elugai

டக்ளஸ் கைது - சிக்கப் போவது யார்?

டக்ளஸ் கைது - சிக்கப் போவது யார்?

- கார்வண்ணன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம், எந்தவொரு அரசியல் தலைவர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்ற செய்தியைக் கூறமுனைந்தது அரசாங்கம். இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரமுகர்கள் அப்போது கூறியிருந்தனர்.

ஆனால் அடுத்து வந்த நாட்களில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள் யாரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. தமிழ் அரசியல் பிரமுகர்கள் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என, என்பிபி அரசியல் பிரமுகர்கள் சிலர் கூறியிருந்தார்கள். இவ்வாறான நிலையில், கடந்த டிசெம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அன்று மாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரால் அறிவிக்கப்பட்டது.

Douglas Devananda Arrest

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ள காட்சி (கோப்புப்படம்)

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கைது நடவடிக்கை என்ற பரவலான கருத்து காணப்படுகிறது. நீதிமன்ற விடுமுறை நாட்கள் என்பதால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுபவர்களை, மூன்று நாட்கள் தடுத்து வைக்க முடியும். அவ்வாறே அவரை 72 மணி நேரம் தடுத்து வைக்க, பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுமதி பெற்றனர்.

எனினும், விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா பதில் நீதிவான் முன்பாக நிறுத்தப்பட்டு, டக்ளஸ் தேவானந்தா மீண்டும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்ட போதும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அதனை நிராகரித்துள்ளார்.

துப்பாக்கி விவகாரமும் விசாரணைகளும்

2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக குழுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பான விசாரணைகளில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த துப்பாக்கி எப்படி பாதாள உலக குழுவிடம் சென்றது என்ற கேள்விக்கான பதிலே டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து தேடப்படுகிறது.

இதுமாத்திரமல்ல, ஈபிடிபிக்கு வழங்கப்பட்ட இன்னும் 19 துப்பாக்கிகள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த துப்பாக்கிகளை தாங்கள் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், மீள ஒப்படைத்து விட்டதாக டக்ளஸ் தேவானந்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

EPDP Weapons History

ஈபிடிபி ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் வரலாற்றுத் தரவுகள்

போர்க்காலத்தில் ஈபிடிபியினருக்கு அரசாங்கமே ஆயுதங்களை வழங்கியது. இராணுவம், இராணுவப் புலனாய்வுத்துறை ஊடாகவே இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஒரு துணை ஆயுதக்குழுவாகவே இராணுவத்தினரால் அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்தக் காலகட்டத்தில், ஈபிடிபியினரால் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் தொடர்பாக, அந்தக் கட்சியின் உறுப்பினர்களராக இருந்தவர்களே தகவல் வெளியிட்டனர்.

சமீபத்தில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் சதா (சுப்பையா பொன்னையா), தினமுரசு ஆசிரியர் அற்புதன், அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் போன்றோர் படுகொலை தொடர்பாகவும், வதை முகாம்கள் பற்றியும் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையிலும் ஈபிடிபி மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

அரசியல் கவசமும் தற்போதைய நிலையும்

தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் டக்ளஸ். கடந்த கால அரசாங்கங்களுடன் பேணி வந்த நெருக்கமான உறவுகள் அவருக்கு ஓர் அரசியல் கவசமாக இருந்தது. இப்போது அந்த கவசம் நீங்கிய நிலையில், சட்டத்தின் முன் தனது தரப்பை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

CID Investigation

அரசாங்கம் இவ்வாறான விடயங்களில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முற்படுகிறதா அல்லது இவ்வாறான கைதுகளின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்ப முற்படுகிறதா என சந்தேகிக்கின்ற நிலையும் காணப்படுகிறது. துப்பாக்கி தொடர்பான விசாரணைகளில் டக்ளஸ் தேவானந்தா தான் துப்பாக்கியை மீள ஒப்படைத்து விட்டதாக உறுதிப்படுத்தினால், அது விசாரணைகளை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அந்த விசாரணை இராணுவத்திற்கு எதிராக திரும்புவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

முற்றும்.

Post a Comment

0 Comments