டிருக்கவில்லை. அது இலங்கைக்கும் துருக்கியேவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு வழிவகுத்திருந்தது.
தற்போதைய அரசாங்கமும் பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2025 ஜூலை மாதம் 17 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்துறை சந்தை துருக்கியேவில் இடம்பெற்றபோது, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழு ஒன்று, அங்கு சென்று புதிய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போது பாதுகாப்புக்குச் செலவிடும் நிதியைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. அதேவேளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அதிநவீன கருவிகளைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. தற்போதைய போர்முறை ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டதாக மாறி வருகிறது. உலகெங்கும் அது புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ட்ரோன் போர்முறைக்கு இலங்கை இன்னமும் முற்றுமுழுதாகத் தயாராகவில்லை. ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதே இலங்கையில் ஆளில்லா வேவு விமானங்கள் (UAV) பயன்படுத்தப்பட்டன. அவை கண்காணிப்புப் பணிகளில் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டன. இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட அந்த ஆளில்லா விமானங்கள், இறுதிக்கட்டப் போரில் துல்லியமான தரவுகள், தகவல்களைப் பெறுவதற்குப் பெரிதும் உதவின.
துருக்கி தாக்குதலுக்கான ட்ரோன்களை அதிகளவில் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. அண்மையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மோதல்களின் போது, துருக்கியேயின் ட்ரோன்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியாவுக்கும் துருக்கியேவிற்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் துருக்கியேயிடம் இருந்து ட்ரோன்களைக் கொள்வனவு செய்வது என்பது இலங்கைக்குச் சவாலான விடயமாகவே இருக்கும். ஏனென்றால், இந்தியா அதனை விரும்பாது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு ஜே.எப்-17 போர் விமானங்களை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது இந்தியா அதனைத் தடுத்து நிறுத்தியது.
துருக்கியே தயாரித்து ஏற்றுமதி செய்யும் இரண்டு ட்ரோன்கள் இலங்கைக்குப் பொருத்தமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:
1. Bayraktar TB2:
இது கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடுத்தர-நீண்ட தூர உயர் திறன் கொண்ட ட்ரோன் ஆகும். 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக் கூடியது. 27 மணித்தியாலங்கள் தொடர்ந்து இயங்கக் கூடியது. லேசரில் வழிநடத்தக் கூடிய ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் வாய்ந்தது.
2. SONGAR:
இது குறைந்த உயரத்தில் இருந்து தந்திரோபாய தாக்குதல்கள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட, ஆயுதமேந்திய ட்ரோன். இது சூட்டாதரவு மற்றும் நெருங்கிய சண்டைகளுக்குப் பயன்படுத்தக் கூடியது. 5.56 மில்லி மீட்டர் இயந்திரத் துப்பாக்கி, ரொக்கட்டுகள் அல்லது கிரனேட்களை ஏந்திச் செல்லக்கூடியது.
இலங்கை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினாலும், இந்தியா இதற்கு குறுக்கே நிற்கலாம் என்பதே அதன் முக்கியமான பிரச்சினை. இந்தியாவைத் தாண்டி இலங்கையும் துருக்கியேயும் இது தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திடுமேயானால், இலங்கை படைகளும் ட்ரோன் போர்முறைக்குக் கூடிய விரைவில் தயாராகிவிடும்.
0 Comments