elugai

சுவிஸ் முயற்சியும் தமிழ்த் தரப்பின் முட்டுக்கட்டைகளும்: இராஜதந்திர அரங்கில் ஒரு வெட்கக்கேடான பின்னடைவு

வெட்கப்பட வேண்டிய விவகாரம்

வெட்கப்பட வேண்டிய விவகாரம்

கட்டுரையாளர்: என். கண்ணன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்

தமிழ்த் தரப்புகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சியில், சுவிட்சர்லாந்து அரசாங்கம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிய குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த முயற்சிகள் முடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு கட்டமாக, பிப்ரவரி 19 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில், ஒரு சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடப்பதற்கு வாய்ப்பில்லை என தகவல்கள் கூறுகின்றன.

யார் காரணம்?

இந்த முயற்சி பிற்போடப்படுவதற்கு அல்லது குழப்பத்துக்குள் சிக்குவதற்கு காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது.

அதேவேளை இந்தச் சந்திப்பை நிறுத்துமாறு, தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரனே சுவிஸ் தூதுவரிடம் வலியுறுத்தினார் என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அனைத்து தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை, யாழ்ப்பாணத்தில் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அன்று நடைபெற்ற இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலிலேயே, இதனைக் காரணம் காட்டி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டிலான கூட்டத்தை நிறுத்துமாறு, சுமந்திரன் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டி, பொறாமை, பூசல்கள் எந்தளவுக்கு மோசம் அடைந்திருக்கின்றன என்பதை இதிலிருந்து உணர முடிகிறது.

வெட்கக்கேடான நிலை

தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு வெளிப்புறத் தலையீடு உருவாகியுள்ளதே வெட்கக்கேடானது.

தமிழர் தரப்பு ஒற்றுமையில்லாதது என்ற கருத்து தமிழ் மக்களின் மத்தியில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஏற்பட்டிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.

தமிழ் மக்களின் சார்பில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற கட்சிகள் மூன்று மட்டுமே. இந்த மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக, நிலைப்பாடுகள் தொடர்பாக, அபிலாசைகள் தொடர்பாக, ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் இருக்கின்றன.

இது ஒன்றும் அவர்களின் கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல. கோட்பாட்டு ரீதியாக இந்தக் கட்சிகளுக்கு இடையில் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. சமஷ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தியே அரசியல் நடத்துகின்றவை, ஒற்றையாட்சியை எதிர்ப்பவை.

ஆனாலும், தமிழரின் அபிலாசைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில், இந்தக் கட்சிகளால் ஒருமித்துச் செயற்பட முடியவில்லை. ஒரே கோட்டில் நின்று பேச முடியவில்லை. ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாட முடியவில்லை.

இதுவே இன்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத நிலைக்குக் காரணம். தமக்குள் ஒரு நிலைப்பாட்டுக்குள் வர முடியாத தமிழ்க் கட்சிகளால் எவ்வாறு சிங்கள அரசியல் தரப்புகளுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முடியும்?

இராஜதந்திர மட்டத்தில் பாரதூரமான விடயம்

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடாமல் இருக்கின்ற விடயம், இராஜதந்திர மட்டத்தில் பாரதூரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சுவிஸ் தூதுவரின் தலையீட்டுக்கு முன்னர், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் இதே கருத்தைக் கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகள் ஒருமித்து மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தினால், அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விவகாரமாக இருந்தாலும், தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்ற அவரது கருத்து, கட்சிகளின் பிளவு நிலையை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.

இப்போது சுவிஸ் தூதுவர் இந்த முயற்சியில் இறங்குவதற்கும் அதுவே காரணம். தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இல்லாத காரணத்தினால், அதனை அரசாங்கமும் பிற தரப்புகளும் சாதகமாகப் பயன்படுத்துகின்ற சூழல் உள்ளது.

தமிழ்க் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு போராடுவதில்லை, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை. இது அரசியல் ரீதியாக அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்த்து வருகிறது.

எம்.ஏ. சுமந்திரன் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
எம்.ஏ. சுமந்திரன் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர்

நோர்வே முயற்சியுடன் ஒப்பிட முடியாது

தமிழ்க் கட்சிகளின் இந்தப் பிளவு நிலை அல்லது தங்களின் சொந்த விவகாரங்களைக் கையாள்வதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனம் திசைதிருப்புவதற்குக் காரணமாகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முக்கியமானது. அது எட்டப்படாத வரை, தமிழ் மக்களுக்கும் நிம்மதியான வாழ்வு கிடைக்காது, இலங்கையிலும் நிலையான அமைதி ஏற்படாது. அதனால் இந்த முயற்சியில் தமிழ்க் கட்சிகளை ஓரணியாகத் திரட்டுவதற்காக சுவிஸ் அரசாங்கம் முயற்சித்திருக்கலாம்.

இது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் முயற்சியுடன் ஒப்பிட முடியாது. அது வரலாற்று ரீதியாக பிளவுபட்டிருக்கும் இரண்டு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார அலகுகளுக்கிடையிலான மத்தியஸ்த முயற்சி. இது தமிழ் தரப்புகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற முயற்சி.

சுயபரிசோதனை அவசியம்

தமிழ்த்தரப்பு ஒற்றுமையின்றிச் செயற்படுவது, அதற்குப் பிதரப்பினர் மத்தியஸ்தம் வகிக்கின்ற அளவுக்குச் சூழல் இருப்பது, கவலைக்குரிய விடயம்.

தமிழ் மக்களின் நலன்களின் மீது அக்கறை கொண்ட தரப்புகளாக இருந்தால், அடிப்படை அபிலாசைகள் விடயத்தில் ஒன்றுபட்டு ஒரு தீர்வை முன்வைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

ஆனாலும், இந்த முயற்சியில் சுவிஸ் அரசு இறங்க வேண்டிய நிலை ஏன் வந்தது? அவர்களின் முயற்சியைக் குழப்ப வேண்டிய நிலை ஏன் வந்தது? இதையிட்டு தமிழ்க் கட்சிகள் முதலில் தங்களுக்குள் ஆராய வேண்டும். தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தங்களைத் தாங்களே யதார்த்தவாதிகளாகவும், கொள்கைவாதிகளாகவும், தேசப்பற்றாளர்களாகவும் காட்டிக் கொள்பவர்கள் — அதனைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான அரசியலை எவ்வாறு பலப்படுத்துவது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

புதிய அரசியல் சூழல்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த புதிய அரசியல் சூழல், தமிழ் மக்களின் சார்பில் முன்வைப்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை வரையறுக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது.

தற்போதைய அரசாங்கத்தை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அது மிக மிக ஆபத்தான ஒன்று என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள தவறியிருக்கின்றன. கடந்த கால அரசாங்கங்களை விட, இந்த அரசாங்கம் ஆபத்தான பல அஸ்திரங்களை தமிழர்கள் மீது செலுத்துவதற்குத் தயாராக இருக்கிறது. அதற்கான பலம் அதனிடம் இருக்கிறது.

இந்த நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான தீர்க்கமான ஒரு வழிவரைபடத்தை உருவாக்க வேண்டிய சூழல் தமிழர் தரப்புக்கு இருக்கிறது.

அதற்கான முயற்சியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்த போது, அதற்குத் தமிழ் அரசுக் கட்சி முதலில் இணங்கி வரவில்லை. அதனால் அந்த முயற்சி தடைபட்டது.

அதற்குப் பின்னர், அண்மையில் தமிழ் அரசுக் கட்சி அவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுத்தது. அந்தச் சந்திப்பும் இடைநடுவில் நின்ற சூழலில் இப்போது சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒன்றுபடுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

குழப்பம் ஏன்?

இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை நடத்துவதற்கு எடுத்த முடிவைக் காரணம் காட்டி, சுவிஸ் ஏற்பாட்டில் நடக்கவிருந்த கூட்டம் குழப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் நடக்குமா, நடக்காதா என்பதல்ல பிரதான விடயம். இது ஏன் குழப்பப்படுகிறது? ஏன் இத்தகைய ஒற்றுமை முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது? ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவதற்கு ஏன் தயக்கம் காட்டப்படுகிறது? இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்.

தமிழ் தேசிய தரப்புகள் ஒன்றுபடுவது மட்டுமே தமிழ் மக்களின் இன்றைய கனவாக இருக்கிறது. ஏனென்றால் அது ஒன்று மட்டுமே தமிழரின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைத் தேடுவதற்கான வழியாக இருக்கும்.

ஆனால் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் அத்தகைய அக்கறை இருக்கிறதா என்பது சந்தேகம். அவை சுயநல நோக்கில் செயல்படுவதும், உள்ளக முரண்பாடுகளில் கவனம் செலுத்துவதும், தனிநபர்களின் ஆதிக்கத்தின் மீது அக்கறை கொள்வதுமே அவற்றின் செயற்பாடுகளாக இருக்கின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை அடையும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் முழு அக்கறை செலுத்தவில்லை. அத்தகைய அக்கறையைச் செலுத்துகின்ற ஒரு கூட்டுச் செயற்பாட்டை முன்னெடுக்க முயன்ற போதும், அதனையும் குழப்பிவிடுகிறது தமிழ்த்தரப்பு.

விருப்ப நிலையே முக்கியம்

தமிழ் தரப்பை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகள் முக்கியமல்ல, ஒற்றுமைப்படுவதற்கான விருப்பமே முக்கியமானது. அத்தகைய விருப்ப நிலை தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமே இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் கரிநாள் பேரணி
இலங்கை சுதந்திர தினத்தன்று வடக்கு-கிழக்கில் தமிழர்கள் கரிநாளாக கடைப்பிடிக்கும் போராட்டம்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய வலுவான சிவில் சமூகத் தரப்பு ஒன்று தமிழர் மத்தியில் இல்லாதிருப்பது பெரும்குறை.

இந்தச் சூழலில் சுவிஸ் அரசு அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்த முனைந்த நிலையில் தான், குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும், விளைவு என்னவோ தமிழருக்கான பாதிப்பாகவே இருக்கப் போகிறது.

Post a Comment

0 Comments