elugai

இலங்கையின் எரிசக்தி துறையைக் கைப்பற்றப் போவது யார்? - இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சை!

எரிசக்தியைக் கட்டுப்படுத்தும் போட்டி: இலங்கைக்கான சவால்கள்
எரிசக்தியைக் கட்டுப்படுத்தும் போட்டி: இலங்கைக்கான சவால்கள்
ஆக்கம்: ஹரிகரன்

கொழும்பில் நடந்த 77-வது இந்திய குடியரசு தின நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக மாற்றுவது குறித்து இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் (UAE) பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.

2015-ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு மீண்டும் வந்த போது, இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பதெனப் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையில் இந்த திட்டம் வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது.

[Trincomalee Oil Tank Farm]
திருகோணமலை: பிராந்திய எரிசக்தி பாதுகாப்பில் ஒரு முக்கிய மையம்

இந்த திட்டத்தை இந்தியா தொடர்ந்து முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவின் கருத்து தெளிவுபடுத்துகிறது. அவர் இதனைக் கூறியிருக்கும் தருணம் முக்கியமானது. அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கான திட்டம் குறித்து சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அதற்குப் பிறகு இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், சினோபெக்கின் இரண்டு முக்கியமான கோரிக்கைகளாகும்.

"சினோபெக் நிறுவனத்தின் நிபந்தனைகள்: 1. மேலதிகமாக 200 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும். 2. சுத்திகரிக்கப்படும் எரிபொருளில் 80 சதவீதத்தை உள்நாட்டில் சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும்."

இதற்கு அரசாங்கம் இணங்காமல் இருந்து வந்தது. அண்மையில் குறுகிய நேரப் பயணமாக இலங்கைக்கு வந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது பற்றிப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இதையடுத்து சினோபெக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு, இந்த மாதம் கொழும்புக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியான சூழலில் தான், இந்தியத் தூதுவர் திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக மாற்றுவது குறித்துத் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

[Oil Refinery Facility]
அம்பாந்தோட்டையில் சீனாவின் பிரம்மாண்ட முதலீடு
எரிசக்தி பாதுகாப்பும் பூகோள அரசியலும்

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை அல்ல. இது இலங்கையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கின்ற போட்டியை வெளிப்படுத்துகிறது. எரிசக்தியைக் கட்டுப்படுத்துவது ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துவதற்குச் சமம். எரிசக்தியைக் கட்டுப்படுத்தினால், ஒரு நாடு முற்று முழுதாகச் செயலிழந்து போகும். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இதனை நேரடியாகக் காண முடிந்தது.

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர், மத்திய வங்கியின் கையிருப்பில் இருக்கவில்லை. இதனால் எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டு, வாகனங்கள் ஓட முடியாமல் முடங்கின. முழு நாடும் செயலிழந்தது. அதனால் தான், எரிசக்தியைக் கட்டுப்படுத்துவது எந்தவொரு நாட்டுக்கும் முக்கியமானது. அதுபோல, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமானது. அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போனால் நாடு இயங்க முடியாமல் போகும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிற நாடுகள் தலையீடு செய்ய முற்படும்.

இலங்கை எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைகின்ற அதேவேளை, இலங்கையின் எரிசக்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் இறங்கியிருக்கின்றன. இதன் ஊடாகத் தாம் நினைத்ததை - தாம் எதிர்பார்க்கின்ற விடயங்களை இந்த நாடுகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக மாற்றுகின்ற திட்டம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் போது அது வலுவானதாக இருக்கும்.

அதேவேளையில், சீனாவும் இதேபோன்றதொரு திட்டத்தில் காலடி எடுத்து வைக்க முற்படுகிறது. பெரியதொரு முதலீட்டு ஆசையைக் காட்டி அது இந்த திட்டத்தைச் செயற்படுத்த முனைகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனா ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. அங்கு பெரியளவிலான ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவினால், அதனைச் சாட்டாக வைத்து இலங்கையின் தென்பகுதியில் சீனா தன் ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.

மின்சாரப் பேருந்துகள் மற்றும் சீனாவின் கொடை

ஒரு பக்கத்தில் சீனா எண்ணெய் ஆலையின் மீது மிகப் பெரிய முதலீட்டைச் செய்யவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இலங்கைக்கு 100 சொகுசு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கும் சீனா முன் வந்துள்ளது. இது ஒன்றுக்கொன்று முரணான விடயம். இதற்குப் பின்னாலும் ஒரு பூகோள அரசியல் போட்டி இருக்கிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நவீன சொகுசு பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. அதற்காக இந்தியாவிடம் இருந்து பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டிருந்த சூழலில் தான், சீனா 100 பேருந்துகளை இலங்கைக்குக் கொடையாக வழங்க முன்வந்திருக்கிறது.

[Electric Bus Charging]
மின்சாரப் பேருந்துகள்: சீனாவின் புதிய நகர்வு

அண்மையில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இதனை வெளிப்படுத்தியிருந்தார். சீனாவின் இந்தக் கொடை இந்தியாவுக்குச் சவால் விடும் வகையிலான ஒரு நகர்வு. 100 மின்சாரப் பேருந்துகளை வழங்குவதன் ஊடாக இலங்கையில் சூழலுக்குப் பாதிப்பில்லாத போக்குவரத்தை உறுதிப்படுத்தச் சீனா விரும்புவதாகச் சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மாத இறுதியில் சீனத்தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, இந்த பேருந்துகள் வழங்கப்படுகின்ற விவகாரம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்கின்ற (Charging Stations) நிலையங்களைச் சீனா அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் விஜித ஹேரத். கொடையாகவோ அல்லது கடனாகவோ வழங்குமாறு அவர் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த கோரிக்கையைத் தாம் பீஜிங்கிடம் கொண்டு செல்வதாகச் சீனத் தூதுவர் பதிலளித்துள்ளார்.

முரண்பாடுகளும் சந்தேகங்களும்

இலங்கையில் சினோபெக் நிறுவனம் 3.7 பில்லியன் டொலரைச் செலவிட்டு ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கான பேச்சுக்களை நடத்துகின்ற சூழலில், சீனா மின்னேற்றும் நிலையங்களை அமைத்துக் கொடுக்க முன்வருமா? என்ற சந்தேகம் உள்ளது. சீன நிறுவனம் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருளில் கணிசமானதை உள்நாட்டில் சந்தைப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டால், குறைந்த செலவில் மின்சார வாகனங்களை இயக்கக் கூடிய நிலை உருவாகும். அது தற்போது எரிபொருள் வாகனங்களை வைத்திருப்பவர்கள், மின்சார வாகனங்களின் பக்கம் தாவுவதற்கு வழிவகுக்கும். அத்தகைய நிலையில் சீன நிறுவனத்தினால் அம்பாந்தோட்டையில் சுத்திகரிக்கப்படும் எரிபொருளில் கணிசமானவற்றை உள்நாட்டில் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, இலங்கையின் கோரிக்கையைச் சீனா எவ்வாறு பதிலளிக்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த எரிக் சொல்ஹெய்ம், சீனாவில் உள்ளது போல மின்சார வாகனங்களின் பயன்பாடு இலங்கைக்கு அவசியமானது எனக் கூறியிருக்கிறார். இதன் ஊடாக இலங்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். தற்போது உலகளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சீனா அதனை ஏற்றுமதி செய்கின்ற முக்கியமான ஒரு நாடாக மாறியிருக்கிறது. அதனை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கு விரும்பினால், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் நிலையங்களை அமைப்பதற்கு அல்லது அமைத்துக் கொடுப்பதற்குச் சீனா முன்வராமல் போகக் கூடும்.

இவ்வாறான நிலையில், எரிசக்தி விவகாரத்தில் - எரிசக்தியைக் கட்டுப்படுத்துகின்ற விவகாரத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து நிலவி வருகின்ற போட்டி, இலங்கைக்குச் சாதகமானதாக இருக்க முடியாது.

Post a Comment

0 Comments