Epstein Case & Noam Chomsky - Elugai Media

எப்ஸ்டீன் விவகாரம்: சோம்ஸ்கியை முன்னிறுத்தி ஒரு முழுமையான பதிவு

எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்

எப்ஸ்டீன் விவகாரத்தை மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன்னிலைப்படுத்திக் கொண்டு எழுதப்படும் முகநூல் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படும் அனைத்துத் தரப்பினரும் 'பீடோபைல்கள்' (Pedophiles) எனும் உணர்வு தரும் சித்திரம் இது. இது மிகத்தவறான ஒரு மனநிலை. எப்ஸ்டீனது பாலியல் வக்கிர-கிரிமினல் நடத்தைக்கு அப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக அளவில் லாபி செய்யும் அரசியல் இலக்கும் அவனுக்கு இருந்திருக்கிறது.

அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் தவிர கல்வியாளர்களுடனும் அவன் தொடர்பைப் பேணி வந்திருக்கிறான். இசை, தத்துவம், உலக அரசியல், கோட்பாடு என்றெல்லாம் அவன் உரையாடியிருக்கிறான். அவனது பாலியல் நடத்தைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளையும் பிரித்து அணுகவில்லையென்றால், அவனது கோப்புகளில் பெயர் உதிர்க்கப்படும் அனைவரையும் குற்றவாளிகளாக மதிப்பிடும் தவறுக்கு இட்டுச் செல்லும். இத்தகைய பார்வை வணிகரீதியான ஊடக சென்சேஷனலிசத்திற்குப் பயன்படுமே தவிர, உண்மையை அறியப் பயன்படாது.

ஊடக பகுப்பாய்வு பற்றிய சித்திரம்

ஊடகங்களின் போக்கும் அரசியல் பின்னணியும்

அமெரிக்காவின் 'நியூயார்க் போஸ்ட்', இங்கிலாந்தின் 'டெய்லி மெயில்', 'தி சன்', 'தி டெலிகிராப்' போன்ற பத்திரிகைகளில் சொல்லி வைத்தது போல ஒரே விஷயம் தலைப்புச் செய்தி: "புதின் ரஷ்யப் பெண்களை அமெரிக்காவிற்கு அனுப்பி, எப்ஸ்டீன் மூலம் அமெரிக்க மேல்தட்டு வர்க்கத்தினரை மோசமான செக்ஸ் போஸ்களில் உலக அளவில் கொச்சைப்படுத்தச் செயல்பட்டாரா?" எனும் 'சந்தேகம்' எழுப்பப்படுகிறது. கூடுதலாக இவர்கள் சொல்லும் செய்தி: எப்ஸ்டீன் ஒரு ரஷ்ய உளவாளி.

இந்த பத்திரிகைகள் எவரால் நடத்தப்படுகின்றன, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் இவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பாருங்கள். ஏன் இப்படிப் பார்க்க வேண்டும்?

இதுவரை எப்ஸ்டீன் தொடர்பாக வெளிவந்த ஆதாரங்களின்படி, அவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக லாபி செய்தார், இஸ்ரேல் ஜனாதிபதிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் என்பதுதான் உண்மை. பாலஸ்தீனப் பிரச்சினையில் இந்த ஏடுகள் முழுமையாக இஸ்ரேலை ஆதரித்து வரும் வலதுசாரி இதழ்கள். இஸ்ரேலை அரசியல் ரீதியிலும் அமெரிக்க அதிகாரக் கும்பலை ஒழுக்க அளவிலும் விடுவிக்க முயலும் வலதுசாரிகளின் பிரச்சாரமே 'எப்ஸ்டீன் ஒரு ரஷ்ய உளவாளி' என்பது.

எப்ஸ்டீன் கோப்புகளும் சோம்ஸ்கி மீதான அதிர்ச்சியும்

நோம் சோம்ஸ்கி

எப்ஸ்டீன் விவகாரத்தில் உலக இடதுசாரிகளை அதிர்ச்சியூட்டிய ஒரு விஷயம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கடும் விமர்சகரும், புகழ்பெற்ற அறிஞருமான நோம் சோம்ஸ்கி எப்ஸ்டீனுடன் தொடர்புகொண்டிருந்தார் எனும் செய்தி. சோம்ஸ்கி எப்ஸ்டீனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். எப்ஸ்டீன் ஏற்பாட்டில் இஸ்ரேலிய ஜனாதிபதி எகுத் பராக்குடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார். எப்ஸ்டீன் தொடர்பான ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அவருக்குப் பணம் செலுத்தப்பட்டது போன்ற கோப்புகள் வெளியானபோது இடதுசாரிகள் அதிர்ந்தனர்.

2008-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் மீதான குழந்தை பாலியல் குற்றச்சாட்டு வெளியான பின்னரும், அதைக் கண்டிக்காது சோம்ஸ்கி தொடர்ந்து அவரோடு தொடர்பைப் பேணி வந்தார் என்பதற்கான மின்னஞ்சல்களும் இப்போது வெளியாகியுள்ளன. சோம்ஸ்கி எப்ஸ்டீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் மிகவும் தரம் தாழ்ந்தவை. பெண்கள் உரிமைப் பிரச்சினை, வல்லுறவு குறித்து எந்தவிதமான விமர்சன உணர்வோ, குற்றவுணர்வோ இல்லாத அளவு சோம்ஸ்கி எப்ஸ்டீனை ஆதரித்து எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

கருத்துச் சுதந்திரம் குறித்த சோம்ஸ்கியின் பார்வை

இப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள, கருத்துச் சுதந்திரம் என்பதாக சோம்ஸ்கி எதனைக் கருதுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சோம்ஸ்கி தான் எதிரி எனக் கருதுபவர்களுக்கும் எல்லையற்ற கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கருதியவர். சோம்ஸ்கியின் பார்வை இதுதான்: "நீங்கள் வெறுக்கும் கருத்துகளுக்காகவும் அந்த உரிமையைத் தீவிரமாகப் பாதுகாத்து நிற்க வேண்டும், அல்லது அதை நிராகரித்து ஸ்டாலினிச-பாசிச தரநிலைகளை நீங்கள் விரும்ப வேண்டும்."

பாசிசத்தை ஏற்பவர் அல்ல என்றாலும், ராபர்ட் பரீசன் எனும் பிரெஞ்சுப் பேராசிரியர் யூதப் படுகோலையே நிகழவில்லை எனும் நூலை எழுதியபோது அதைத் தடை செய்யக் கூடாது என்று சோம்ஸ்கி எழுதினார். நூல் எழுதுவதும் கருத்துச் சுதந்திரம் என்பது அவரது வாதம். இதேபோலத்தான் எப்ஸ்டீன் உடனான சந்திப்புகளையும் அவர் அணுகியிருக்கலாம். ஆனால், ஒரு தார்மீகப் பண்பு கொண்ட மனிதராக நாம் மதிப்பிடும் சோம்ஸ்கி, இத்தகைய மின்னஞ்சல்கள் மூலம் நம் மதிப்பிலிருந்து வீழ்ந்துவிடுகிறார்.

முடிவும் தார்மீகப் பார்வையும்

மோதல் பகுப்பாய்வு

[Global Political Context & Analysis]

எப்ஸ்டீன் கோப்புகள் ஒருபுறம் அமெரிக்க அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மறுபுறம் சோம்ஸ்கி போன்ற ஒரு அறிஞரின் வீழ்ச்சியையும் காட்டுகின்றன. இருப்பினும், எப்ஸ்டீன் உடனான தொடர்பு காரணமாக சோம்ஸ்கி தனது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா என்றால் 'இல்லை' என்பதுதான் பதில். 2023-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரை அவர் இஸ்ரேலிய எதிர்ப்பைத் தெளிவாகவே முன்வைத்திருக்கிறார்.

எனவே, நாம் சோம்ஸ்கியை எவ்வாறு அணுகுவது? ஒரு மொழியியல் அறிஞராக, ஊடகவியல் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கோட்பாட்டாளராக அவரைப் புறக்கணிக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. ஆனால், பெண்களது உரிமை மற்றும் பாலியல் வக்கிரம் தொடர்பான அவரது நிலைப்பாடு அவர் மீது படிந்த நீங்காத கறை என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த உணர்விலிருந்தே நம்மை நோகாது தார்மீக மனிதர்களாக உருவக்கிக் கொள்ள முடியும்.