ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
"அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணம்" (The surgery was successful, but the patient died) என்றொரு பிரபலமான வாக்கியம் உள்ளது.
இது, மருத்துவத்துறைக்கு மாத்திரமல்ல, இலங்கையின் இன்றைய சுற்றுலாத்துறையின் நிலைமைக்கும் பொருத்தமான வாக்கியம் போல தெரிகிறது.
ஏனென்றால், இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பது போல சுற்றுலாப் பயணிகளின் வருகை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஆனால் சுற்றுலாப் பயணிகளின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் குறைந்து கொண்டே செல்கிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அறுவைச் சிகிச்சை வெற்றியளித்திருந்தாலும், வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.
அரசாங்கத்தின் சாதனைப் பட்டியல்
அண்மைய நாட்களில் அரசாங்கம் வெளியிடுகின்ற தரவுகள், பொருளாதார நிலை தொடர்பாக மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 78-வது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய போது, பொருளாதார ரீதியாக 2025-ஆம் ஆண்டு அரசாங்கம் ஈட்டிய வரலாற்றுச் சாதனைகளைப் பட்டியலிட்டார்:
| சாதனை | விவரம் |
|---|---|
| வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை | 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவு |
| இறைவரி வருமானம் | இலங்கை வரலாற்றில் இதுவரையிலாத அளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிக வருமானம் |
| நடைமுறைக்கணக்கு | 2006-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக மீதி |
| வங்கி வட்டி வீதம் | நீண்டகாலமாக ஒற்றை இலக்கத்தில் பேணுகின்றது |
| சுற்றுலாப் பயணிகள் | நாட்டின் வரலாற்றில் அதிக எண்ணிக்கை |
| ஏற்றுமதி வருவாய் | பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து கிட்டத்தட்ட 17 பில்லியன் டொலர் |
அவர் கடந்த ஆண்டின் பொருளாதாரச் சாதனைகள் அல்லது பெருமைகளைப் பட்டியலிட்டிருந்தாலும், நாட்டின் பொருளாதார முயற்சிக்கு அல்லது வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு இவை பங்களித்திருக்கின்றன என்பதே முக்கியமானது.
சுற்றுலாத்துறை: முரண்நிலையான உண்மை
உதாரணத்திற்கு, சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டில் அதிகபட்ச சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர் என்பது உண்மை. அது ஒரு வரலாற்றுச் சாதனை என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் மூலம் அடையப்பட்டுள்ள பொருளாதார இலக்கு நிறைவேறியதா என்பதே முக்கியம்.
அப்படிப் பார்த்தால், முன்னைய ஆண்டுகளின் சுற்றுலாத்துறை வருமானங்களுடன் ஒப்பிடுகின்றபோது, 2025-இல் கிடைத்த வருமானம் குறைவானது. அப்படியானால், சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைகிறது என்று, பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு அதிகரிக்கிறது என்று எந்த வகையிலும் பெருமையாகக் கூற முடியாது.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
இந்த ஜனவரியில் 378.5 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கின்றபோதிலும், அது கடந்த ஆண்டை விட குறைந்திருப்பது, இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடும் நிலைக்குத் தள்ளுகிறது.
கடந்த 7 மாதங்களில், 5 மாதங்கள் சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சரிந்து பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் ஓரளவுக்கு உயர்ந்து, அதன்பின்னர் இந்த வருமானம் தொடர்ச்சியாக சரிந்து வருகிறது.
ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முரண்நிலையான சூழல்.
| ஆண்டு | சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை | வருமானம் (பில்லியன் டொலர்) | மொ.உ.உ-ல் பங்கு |
|---|---|---|---|
| 2018 (உச்சம்) | — | — | ~5% |
| 2024 | 20,53,465 | 3.17 பில்லியன் | — |
| 2025 | 23,62,521 (+15.1%) | 3.22 பில்லியன் (+1.6%) | ~3% |
| 2026 (இலக்கு) | 30,00,000 | ? | ? |
நாளொன்றுக்கு செலவின் வீழ்ச்சி
இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் நாளொன்றுக்கு செலவிடுகின்ற பணத்தின் அளவை மீளாய்வு செய்து அரசாங்கம் ஒரு குறைந்தபட்ச எல்லையை நிர்ணயித்திருக்கிறது. முன்னர் இது 171 அமெரிக்க டொலர்களாக இருந்தது, தற்போது இது 148 டொலர்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இது சுற்றுலா பயணிகளின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் அளவு குறைவதற்கு கூறப்படுகின்ற முக்கியமான காரணம். அது மாத்திரமல்ல, வேறு பல காரணங்களாலும், அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டொலர்களைத் திரட்ட முடியாதிருக்கிறது.
2026 இலக்கும் உண்மை நிலைமையும்
2026-ஆம் ஆண்டில் இலங்கை 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனாலும், இந்த இலக்கு சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை உயர்த்தும் என்று எதிர்பார்க்கக் கூடிய நிலை இல்லை.
ஏனென்றால், ஜனவரி மாதம் 2,77,327 சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், அவர்களின் வருகையில் 9.7 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தபோதிலும், ஜனவரி மாதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 5.6 சதவீதம் சரிந்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது அரசாங்கத்துக்கு எதிர்மறையான ஒரு விடயம்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், அதனைப் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லலாம், பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம் என்பன போன்ற கற்பிதங்களுக்குப் பின்னால் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துகிறது.
தீர்வு என்ன?
வாடகை விமானங்களின் ஊடாக அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வந்து இறக்குவதன் ஊடாக மாத்திரம், இந்த சிக்கலைத் தீர்க்க முடியாது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளை வருகை தரச் செய்வது மாத்திரம் இந்த சிக்கலுக்கான தீர்வு அல்ல.
எங்கிருந்து சுற்றுலா பயணிகளைக் கொண்டு வருவது என்பதுதான் இதற்குள்ள தீர்வாக இருக்கும். அதிகபட்சமாக செலவழிக்கக் கூடிய நாடுகளின் சுற்றுலா பயணிகளை அழைத்து வர வேண்டும். அது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு.
0 Comments