elugai

யதார்த்தங்களைப் புரியாத கனவுகள்: தேசிய மக்கள் சக்தியின் 15 ஆண்டு காலக் கணக்கு!

யதார்த்தங்களைப் புரியாத கனவுகள்: தேசிய மக்கள் சக்தியின் 15 ஆண்டு காலக் கணக்கு!
யதார்த்தங்களைப் புரியாத கனவுகள்
- கார்வண்ணன்
“15 ஆண்டுகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது“ - இது கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில், அமைச்சர் சந்திரசேகரன் கூறியுள்ள கருத்து. இது போன்ற கருத்துக்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
அரசாங்கத்துக்கு மக்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால், மக்களுக்கு அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று சிந்திக்கின்ற நிலை உள்ளதா என்பதே முக்கியமானது.
[அரசியல் அதிகாரம் மற்றும் மக்கள்]
அரசியல் அதிகாரமும் மக்களின் எதிர்பார்ப்புகளும் - ஒரு பார்வை
வரலாறு கற்பிக்கும் பாடம்
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்றுதான், அவரது அமைச்சர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றி அப்படிப் பேச வைத்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரளத் தொடங்கினர்.
அவர் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கத் தொடங்குகின்றார் என்று தெரிந்து கொண்டதும், "20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது" என்று கூறியவர்கள் தான், முதலில் அவரை விட்டுவிட்டு ஓடினார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இப்படித்தான் புகழாரம் சூட்டினார்கள்.
"அடுத்த 15, 20 ஆண்டுகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அசைக்க முடியாது என்று கூறியவர்கள் தான் பின்னர் அவருக்கு எதிராகத் திரும்பினார்கள்."
சந்திரசேகரனின் 15 ஆண்டுகாலக் கணக்கு
அதற்காக, இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 15 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று கூறிய அமைச்சர் சந்திரசேகர், இந்த அரசாங்கத்திற்குத் திரும்புவார் என்று அர்த்தம் இல்லை. அவ்வாறு கூறுவதால் மாத்திரம் ஒரு அரசாங்கம் நிலைத்திருப்பதில்லை. அமைச்சர் சந்திரசேகர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பின்னர், வேறு எவராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறக்கூடிய நிலையில் அவர் இல்லை.
ஒரு சிறப்பான ஆட்சியாக இருந்தால் அது நிலைத்திருக்கும். ஆட்சி மாற்றம் பற்றிய ஆர்வமோ ஆசையோ மக்களுக்கு வராது. மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய ஒரு அரசாங்கம் தனது கால எல்லை இவ்வளவு காலம் தான் இருக்கும் என்று ஒருபோதும் கூறாது, கூறவும் முடியாது. ஆனால் அடுத்த 15 ஆண்டுகள் என அமைச்சர் சந்திரசேகர் கூறியது வியப்புக்குரியது.
[ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் கனவுகள்]
இலங்கை அரசியலில் கால நிர்ணயம் செய்யப்படும் ஆட்சி அதிகாரங்கள்
தேசிய மக்கள் சக்தியின் நீண்ட காலத் திட்டம்
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் எவ்வாறு காலநிர்ணயம் செய்யப்பட்டதோ, அதுபோலத்தான் சந்திரசேகரும் 15 ஆண்டுகள் என காலத்தை நிர்ணயித்திருக்கிறார். தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி ஆட்சியை கொண்டு வரப் போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு கட்சி ஆட்சிமுறையை கொண்டு வந்து அராஜக சூழலுக்கு திட்டமிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் கனவு தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கிறது என்பதை சந்திரசேகரின் கருத்தின் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
15 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதன் ஊடாக அரசியல் கலாசாரத்தை, அரசியல் சூழலை மாற்றி அமைக்க எத்தனிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு மாற்றமும் குறுகிய காலத்தில் சாத்தியப்படாது, மாற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். தேசிய மக்கள் சக்தி மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நீண்ட கால எல்லை தேவைப்படுவதாகக் கருதுகிறது.
நிறைவேறாத வாக்குறுதிகள்
ஆனால் நிலையானதொரு அரசாங்கம் எப்போதும் ஜனநாயக சூழலில் செயல்படுவது அரிது. மக்களின் ஆணையை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதும் உணர்ந்து கொள்வதும் குறைவு. அதனை அவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதே வரலாறாக இருந்து வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அதன் கொள்கைத் திட்டங்கள் மிகத் தெளிவாகவே இருந்தன. அதன் வாக்குறுதிகள் மிகவும் திட்டவட்டமானதாகவும் அமைந்திருந்தன.
ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது எனக் கூற முடியாது. அது மக்களுக்குக் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பிலேயே இருக்கின்றன. அனுரகுமார திசாநாயக்கவைப் பொறுத்தவரையில் தனது பதவிக்காலத்தில் நான்கில் ஒரு பகுதியை நிறைவு செய்து விட்டார். அவரது ஆட்சியில் 16 மாதங்கள் முடிந்து போன நிலையில், இனி எஞ்சிய காலத்தில் தன் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்?
முந்தைய தலைவர்களின் அனுபவம்: சந்திரிகா குமாரதுங்க அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறிப் போரை நடத்தினார். மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி எனக் கூறிவிட்டுப் பாதையில் இருந்து மாறினார். ரணில் மற்றும் மங்கள சமரவீரவுடனான முரண்பாடுகளால் அவரது ஆட்சிக்காலம் தோல்வியிலேயே முடிந்தது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் அனுர
வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வருகின்ற தலைவர்கள் எல்லோருமே அதனை ஆரம்ப காலத்தில் நிறைவேற்றத் தவறி விடுகிறார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு முடிவெடுப்பதை இழுத்தடிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்குள் அவர்கள் வழக்கமான நிகழ்ச்சி நிரலுக்குள் தாமாகவே உள்ளீர்க்கப்பட்டு விடுகிறார்கள்.
இது இலங்கையின் ஆட்சி அதிகார முறைமையில் உள்ள முக்கியமான ஒரு பிரச்சினை. சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் வழிமுறையானது, எப்போதும் மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்ற தலைவர்களையும் அதற்குள்ளேயே இழுத்துக் கொள்கிறது. அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார், பல்வேறு தீர்வுகளையும் முன் வைத்திருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவரால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. அவர் வழக்கமான ஒரு சிங்களத் தலைவராகவே இப்போது மாறிக் கொண்டு விட்டார். இனிமேல் அவரால் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் செயல்பட முடியாது. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படக்கூடிய நிலை இருக்காது. ஏனென்றால் அவர் இப்பொழுது சராசரி சிங்கள பௌத்த அரசியல்வாதியைப் போல மாற்றப்பட்டு விட்டார். இனி அவரால் வந்த வழிக்குத் திரும்பிச் செல்ல முடியாது.
எல்லையைத் தாண்டாத தற்துணிவு
அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குச் செவ்வியளித்திருந்த நோர்வேயின் விசேட சமாதான தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இராணுவ வழிமுறைகளால் எவ்வளவு தூரம் வர முடியும் என்பதைப் பிரபாகரன் புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆயுதப் போராட்டத்திற்கான எல்லையைப் பற்றியே அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பின்னர் அவர் மாற்றத்திற்குத் தயாராக இல்லாதிருந்தது தான், அவரது அழிவிற்குக் காரணம் என்பது சொல்ஹெய்மின் கருத்து.
அதுபோலத் தான், இலங்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு சிங்கள அரசியல் தலைவர் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்ற எல்லையும் உள்ளது. இந்த எல்லையைத் தாண்டுவதற்கான தற்துணிவு அனுரகுமார திசாநாயக்கவிடம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால் அவர் இதுவரை பிரச்சினைகளை அணுகிய விதம் அந்த நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. அதற்குள்ளாகவே அவர் மடைமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தான், 15 ஆண்டுகளைப் பற்றி அவரது அமைச்சர்கள் கனவு காணத் தொடங்கியிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments