வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் சொல்லும் செய்தி!
யுத்தங்களை வெறுப்பவராகத் தன்னை பிரகடனப்படுத்தி அதற்காக நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அண்மைக்காலமாகப் பேசிவரும் அமெரிக்க ஜனாதிபதி #Trump வெனிசுலா மீது ஏகாதிபத்தியத்தைச் செலுத்தியுள்ளார். தாக்குதலை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபரையும் அவரின் குடும்பத்தையும் கடத்திச் சென்றுள்ளது அமெரிக்கா.
இதனை நிச்சயம் இந்த வருடம் சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பெண் மரியா கொரினா (María Corina) அமெரிக்காவிடம் முன்வைத்த கோரிக்கை நிறைவேறியுள்ளதாக மகிழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் சிவ முருகுபிள்ளை.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்யா அமெரிக்காவின் இந்த வெனிசுலா இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் விடயம் மட்டுமல்ல சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றது. இதே மாதிரியான கருத்துக்களை சீனா, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தமது கண்டனங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளன என்கிறார் எழுத்தாளர் சிவ முருகுபிள்ளை அவர்கள்.
இதற்கும் அப்பால் உலக நாடுகள் பலவும் இச் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.
இக்கருத்தை வலியுறுத்தி, புகழ்பெற்ற மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் பேராசிரியருமான Jason Hickel (@jasonhickel) அவர்கள் தனது பதிவில்,
➢ Bombing Venezuela while coordinating a genocide in Palestine while threatening to attack Iran (again) while destabilizing Somalia while carrying out a heist in the DRC... US imperialism is the greatest threat to peace and security in our world today. Remember that the US *does not care* about the people of Venezuela. It is *explicitly* about US control over oil, capital accumulation, and geopolitical power.
பேராசிரியர் Jason Hickel அவர்களின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், போதைப்பொருள் கடத்தலின் தலைவராக வெனிசுலா அதிபர் மதுரோ செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை அண்மைய நாட்களில் அமெரிக்க அதிபர் #Trump முன்வைத்து வருகின்றார். கூடவே இதில் கிடைக்கும் பணத்தைத் தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டி வருகின்றது அமெரிக்கா.
உண்மையில் உலகின் அதி உயர் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதே அமெரிக்காவின் இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம். இதற்கு அப்பால் அதன் கனிம வளங்களைச் சூறையாடுவதற்கு அந்த நாட்டைத் தன் வசப்படுத்துவது அல்லது அதற்கு ஏற்ற தனது பொம்மை அரசை அங்கு நிறுவுவதே அமெரிக்காவின் நோக்கம் எனச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகின்றது.
இடதுசாரி கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் வெனிசுலா மீதான தாக்குதலை நடத்துவதற்கான அரசியல் காரணமும் இங்கு பிரதானமானது. வெனிசுலா அரசு ஒரு காலத்தில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் வசம் இருந்த தனது எண்ணெய் வளங்களை, நாட்டின் வளங்களைத் தனியார் உடைமையில் இருந்து அரசுடைமையாக்கி மக்களுக்குச் சமமாகப் பகிரும் பொதுவுடைமையாக்கியது. இந்தச் செயற்பாட்டை வெனிசுலா செய்திருப்பது அமெரிக்காவின் பாரிய வெறுப்பிற்கு வெனிசுலா உள்ளாவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது.
லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீட்டின் நீண்ட வரலாறு:
குவாத்தமாலா(1954): சிஐஏ ஆதரித்த ஆட்சிக் கவிழ்ப்பு.
கியூபா(1959–1961): பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பில் தோல்வி.
பிரேசில்(1964): இராணுவச் சதித்திட்டத்திற்கு உதவியது.
டொமினிகன் குடியரசு(1965): அமெரிக்கப் படைகள் படையெடுத்து அரசாங்கத்தை நிறுவ உதவியது.
சிலி(1970–1973): அகஸ்டோ பினோஷேயின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது.
பனாமா(1989): மானுவல் நோரிகாவை அகற்ற அமெரிக்கப் படைகள் படையெடுத்தன.
இந்த வரலாற்றுத் தகவல்களில் இருந்து இன்று வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல், அதிபரைக் கடத்தியதை நாம் எந்த வகைக்குள் அடக்கலாம் என்ற முடிவிற்குள் வர முடியும். அடுத்த வீட்டுக்காரருக்குப் பிரச்சினை என்று நாம் இன்று மௌனமாக கடந்தால் நாளை எம் வீட்டிற்குள் இது நடைபெறுவதற்கு வாய்ப்பை நாமே திறந்து விட்டதாக அமைந்து விடும்.
இவ்வாறானதொரு முயற்சியைத் தான் தமிழீழ மண்ணிலும் ஏகாதிபத்திய அரசுகள் முன்னெடுக்க முயற்சித்த போதிலும், உறுதியும் தியாகமும் மிக்க தமிழீழ மண் மண்டியிடவில்லை.
எனவே சமாதானம், ஜனநாயகம், அமைதியை விரும்பும் மக்களே! அமெரிக்காவின் ஏனைய நாடுகளின் இந்த இறையாண்மைக்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராகக் குரல் கொடுப்போம். அமெரிக்க ஏகாதிபத்திய ஒற்றைத் துருவ அரசியலின் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளை இன்று உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் வரலாறு ஒரு போதும் பின்னோக்கி நகர்வதும் இல்லை. அதனை நாம் சிலியில் 50 ஆண்டுகள் கடந்து கண்டோம். இங்கும் நாம் அதனை காண்போம்.
0 Comments