மாமனிதர் குமார் பொன்னம்பலம்: ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயம்!
தமிழீழ மக்களின் குரலாக சிங்கத்தின் குகைக்குள் நின்று சீறிய மாமனிதர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த புகழ்வணக்கம். இன்றைய அவரின் நினைவு நாளில் (04.01.2026) அவரின் நினைவு சுமந்து...
மாமனிதர் குமார் பொன்னம்பலம் (1940 - 2000)
குமார் பொன்னம்பலம் (ஆகஸ்ட் 12, 1940 - ஜனவரி 5, 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். இவர் 2000, சனவரி 5 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரை தமிழ் பேசும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.
சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு புலியாக உறுமிய குமார் பொன்னம்பலத்துக்கு அவர் மரணமடைந்த பின்னர் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 'மாமனிதர்' விருது வழங்கி கௌரவித்தார். குமாரின் மனைவியும், பிள்ளைகள் இருவரும் நேரில் சென்று அதனைப் பெற்றுக்கொண்டார்கள்.
ஈழத்தமிழர் விடுதலை வேள்வியில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து உழைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரை நாம் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிகழ்வு ஏற்பட்டது. அவருடைய தந்தையார் உலக மாமேதை ஜி.ஜி. பொன்னம்பலம் இலங்கை வரலாற்றில் ஒப்பாரும், மிக்காரும் அற்ற வழக்கறிஞர். தமது ஆங்கில நாவன்மையால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டவர்.
ஒற்றையாட்சிக் கட்டமைப்பக்குள் சிங்கள மேலாதிக்கம் எப்படி தொழிற்படும் என்பதை உணர்ந்து 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற கோஷத்தை முழங்கச் செய்தார். சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை கொண்டுவந்தவர். அதே வழியில் சட்டத்துறையிலும், அரசியலிலும் செயற்படுவதற்கு தமது புத்திரர் குமார் பொன்னம்பலத்தையும் வழிநடத்தினார்.
தந்தை ஜி.ஜி-க்குப் பின்னர் கட்சியைப் பொறுப்பேற்றார் அமரர் குமார் பொன்னம்பலம். புகழ்பெற்ற வழக்கறிஞர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றதோடு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். இவர் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காக பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார். செம்மணி புதைகுழிகள் பற்றிய செய்திகள் வெளிவருவதற்கு காரணமாக இருந்த கிருஷாந்தி பாலியல் வல்லுறவு வழக்கு, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலைகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளின் போது கொடுமைகள் புரிந்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக வாதிட்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்.
துணிச்சலுடன் களமிறங்கிய அரசியல், சட்டப் போராளி
1996 இல் பயங்கரவாத தடை சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை ஆஜராகுபவர்கள் பயங்கரவாதிகள் என்று மகுடம் சூட்டப்பட்ட வேளையில், தாம் தமிழீழவாதி எனக் கூறி எவ்வித இலாபமும் கருதாமல் வழக்காடியவர் குமார் பொன்னம்பலம். அதுமாத்திரமன்றி சிறைகளில் வாடும் பிஞ்சு உள்ளங்களுக்கு 'குமார் அண்ணை எங்களை காப்பாற்றுவார்' என்ற நம்பிக்கையையும் ஊட்டியவர்.
1983 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை தமிழ் மக்களினது வாழ்க்கை நிலைகுலையச் செய்தபோது, தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் காணாமல் போவதும் அதிகரித்தன. பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்று தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்க யாரும் முன்வரவில்லை. அவற்றுக்காக நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் பெற்றார். பேரினவாதிகளின் எதிர்ப்புகளை செவிமடுக்காது, கொழும்பில் தமது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு சிங்கத்தின் குகையிலிருந்து உறுமிய புலி போல செயற்பட்டார்.
உண்மைகளை அம்பலப்படுத்தியவர் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இலங்கையின் இனப்பிரச்சினையின் உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மகாநாடுகள், கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு தமது சிறந்த ஆங்கில புலமையூடாக இனப்பிரச்சனைகளின் பல்வேறு பரிமாணங்களையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தினார்.
"எங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க யாரிடமும் கைகட்டி நிற்கவோ, கெஞ்சிக் கேட்கவோ வேண்டிய அவசியமில்லை" என்று உரக்கக் கூறியவர்.
தமக்கு உயிர் ஆபத்து இருக்கின்றது எனத் தெரிந்து கொண்டும் சளைக்காது தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டிச் செயல்பட்டவர். எதிர்காலத்தில் நில அபகரிப்புக்கள், தமிழ் மக்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிபோகும் நிலை போன்ற பல ஆபத்துக்கள் இருப்பதைத் தீர்க்கதரிசியாகச் சொல்லி வந்தவர்.
நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும் உயிருக்கும் அஞ்சாது தம்மையே அர்ப்பணித்த அவரது வாழ்வு சிறப்பானது.
அவரது குடும்பத்திலிருந்து அடுத்த தலைமுறை, மூன்றாம் தலைமுறையால் மக்களுக்கும் இந்நாட்டுக்கும் செய்யப்பட போகின்ற அரசியல் பங்களிப்பு என்னவென்பதை தமிழ்மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
0 Comments