elugai

இலங்கை சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஏன் கரிநாள்? - ஓர் வரலாற்றுப் பார்வை

இலங்கையின் சுதந்திர தினம்: தமிழருக்குக் கரிநாளாகியது ஏன்?
இலங்கையின் "சுதந்திர தினம்" - தமிழருக்குக் கரிநாளாகியது ஏன்? கரிநாள் போராட்டத்தின் பயன்?

1948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்த நாளிலிருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்ற முழக்கத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமாக நடைபெறுமா இல்லையா என்பதனைப் போராட்ட முடிவிலேயே காணமுடியும்.

[ஈழத் தமிழர் போராட்டப் படம்]
தாயக நிலப்பரப்பில் உரிமைக் குரல் - ஒரு குறியீட்டுப் படம்

வடகிழக்குத் தமிழர்களின் போராட்டம் என்பது இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி, மரபுவழித் தாயகம் உட்பட்ட மனித, குடிசார், அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை முன்வைத்து ஈழத் தமிழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களையே குறிக்கிறது. 1948இல் இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையர்களுக்குக் கையளிக்கப்பட்டதிலிருந்து இப்போராட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாட்டில் ஆட்சியமைத்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களின் பல்வேறு அரசியல் தலைமைகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இனவாத அடக்குமுறைச் சட்டங்கள், நடைமுறைகள், வன்முறைகள், இனப்படுகொலைகள், ஆக்கிரமிப்புகள் இப்போராட்டத்தின் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. இந்தப் போராட்டங்களில் ஒன்றாகவே ‘இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள்’ எதிர்ப்பும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடத்திலும் புலத்திலும் நிலத்திலும் இந்த எதிர்ப்பு காண்பிக்கப்பட்டு வருகிறது.

அடக்குமுறைகளும் சட்டத் தடைகளும்

கடந்த வருடங்களில் இப்போராட்டத்திற்கு நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெறப்பட்டிருந்தன. போராட்டங்கள் கடுமையாக இறுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி சற்று வித்தியாசமாக இருந்தாலும், தையிட்டி விகாரை விவகாரத்தில் அவர்களின் உண்மைமுகம் கடந்த வாரங்களில் வெளிப்பட்டிருப்பதைத் தமிழர்கள் கண்டிருக்கிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள்.

"தடையுத்தரவுகள், கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் தமிழர்களின் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்கிற உறுதிப்பாடு மக்களிடம் உள்ளது."
இம்முறை கரிநாள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
  • வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
  • வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நிரந்தரப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
  • அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிக்க வேண்டும்.
  • "பயங்கரவாதத் தடைச்சட்டம்" என்ற பெயரில் தொடரும் அடக்குமுறைகளை நிறுத்தி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  • சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும்.
[முல்லைத்தீவு நிலப்பரப்பு]
அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் மற்றும் பூர்வீக வாழ்விடங்கள்
ஒற்றுமையே இன்றைய தேவை

தமிழர் தேசத்தை இஸ்ரேலுடன் ஒப்பிட்ட காலங்களும் உண்டு. ஆனால் யூதர்களுடைய ஒற்றுமையும் விட்டுக்கொடுக்காமையும், கொள்கைப்பிடிப்பும், தொடர் முயற்சியும், முறையான திறமையான இராஜதந்திரமும் நம்மிடம் இல்லை என்பதனை மறந்துவிடுகிறோம். போராடாத இனம் இல்லாது போன இனமாகிப்போகும் என்பதன் அடிப்படையிலேயே இப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியவை இணைந்து தாயகச் செயலணியாக நடத்தும் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் வெற்றியடைவதில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்துவதும் ஒருமிப்புக்குள் கொண்டுவருவதும் காலத்தின் தேவையாகும்.

நிறைவாக

1948 பெப்ரவரி 4 இல் இலங்கை பெற்ற சுதந்திரம், தமிழ் மக்களுக்குப் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கீழ் தங்களின் இறையாண்மையைப் பறித்த இருண்ட மற்றும் அடக்குமுறை காலத்தின் தொடக்கமாக அமைந்தது. குடியுரிமை பறிப்பு, நில அபகரிப்பு, மொழி உரிமை மறுப்பு, மற்றும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்கள் காரணமாக, சுதந்திரம் தமக்கு உரிமையற்றது எனத் தமிழர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், இலங்கை சுதந்திரம் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரமாக இல்லாமல், ஒரு புதிய காலனித்துவ (சிங்களப் பேரினவாத) ஆட்சிக்கு வழிவகுத்த நாளாகவே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments