"பெரியார் இல்லையென்றால் என் காதல் திருமணமே நடந்திருக்காது!"
பெரியார் திடலில் மாரி செல்வராஜ் ஆற்றிய அதிரடி உரை
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரியாரிய கொள்கைகள் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், காதலிலும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவர் உருக்கமாகப் பேசினார்.
தனது உரையில், தான் எப்படி பெரியாரிய கொள்கைகளுக்குள் வந்தேன் என்பதை மாரி செல்வராஜ் விளக்கினார். "எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது என் மனைவி திவ்யா தான். அவர் ஒரு தீவிரமான பெரியாரிஸ்ட். முதலமைச்சர் ஸ்டாலின் கைகளால் பெரியார் விருது வாங்கிய அவரது புகைப்படத்தைப் பார்த்த பிறகே, எனக்கும் பெரியார் மீது ஆர்வம் வந்தது" என்று குறிப்பிட்டார்.
தனது காதல் திருமணத்தின் போது ஏற்பட்ட சவால்களைப் பற்றிப் பேசுகையில், "சாதிப் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்த ஒரு காலக்கட்டத்தில், எந்தவித பயமுமின்றி என் மனைவியின் வீட்டுக்குள் நான் நுழைய முடிந்தது என்றால், அதற்கு அந்த வீட்டில் பெரியார் இருந்ததுதான் காரணம். அந்தச் சிந்தனைதான் எங்களை இணைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெரியாரை விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ், "நீங்கள் பெரியாரை விடச் சிறந்த சிந்தனையாளர் என்று நிரூபிக்க விரும்பினால், அதை உங்கள் செயலில் காட்ட வேண்டும். அவரைத் திட்டுவதன் மூலம் நீங்கள் பெரிய ஆளாகிவிட முடியாது" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
முதல் முறையாகப் பெரியார் திடலுக்கு விருது வாங்க வந்துள்ளதைப் பெருமையாகக் கருதுவதாகவும், தனது வாழ்நாள் போராட்டங்கள் மற்றும் கலைப் படைப்புகள் இந்த திடலில் கொண்டாடப்படுவதைத் தான் ஒரு லட்சியமாக வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாரி செல்வராஜின் இந்தப் பேச்சு தற்போதைய அரசியல் சூழலில், குறிப்பாகச் சீமான் போன்ற தலைவர்களின் கருத்துகளுடன் ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுவதால், இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 Comments