அரசியல் மயப்படும் மாகாண நிர்வாகங்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தபோதும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு தடையாக இருப்பது, சட்ட ரீதியான தடைகள் மாத்திரமல்ல, அதனை நீக்குவதற்கான விருப்பம் தற்போதைய அரசாங்கத்திடமும் இல்லாதிருப்பதும் தான்.
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக நான்கு கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய போதும் ஒன்றுக்கு கூட பதில் அனுப்பப்படவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
ஊடக சந்திப்புகளில் கூடிய விரைவில் தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறினாலும், அதிகாரபூர்வமான எந்த உத்தரவாதத்தையும் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அதனால் தான், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கூட, தேர்தல் ஆணைக்குழுவிற்கு பதில் அனுப்பப்படவில்லை.
ஜேவிபியின் நிலைப்பாடு - முன்பும் இப்பொழுதும்
மாகாண சபைகளை ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது. ஆனாலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதற்கு போட்டியிட்டு வந்தது.
தற்போது இந்திய எதிர்ப்பு நிலையில் இருந்து ஜேவிபி விலகியிருந்தாலும், இந்தியாவுடன் நல்லுறவுக்கான வாய்ப்புகளை அது பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், மாகாண சபை தேர்தல்கள் விடயத்தில் இன்னமும் உறக்க நிலையிலேயே இருக்கிறது.
இந்தியா பலமுறை இதனை வலியுறுத்தியபோதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளில் இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டபோதும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டபோதும், மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான தெளிவான நிலைப்பாடு ஒன்றை எடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது.
இதற்கு மாகாண சபைகள் மீதுள்ள வெறுப்புணர்வு மாத்திரம் காரணம் அல்ல, தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் மாத்திரம் காரணம் அல்ல, அதற்கும் அப்பால் வடக்கு கிழக்கில் தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் முனைப்பும் கூட ஒரு காரணமாகத் தென்படுகிறது.
தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கான இரண்டு காரணங்கள்
அனைத்து மாகாண சபைகளும் இப்போது மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கின்றன. ஆளுநர்களின் ஊடாக மாகாணங்களை மத்திய அரசாங்கமே ஆட்சி செய்கிறது. இவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதை அரசாங்கம் விரும்பாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
| காரணம் | விளக்கம் |
|---|---|
| காரணம் 1: கட்சியின் பலவீனம் வெளிப்படும் | நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்த தேசிய மக்கள் சக்தி, அதை அடுத்து நடத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் கிட்டத்தட்ட 23.6 இலட்சம் வாக்குகளை இழந்தது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், இந்த வாக்கு வங்கி மேலும் வீழ்ச்சி அடையலாம். |
| காரணம் 2: வடக்கு-கிழக்கில் தோல்வி நிச்சயம் | மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டால், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றி பெற முடியாமல் போகும். அத்தகைய ஒரு நிலையை தவிர்க்க வேண்டுமானால், இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும். |
வடக்கில் காலூன்றும் திட்டம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி தன்னை வலுப்படுத்த எதிர்பார்க்கிறது. தன்னை ஒரு தேசிய சக்தியாக அடையாளப்படுத்த வேண்டுமானால், முழு நாட்டிலும் அது அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். வலுவான கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்திக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, அத்தகைய ஒரு கட்டமைப்பு அதற்கு இருக்கவில்லை. அது எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு அல்லது வெற்றி. அந்த வாய்ப்பை அது வலுவாக பயன்படுத்திக்கொண்டு வடக்கு, கிழக்கில் காலூன்றுவதற்கு முனைகிறது.
சிங்களக் கட்சியாக அடையாளப்படுத்தப்படும் நிலையை தவிர்த்து, தமிழ், சிங்கள, முஸ்லிம்களின் கட்சியாகவும் அடையாளப்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்த விரும்புகிறது. அப்போது தான், முழுநாட்டையும் ஒன்றிணைத்து அதிகாரம் செலுத்த முடியும். தமிழரின் பிரிவினைக் கோரிக்கையை தோற்கடிக்க முடியும்.
வடக்கு ஆளுநரும் நிழல் அமைச்சர்களும்
வடக்கின் ஆளுநராக முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் நியமிக்கப்பட்டதற்கு காரணம், அவர் சிறந்த அரச நிர்வாகியாக இருந்தார் என்பது மாத்திரமல்ல. மென்போக்குடையவர் என்பதால், அரசாங்கம் சொல்வது அனைத்தையும் செய்யக்கூடியவர் என்பதும் தான்.
அவரைப் பயன்படுத்திக்கொண்டு வடக்கின் நிர்வாகத்தை, முற்றுமுழுதாக தேசிய மக்கள் சக்தி மயப்படுத்துகின்ற வகையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுகளையும் கையாளுவதற்கு, 5 நிழல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அது அதிகாரபூர்வமான முடிவு அல்ல. அவ்வாறு அதிகாரபூர்வமாக நியமிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை. ஆனாலும், அரச நிர்வாகம் அவர்களிடம் உள்ளதால், அதிகாரபூர்வ நிழல் அமைச்சர்களாக செயல்படுகிறார்கள்.
| அமைச்சு | நிழல் அமைச்சர் |
|---|---|
| உள்ளூராட்சி அமைச்சு | நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் |
| சுகாதார அமைச்சு | மருத்துவர் ஸ்ரீ பவானந்தராஜா |
| சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு | நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் |
| கல்வி அமைச்சு | ஜெகதீஸ்வரன் |
| விவசாய அமைச்சு | திலகநாதன் |
கூட்டுறவு ஆணைக்குழுவில் அரசியல் நியமனம்
வடக்கு மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என்ற ஆணைக்குழு உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிப்பது மற்றும் அவர்களின் நியமனங்கள் போன்ற விடயங்களில் தலையீடு செய்யக்கூடிய ஒரு பதவி நிலை இது.
இந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காராளசிங்கம் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர்.
மாகாண நிர்வாக அமைப்புக்குள் ஒரு அரசியல்வாதி கொண்டு வரப்பட்டிருப்பதன் நோக்கத்தை புரிந்துகொள்வது கடினம் அல்ல. மாகாண சபையின் நிர்வாகத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமே முன்னெடுக்க வேண்டும். ஆனால், அரசியல் செல்வாக்கில் பதவியைப் பிடித்தவர்கள், மாகாண நிர்வாகத்துக்குள் அதிகாரம் செலுத்தும் நிலை இன்று தோற்றம் பெற்றுள்ளது.
வரலாற்று ஒப்பீடு - ராஜபக்ஷவும் ஐ.தே.கவும்
கடந்த ஆட்சிக்காலங்களில் இதேபோன்று தான் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை மாத்திரமன்றி, முழுநாட்டிலும் அரச நிர்வாகம் கட்சி மயப்படுத்தப்படுகின்ற போக்கு காணப்பட்டது. ராஜபக்ஷவினர் அதையே செய்தார்கள், ஐக்கிய தேசியக் கட்சியினரும் அதையே செய்தார்கள்.
அவர்கள் அதனை செய்தபோது கடுமையாக விமர்சித்து எதிர்த்த கட்சி தான் ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி. ஆனால் இன்று அதே கட்சி, ஆட்சிக்கு வந்துள்ள சூழலில் அரச நிர்வாகத்தை கட்சி மயப்படுத்தி வருகிறது. வடக்கு மாகாண சபை நிர்வாகத்திலும் அதே நிலை தான் நீடிக்கிறது.
டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வடக்கின் முழு நிர்வாகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் ஆளுநர்கள் அவருடன் முரண்பட்டிருக்கின்றனர். மத்திய அரசு நிர்வாகமும் மாகாண அரசு நிர்வாகமும் வெவ்வேறானவை. இரண்டுக்கும் அரசியலமைப்பின் ஊடாக, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.
முடிவுரை
வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை அரசியல் மயப்படுத்துகின்ற நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கை, தேசிய மக்கள் சக்தி தம்மை பலப்படுத்துவதற்காக எடுத்துள்ள மற்றொரு செயற்பாடாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் தம்மால் முன்னெடுக்கப்பட முடியாமல் போய்விடும் என்பதற்காகவே, மாகாண சபை தேர்தல்களை நடத்துவதை அரசாங்கம் பிற்போட்டு வருகிறது.
0 Comments