elugai

யார் இந்த எல்.ஜி? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பாலமாகத் திகழ்ந்த தளபதி எல். கணேசனின் வீர வரலாறு!

மொழி வணக்கம் செய்தவருக்கு என் புகழ் வணக்கம்: மறைந்தார் மொழிப்போரின் தளகர்த்தர் தளபதி எல். கணேசன்!

யார் இவர்..?

மொழிப் போரின் முக்கியப் பாலமாகச் செயல்பட்ட எல்.கணேசன், அண்ணாவின் வழிவந்த திராவிட இயக்க சித்தாந்தராகவும், தமிழ் இளைஞர் அரசியலின் எழுச்சிக் குறியீடாகவும் விளங்கியவர். அவரது சிறப்புகள் குறித்துப் பார்க்கலாம்.

திமுகவில் பேச்சுக்கு இணையாக எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டவர்களில் ஒருவர் எல்.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் எல். கணேசன். தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில், சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த கணேசன் சட்டம் பயின்றவர். கல்லூரிக் காலத்தில் கம்யூனிஸ்ட் சித்தாத்தங்களில் ஈடுபாடு காட்டிய இவர், அண்ணாவின் எழுத்துகளாலும் கொள்கையாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் சுதந்திர இந்தியாவை அதிரவைத்த இந்திக்கு எதிரான மாணவப் போராட்ட வரலாற்றில், கணேசனின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. மாணவர்களுக்கும் திமுகவுக்கும் இடையே பாலமாகவும், போராட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார். அண்ணாவைத் தலைவராகவும் திராவிட சித்தாந்தத்தைக் கொள்கையாகவும் ஏற்றுக்கொண்ட மாணவர்கள் கட்சிக்கு வெளியே இருந்தார்கள். அவர்களை திமுகவுடன் இணைக்கும் பாலமாக கணேசன் விளங்கினார்.

தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக 1938, 1948, 1950, 1963 என இந்த நான்கு போராட்டங்களிலும், அண்ணா முக்கியப் பங்காற்றியதோடு, தலைமையும் வகித்துள்ளார். அப்போது மாணவர்கள் விபரீதமாக வன்முறையில் ஏதும் ஈடுபடக் கூடாது என்பதே அண்ணாவின் எண்ணமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் எல். கணேசன் போன்றவர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1962 இல் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது, ‘அகில இந்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு’ என்ற பெயரில் அமைப்பு தொடங்கிப் போராடிய எல்.கணேசன், 1965இல் இரண்டாவது பொறுப்புக்கு நகர்ந்தார். அதாவது, இந்தப் போராட்டத்தை மாணவர் திமுக செயலாளராக ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அப்போது ‘தமிழ் மொழி காக்கப்பட இந்தித் திணிப்பை எதிர்ப்பது முக்கியம்; அதேநேரம் மாணவர்கள் வன்முறையை நோக்கிச் சென்றுவிடக் கூடாது’ என்ற அண்ணாவின் எண்ணங்களை, களத்தில் இருந்த மாணவர்களுக்கு தீவிரமாக வலியுறுத்தியதில் எல்.கணேசன் முக்கியப் பங்காற்றினார்.

1965 இல் நடந்த போராட்டத்தைத் தொடர்வதையே மாணவர்களும் விரும்பினார்கள். அப்போது அண்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தபோது, எல்.கணேசன் மாணவர்கள் பக்கமே நிற்பது என முடிவெடுத்தார். ஆனால், ராணுவம் வந்திறங்கிய பின் மாணவர்கள் கொடிய தாக்குதலுக்கு உள்ளானதை கண்டு, அண்ணா சொன்ன முடிவையே எடுக்கும் சூழலுக்கு எல்.கணேசன் நகர்ந்தார். அதன்பின்னர், திமுகவில் தீவிரமாக இயங்கிய அவர், அண்ணாவின் தலைமையிலான திமுக ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தார். அண்ணாவைத் தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்ட எல்.கணேசன், இந்திய வரலாற்றில் அண்ணா அளவுக்கு அரசியல்களம் நோக்கி மாணவர்களை இழுத்துவந்த தலைவர் யாரும் கிடையாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

ஏராளமான மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க செய்தார். திமுகவில் மாணவரணி செயலாளராக இருந்தார். இந்தி எதிர்ப்பை வலுவாகப் பின்பற்றி, தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது, மொழிப்போர் தியாகி என்ற பெயர் கிடைக்க காரணமானது.

அந்தச் சமயத்தில், அண்ணாவிடம் இந்தி எதிர்ப்பு குறித்து கேட்டபோது, 'என் கையில் எதுவும் இல்லை, எல்லாம் எல்.ஜியிடம் உள்ளது' என்றாராம்.

1967 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல்.கணேசன் போட்டியிடுகிறார். சென்னையிலேயே வலம் வந்த எல்.ஜியை மறைந்த முதல்வர் கலைஞர் மு கருணாநிதி சொந்த ஊரில் போட்டியிடச் சொல்லி அனுப்பினார். அப்போது, மதுக்கூர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் செல்வந்தரான தண்டாயுதபாணி போட்டியிட்டார். எளியவரான எல்.ஜி அவரை எதிர்த்து போட்டியிட்டார். எல்.ஜியிடம் தேர்தல் செலவிற்குப் பணம் இல்லை.

இதையறிந்த கருணாநிதி, மதுக்கூரில் காகிதப்பூ நாடகம் போட்டு அதில் வசூல் ஆன ரூ.4,000 பணத்தை எல்.ஜி கையில் கொடுத்து பிரசாரம் செய்ததுடன், ஜெயிச்சுட்டு வாய்யானு சொல்லிட்டு போனாராம். எல்.ஜியும், எம்.ஜி.ஆர், மாதவனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல்.ஜியின் வளர்ச்சியில் கலைஞர் மு. கருணாநிதி தனி கவனம் செலுத்தினார்.

1987ல் திமுக ஆட்சி அமைகிறது. எல்.ஜி அமைச்சர் ஆவார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆளுநரைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை கொடுக்கச் சென்றபோது, 'நீ சட்டத்துறை அமைச்சர்யா'னு சொல்லிட்டு போனாராம் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அமைச்சர்கள் பட்டியலில் எல்.ஜி பெயர் இடம் பெறவில்லை. உடனே, காரில் ஊருக்குக் கிளம்பி விட்டார் எல்.ஜி. கார் திண்டிவனத்தைக் கடந்து சென்ற போது போலீஸார் காரை மறைத்து, முதல்வர் உங்களைத் திரும்பி வரச் சொன்னார் என்றுள்ளனர்.

பதைபதைத்து நேரில் சென்ற எல்.ஜியிடம், 'உன்னை முதலமைச்சரின் பேரவை செயலாளராக்கியுள்ளேன்' என்றாராம். தன் மனம் வருந்தக் கூடாது என்பதை உணர்ந்து கலைஞர் மு. கருணாநிதி செய்த செயலை எண்ணி கைகளைப் பற்றிக் கொண்டாராம் எல்.ஜி.

கட்சி பொதுக்குழுக்களில் முரசொலி மாறன் சில கருத்துக்களை முன்வைப்பார். முரசொலி மாறன், கலைஞர் மு. கருணாநிதியின் எண்ணத்தைப் பேசக்கூடியவர் என்பதால் எதிர் கருத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் எல்.ஜி, முரசொலி மாறன் பேசியதில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பாராம்.

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக வைகோவுடன் சென்று மதிமுகவில் இருந்தார். எதிர் அணியில் இருந்தாலும் கலைஞர் மு. கருணாநிதி, எல்.ஜி மீது தனிப்பட்ட முறையில் பாசம் காட்டினார். பின்னர் மீண்டும் கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டவருக்கு உரிய அங்கீகாரம் தந்தார் கருணாநிதி. கல்வி ஆற்றல், பேச்சாற்றல் மிக்க எல்ஜியின் பேச்சை கலைஞர் மு. கருணாநிதியே பலமுறை ரசித்து பாராட்டியிருக்கிறார்.

மூன்று முறை ஒரத்தநாடு தொகு எம்.எல்.ஏ, எம்.எல்.சி, ராஜ்யசபா எம்.பி, திருச்சி மக்களவை எம்.பி உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார்.

அரசியலில் இன்னும் பல உயரம் தொட்டிருக்க வேண்டியவர், இப்போது எட்டாத உயரத்திற்குச் சென்று விட்டார்.

Post a Comment

0 Comments