ஆய்வுக்கட்டுரை: பேராபத்து நிறைந்த கிவுல் ஓயாத் திட்டம்
2022-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் 'ஆபத்துக்கள் நிறைந்த கிவுல் ஓயா திட்டம்' எனும் தலைப்பில் இந்தத் திட்டத்தின் முற்கூட்டிய திட்டமிடல் அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் அதன் பின் இணைப்புக்களை அடிப்படையில் இத்திட்டத்தின் ஆபத்துக்கள் பற்றி ஆழமாக அறிக்கையிடப்பட்டது.
கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள், மற்றும் காணாமலாக்கப்படும் தமிழர்களின் தொல்பொருளியல் பகுதிகள் உள்ளிட்ட விடயங்களும், தமிழ் கிராமங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றியும் உள்ளடக்கப்பட்ட குறித்த ஆழமான அறிக்கை வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளும் 7 மாதங்களும் 19 நாட்களும் நிறைவடைகின்றன.
இந்தப் பின்னணியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிவுல் ஓயாத் திட்டம் மேம்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு கடந்த ஜனவரி 19-ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை 2026-இலிருந்து 2031-வரையில் முன்னெடுத்துச் செல்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதனையடுத்து குறித்த திட்டத்தினை அமுலாக்குவதற்கான கவர்ச்சிகரமான விழிப்புணர்வுக் கூட்டங்களை முன்னெடுப்பதென மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்து கடந்த 9-ஆம் திகதி 'வெலிஓயா' என்று பெயர் மாற்றப்பட்டுள்ள மணலாறில் நிறுவப்பட்டுள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் முதலாவது கூட்டத்தினை நடத்தியுள்ளது.
திட்டத்தின் பின்னணி
முன்னதாக, கிவுல் ஓயா நீர் வளத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நீர்ப்பற்றாக்குறை, வறுமை மற்றும் குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டும் அக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2011.09.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதற்தடவையாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதன்பின்னரான சூழலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த திட்டம் சம்பந்தமாக திறந்தவெளிக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை. மாறாக, கிவுல் ஓயாத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கான இரகசிய நகர்வுகள் தான் தீவிரப்படுத்தப்பட்டன.
மகாவலி 'எல்' வலயம் - நிலப்பரப்பும் தாக்கமும்
மகாவலி 'எல்' வலயம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாகாணங்களிலும் 199,210 ஹெக்டெயர் நிலப்பரப்பு மகாவலி 'எல்' வலயத்தின் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு 1988 ஏப்ரல் 14-ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதோடு இது 2007 மார்ச் 7-ஆம் திகதி வெளியிடப்பட்ட 'விசேட அபிவிருத்தி பகுதி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிறிதொரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| மாகாணம் | ஹெக்டெயர் அளவு | உள்வாங்கப்பட்ட பிரதேசங்கள் |
|---|---|---|
| வடக்கு மாகாணம் | 83,808 ஹெக்டெயர் | வவுனியா, வவுனியா வடக்கு, கரைத்துரைப்பற்று, ஒட்டுசுட்டான், வெலிஓயா |
| வடமத்திய மாகாணம் | 91,080 ஹெக்டெயர் | — |
| கிழக்கு மாகாணம் | 24,322 ஹெக்டெயர் | — |
1964–1968 காலப்பகுதியில் மகாவலி 'எல்' வலய திட்டத்தினை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார்கள். அப்போது, நீர்ப்பாசனத்துக்கான மூலங்களாக தண்ணிமுறிப்புக்குளம் மற்றும் பதவியா குளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதுடன் மேலதிக நீரை மகாவலி ஆற்றிலிருந்து வடமத்திய மாகாண கால்வாயினூடாக வழங்குவதெனவும் திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்வாறு மகாவலி ஆற்றின் நீரை கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமற்றது என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் மகாவலி 'எல்' வலயத்தில் சிங்களக் குடியேற்றங்களே தொடர்ச்சியாகச் செய்யப்பட்டன. இந்த நிலைமையானது 2009-இன் பின்னரான சூழலில் தீவிரமானது.
பயனாளிகள் யார்? - இனவாதமா இல்லையா?
இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லையென்று கூறப்படும் தற்போதைய புதிய அரசியல் சூழலில் கிவுல் ஓயாத் திட்டத்தின் 'பயனாளிகள்' இலக்கு மாற்றப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை. கிவுல் ஓயாத் திட்டத்தின் பயனாளிகள் 2,400 ஹெக்டெயரில் வாழ்கின்ற, வாழவுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களே என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த திட்டத்தின் ஊடாக மொத்தமாக 6,000 பெரும்பான்மை சிங்கள விவசாயக் குடும்பங்கள் பயனடையப் போகின்றன. அதனடிப்படையில் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமங்களிலும், வெலிஓயாவிலும் குடியேற்றப்பட்டுள்ள 4,372 விவசாயக் குடும்பங்களும் எதிர்வரும் காலத்தில் குடியேற்றப்படவுள்ள 1,628 புதிய சிங்கள விவசாயிகளுமே பயனாளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.
| பயனாளி வகை | குடும்பங்கள் | நிலப்பரப்பு |
|---|---|---|
| ஏற்கனவே குடியேற்றப்பட்ட விவசாயக் குடும்பங்கள் | 4,372 குடும்பங்கள் | 700 ஹெக்டெயர் (இரண்டு போக விவசாயம்) |
| புதிய குடியேற்றவாசிகள் | 1,628 புதிய குடும்பங்கள் | 1,700 ஹெக்டெயர் புதிய நிலம் |
| மொத்தம் | 6,000 குடும்பங்கள் | 2,400 ஹெக்டெயர் |
இத்திட்டம் அமுலாகின்றபோது ஏற்கனவே குடியேற்றப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்கள் 700 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இரண்டு போக விவசாயச் செய்கைக்கான நீர் உறுதிப்படுத்தப்படுவதோடு 1,700 ஹெக்டெயர் புதிய நிலத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார நிலம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இன்னமும் குடியேற்றங்களை செய்வதற்கான ஆட்சியாளர்களின் நோக்குநிலை உறுதியாகிறது.
தமிழ் கிராமங்களின் நிலை - கண்துடைப்பு மட்டுமா?
கண்துடைப்புக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 'ஜனகபுர' என்று பெயர் மாற்றப்பட்டுள்ள 'கொக்குத்தொடுவாய் வடக்கு' பகுதியில் உள்ள பூர்வீகத் தமிழ் கிராமங்களான ஏரிஞ்சகாடு, குஞ்சுக்கல்வெளி, வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, அடையகருத்தான், தொட்டகட்டல்குளம், பூமடுக்கண்டல், உந்தராஜன்குளம், ஆமையன்குளம், உமாவடிக்கண்டல்வெளி ஆகியவற்றில் வாழும் 371 தமிழ் விவசாயிகளுக்கு 1,449 விவசாய நிலங்கள் தேவைப்படுவதாக உள்ளடக்கப்பட்டுள்ளமையைக் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.
அணைக்கட்டும் நீரேந்துப் பகுதியும்
கிவுல் ஓயா திட்டத்திற்கான நீர் வரத்தானது வவுனியா வடக்கின் அடர்ந்த காடு மற்றும் நீர்ப்பாசன குளங்கள், வயல்களில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரால் உருவாகும் சிற்றருவிகள் இணைவதன் மூலம் உருவாக்கப்படும் ஆற்றை 1,589 ஹெக்டெயர் நிலப்பரப்பில் 53.9 கன மீற்றர் கொள்ளவு கொண்ட 19 மீற்றர் உயரமான அணைக்கட்டினை அமைப்பதன் ஊடாக சேகரிப்பதாகும்.
அதன்பின்னர் சேகரிக்கப்பட்ட நீரானது 12.9 கிலோமீற்றர் நீளமான கால்வாய் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதோடு 10 ஆயிரம் குடும்பங்களின் குடிநீர் தேவை, கைத்தொழில் துறையின் நீர்த்தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்வதற்காகவும் பங்களிக்கப்படவுள்ளது.
அவ்வாறான நிலையில் குறித்த கிவுல் ஓயாவின் அணைக்கட்டமைப்பானது முற்றுமுழுவதுமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களை மையப்படுத்தியதாகவே அமையவுள்ளதோடு பிரதான நீரேந்துப் பகுதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும், முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் வாழும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள், வாழ்வாதார நிலங்களாகும்.
வரலாற்று பின்னணியும் தமிழர் நிலங்களும்
1983-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களை அடுத்து குறித்த பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த மக்கள் வெளியேறியிருந்த நிலையில் அக்கிராமங்கள் தற்போதும் மக்கள் குடியேற்றப்படாத பகுதிகளாகவே உள்ளன. ஆனால், அந்தக் கிராமங்களில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் இன்னமும் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் அப்பகுதிகளையும் அண்மித்த இயற்கை வனப்பகுதிகளையும் ஒன்றிணைத்து 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5,283 ஹெக்டெயர் பகுதியை யானை வேலிகள், அகழிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு அது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நிலப்பரப்பானது தற்போது அரசுக்கு உரியதாக காண்பிக்கப்படுகின்றது. ஆனால் அதற்குள் தமிழ் மக்களின் உறுதிக்காணிகள், பேர்மிட் காணிகள் உள்ளிட்டவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு எந்தவொரு அரச இயந்திரமும் தயாராக இல்லை.
இதனைவிடவும், 2012–2014 ஆட்சிகாலத்தில் கொழும்பில் இருந்து கூகுள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் 'அரச வனங்கள்' என்று பிரகடனப்படுத்தப்பட்டு நீரேந்துப் பகுதிகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்குள்ளும் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்வியல், வாழ்வாதார நிலங்கள் காணப்படுகின்றன.
அதற்கும் மேலதிகமாக, வவுனியா வடக்கில் உள்ள கூழாங்குளம், ஈச்சங்குளம், வெடிவைத்தகல்லு, கோவில் புளியங்களும், காட்டுப்பூவரங்குளம் காஞ்சரமோட்டை ஆகிய தமிழ் கிராமங்களின் பூர்வீக வாழிடங்களும், வாழ்வாதார இடங்களும் நேரடியாகவே நீரேந்துப் பகுதிக்குள் செல்வதால் பாதிப்பைச் சந்திக்கின்றன. ஆனால், இந்த கிராமங்களில் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் வாழ்வியல், வாழ்வாதார நிலங்கள் சம்பந்தமாக எந்தவொரு கவனமும் செலுத்தப்படவில்லை.
சிங்கள கிராமத்திற்கு மட்டும் சலுகை
எனினும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உருவாக்கப்பட்டுள்ள கம்பிலி வெவ என்ற வெறும் 37 சிங்கள குடும்பங்களை கொண்ட கிராமசேவகர் பிரிவு திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும் ஒரேயொரு சிங்கள கிராமமாக இருக்கிறது. அந்தக் கிராமத்தில் உள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட அவர்களின் உட்கட்டுமான மேம்பாட்டுக்காக பல்வேறு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, அவர்களை மீள்குடியேற்றுவதற்காக குடும்பமொன்றுக்கு 0.2 ஹெக்டெயர் நிலம் தலா ஒவ்வொரு குடும்பத்துக்கு வழங்கப்படவுள்ளதோடு, 0.8 ஹெக்டெயர் நிலம் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்படவுள்ளது. அத்துடன் உலக உணவுத்திட்டத்தின் உதவியின் கீழாக அந்த மக்களின் நிலைபெறுத்தன்மைக்கான அனைத்து உதவிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் அந்த மக்களுக்கான வணக்கத் தலங்கள், கற்கை செயற்பாடுகளுக்கான கட்டடங்கள் உள்ளிட்டவையும் உரியவாறு நிர்மாணிக்கப்படவுள்ளதோடு போக்குவரத்து வசதிக்கான உள்ளக, மற்றும் வெளியக வீதிகளும் உருவாக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவீனம் மற்றும் மாற்றுத் திட்டங்கள்
ஆக மொத்ததில், 2011-இல் திட்டம் முன்மொழியப்பட்டபோது அதன் செலவீனத் தொகை 4,170 மில்லியன் ரூபாவாக இருந்தது. தற்போது அந்தத் தொகை வடக்கில் அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஏனைய முக்கிய நெருக்கடிகளை தவிர்த்து ஐந்து மடங்கால் அதிகரிக்கப்பட்டு 23,456 மில்லியன் ரூபாவாக்கப்பட்டுள்ளது.
| ஆண்டு | செலவீனம் |
|---|---|
| 2011 (ஆரம்ப மதிப்பீடு) | 4,170 மில்லியன் ரூபா |
| 2026 (தற்போதைய மதிப்பீடு) | 23,456 மில்லியன் ரூபா (ஐந்து மடங்கு அதிகரிப்பு) |
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரர், பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்டவர்கள் கூறுவது போன்று கிவுல் ஓயாத் திட்டத்தினை இனவாதமாக பார்க்கக் கூடாது என்றால் குறித்த திட்டத்தின் பிரகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மேற்படி சிக்கலான நிலைமைகளுக்கு பதிலளிப்பது யார்?
கிவுல் ஓயா திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையொத்ததாகவே 2,000 ஏக்கர் விவசாய நிலங்களை உருவாக்கும் முகமாக 2002-ஆம் ஆண்டு அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த கணேஷினால் பெரியமருதோடைக்குளம், சித்தாத்துக்குளம், கல்லாத்துக்குளம் ஆகியனவற்றை புனரமைப்பதற்காக நியாப் திட்டத்தின் கீழ் முன்மொழிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் 2003-ஆம் ஆண்டு சிரான் திட்டத்தின் கீழ் முன்மொழிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த முன்மொழிவுகள் சீர்த்தூக்கிப் பார்க்கப்படவில்லை.







0 Comments