தமிழரை நோக்கி திருப்பப்படும் இனவாதம்
"நாட்டை ஒன்றிணைப்பதற்கு இரண்டு குழுக்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று வடக்கில் இருக்கும் தமிழ் இனவாதிகள், மற்றது தென் பகுதியிலுள்ள சிங்கள இனவாதிகள். வடக்கில் இருக்கும் இனவாதிகள், போயா தினத்தில் விகாரைக்குச் சென்று அதனை அகற்றுமாறு கூச்சலிடுகின்றனர். அதற்கு சமமாக, தென்பகுதி இனவாதிகள் போயா தினத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே அதே விகாரைக்கு செல்கிறார்கள்" — இதனை கூறியிருப்பவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க.
இனவாத அரசியலை மறுவடிவமைத்தல்
அண்மைக்காலமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இத்தகைய இனவாதக் கதைகளுக்கு, தனது உரைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அவர் தனது ஆட்சியை இனவாதமற்ற அரசு என நிறுவுவதற்காக, ஏனைய தரப்பினரை இனவாதிகளாக அடையாளப்படுத்துகிறார்.
இனவாதம் எங்கிருந்து வந்தது, அதன் விளைவுகள் என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தமிழர்களை இனவாதிகளாக்குவதில் அவர் முக்கிய கவனம் செலுத்துகிறார்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வரலாறு
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.
அது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனவன்முறைகளும், இனப்படுகொலைகளும், அட்டூழியங்களும் தான், தமிழர்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்தன.
தமிழரின் உரிமை போராட்டம், அரசியல் வழிமுறையில் இருந்து, ஆயுத வழிக்குச் சென்று, மீண்டும் அரசியல் வழிக்கு திரும்பியுள்ள போதிலும், அந்தப் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
தீர்வு காணப்படாத இந்த பிரச்சினையே தமிழர்கள் இன்றும் போராடுகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பயங்கரவாதிகளில் இருந்து இனவாதிகளாக
அதனைச் செய்யாமல், தமிழர்களின் உரிமைக்கான குரல்களையும் போராட்டத்தையும் இனவாதமாக சித்திரிக்கின்ற போக்கு, தற்போதைய அரசாங்கத்தில் தீவிரமடைந்திருக்கிறது.
இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டின. தற்போதைய அரசாங்கம், தமிழர்களை இனவாதிகளாக அடையாளப்படுத்துகிறது. இரண்டுமே பொய். தமிழர்களை இவ்வாறு அடையாளப்படுத்துவதில் முன்னைய அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. தற்போதைய அரசாங்கம், தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொள்வதன் ஊடாக மறைமுக இனவாதமே முன்னெடுக்கப்படுகிறது. தமிழரை இனவாதிகளாக அடையாளப்படுத்துவது எந்த வகையிலும் இனவாதமற்ற செயலாக இருக்க முடியாது.
தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் உத்தி
அதனை மறைப்பதற்காக, தெற்கிலும் இனவாத குழுக்கள் உள்ளதாக அரசாங்கம் காட்டிக் கொள்கிறது. இந்த இரண்டு தரப்புகளையும் இனவாதிகளாக காட்டிக் கொண்டு, தாங்கள் அதற்கு வெளியே இருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க முனைகிறது அரசாங்கம். இதுதான் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் உத்தி. இந்த உத்திக்குள் அகப்பட்டு தமிழர்கள் பலரும் கூட, ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல, இந்த அரசாங்கத்திடம் இருந்து எந்த உரிமைகளும் கிடைக்கப் போவதில்லை. அப்படி அதிகாரங்கள் அல்லது உரிமைகளை வழங்குகின்ற ஒரு அரசாங்கமாக இருந்தால், ஆட்சிக்கு வந்த ஒன்றேகால் ஆண்டுகளில் எவ்வளவோ விடயங்களை செய்திருக்க முடியும். பல முன்னுதாரணங்களை ஏற்படுத்தி இருக்க முடியும்.
தையிட்டி: போராட்டத்தை மலினப்படுத்துதல்
தையிட்டியில் போராட்டம் நடத்துகின்ற மக்களை இனவாதிகளாக அடையாளப்படுத்துகிறது. அவர்களை இனவாதிகள் ஆக்க வேண்டும் என்பதற்காகவே, அங்கு வழிபட செல்கின்ற தெற்கிலுள்ளவர்களையும் இனவாதிகளாக்குவதற்கு அது முற்படுகின்றது. இதன் ஊடாக தையிட்டியில் போராட்டம் நடத்துகின்றவர்களின் நோக்கத்தை மலினப்படுத்துகிறது. கேவலப்படுத்துகிறது. அதன் மீதான நியாயப்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது. அதனைச் செய்வதற்காக தெற்கில் உள்ள ஒரு தரப்பினரையும் அது இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் நியாயமற்றதாக்குவதற்கு, அல்லது தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு, இவ்வாறு தெற்கிலுள்ள தரப்பினரையும் இனவாதிகளாக்கி "பலி கொடுக்க" பார்க்கிறது. அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கிவுல் ஓயா திட்டம்: மறைமுக குடியேற்றம்
தற்போதைய அரசாங்கம், தன்னை தூய்மையானவர்களாக காட்டிக் கொள்வதற்காக, தமிழர்களையும் தெற்கில் உள்ள சிங்களவர்களையும் குற்றவாளிகளாக - கறை படிந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. இது ஒரு மோசமான நிலை.
இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாக கூறிக் கொண்டு, தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு பின்னாலும் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுகின்ற, அநீதி இழைக்கப்படுகின்ற போக்கே காணப்படுகின்றது.
கிவுல் ஓயா திட்டம் அதற்கு இன்னொரு உதாரணம்.
வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கி சிங்கள குடியேற்றங்களை உருவாக்கிய கடந்த கால அரசாங்கங்களின் தொடர்ச்சியான நடவடிக்கையாகவே, கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக தமிழ் மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் அரசாங்கம் அதனை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. 2011 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் 417 கோடி ரூபா செலவில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், இப்பொழுது ஆறு மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரட்டைத் தரத்தின் அரசியல்
இதற்கு எதிராக தமிழர்கள் நடத்தும் போராட்டத்தையும் அரசாங்கம் இனவாத போராட்டமாக சித்தரிக்கிறது. தமிழர்கள் ஏன் இதற்கு எதிராக போராடுகிறார்கள் என்ற நியாயத்தை அது புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை. இது வெறுமனே இனவாத நோக்கம் கொண்டதல்ல, சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக அல்ல என்று கூறிக் கொள்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட போவது தமிழர்கள், அதேபோல முற்று முழுதாக நன்மை அடையப்போவது சிங்களவர்கள். அவ்வாறான நிலையில் இது எப்படி இனவாதமற்ற செயலாக இருக்க முடியும்?
அப்படியானால், 2011 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, அனைத்து திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கப் போகிறதா? அந்த அரசாங்கம் மோசடி அரசாங்கம் என்றால், ஊழல் அரசாங்கம் என்றால், தவறான அரசாங்கம் என்றால் - எப்படி அதன் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க முடியும்? அதனை முழுமையாக நிராகரித்து- முழுமையாக எதிர்த்து- விமர்சனம் செய்து- அதற்கு எதிரான மக்களாணையைப் பெற்று, ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கம், அந்த அரசாங்கத்தின் திட்டங்களையே முன்னெடுப்பது முறையானதா? அப்படியானால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதற்கு?
உலக வங்கி உதவி: ஒரு அநீதி
தற்போதைய அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை காரணம் காட்டி தனது தவறுகளை மறைக்கப் பார்க்கிறது அல்லது மறக்கச் செய்யப் பார்க்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் புதைக்க முடியாது. அதுபோலத்தான் தற்போதைய அரசாங்கத்தின் இனவாத முகமும், இவ்வாறான செயல்களின் ஊடாக அம்பலப்பட்டு வருகிறது. தங்களிடம் இனவாதம் இல்லை தாங்கள் இனவாதத்துடன் செயல்படவில்லை என்று அரசாங்கம் கூறினாலும், அது முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இனவாதமற்ற ஒரு அரசாங்கம் எந்த வகையிலும் இனவாதத்தை பற்றி பேசவே கூடாது. இன ரீதியான கருத்துக்களை முன்வைக்க கூடாது. இன ரீதியான நியமனங்களை வழங்கக்கூடாது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்கு மாறாகவே செயல்படுகிறது.
இதனை வைத்து அரசாங்கம் பெரியளவில் தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் இன்னொரு அநீதி இருப்பதை அது மறைக்கிறது. உலக வங்கி கொடுக்கும் 1000 மில்லியன் டொலரை, ஒன்பது மாகாணங்களுக்கும் 100 மில்லியன் ரூபா படி சமமாக பங்கிட்டால், 200 மில்லியன் டொலரை இரண்டு மாகாணங்களுக்கும் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கிற்கு, அதில் பாதி மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. இதை இனவாதமற்ற செயல் என்று எப்படி ஏற்க முடியும்?
முடிவுரை
இது போலத்தான் ஒவ்வொரு விடயத்திலும் அரசாங்கம் செயற்படுகிறது. இதனைத் தட்டி கேட்பவர்கள் இனவாதிகளாக்கப்படுகிறார்கள். தங்களின் காணிகளை, தங்களின் உரிமைகளை, தங்களின் பிள்ளைகளை, தங்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை தட்டிக் கேட்கின்றவர்கள், அனைவரும் இன்றைய அரசாங்கத்தினால் இனவாதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதம் பற்றிய குற்றச்சாட்டுக்களை, இப்போது, தமிழ் இனவாதமாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முற்படுகிறது. தனது தவறை மறைப்பதற்கும் - தனது இயலாமையை மறைப்பதற்கும்- தனது நோக்கங்களை அடைவதற்கும், தமிழ் இனவாதத்தை பெரும் விம்பமாக மாற்றுவது தான், அரசாங்கத்திற்கு உள்ள ஒரு வழி. அதனைத் தான் இப்போது செய்து வருகிறது.
0 Comments