சிறப்புக்கட்டுரை: தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்
ஐ.நா. அறிக்கையும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ஜெரிமி லாரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி “இலங்கை- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.
“இலங்கையில் மோதல்களுடைய தொடர்புடைய பாலியல் வன்முறைக்கு பொறுப்புக்கூறல்“ என்ற தலைப்பில்- “நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் நீதிக்கான நம்பிக்கையையும் கூட“ என்ற உப தலைப்பில் - இந்த அறிக்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
படம்: ஐ.நா மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான சர்வதேச ஆவணங்கள்
தமிழின அழிப்புக்கான ஒரு முயற்சியாக, பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது இந்த அறிக்கையில் உறுதியாகப் பதிவாகியிருக்கின்றது. திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், இதனை ஒரு இனஅழிப்பு செயலாக அடையாளப்படுத்த முடியும் என்றும், பொறுப்புக்கூறலுக்கான ஒரு புதிய வெளியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது இந்த அறிக்கை.
அறிக்கையின் அறிமுகப் பகுதியிலேயே, பாலியல் வன்முறை அரச படைகளால் “வேண்டுமென்றே, பரவலான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில்“ மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தனித்தனி சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல், ஒரு மூலோபாய கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என ஐ.நா. குறிப்பிடுகின்றது.
இலங்கை கடற்படை, விமானப்படை, குற்றப் புலனாய்வுத்துறை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றின் உறுப்பினர்களுடன், இவர்களுடன் தொடர்புடைய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற துணை இராணுவ குழுக்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
படம்: சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல்
மோதலின் போதும் மோதலுக்கு பின்னரான கால கட்டத்திலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 23 பெண்களும் 4 ஆண்களுமாக, மொத்தம் 27 பேர் இந்த அறிக்கையில் சாட்சியம் அளித்திருக்கின்றார்கள். இதன்மூலம், பாலியல் வன்முறைகள் போரின் போது ஆயுதமாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தமிழின அடையாளம் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த கால தொடர்பு இருந்ததாகக் கருதப்பட்ட காரணங்களுக்காக குறி வைக்கப்பட்டுள்ளனர் என்கின்றது இந்த அறிக்கை.
ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 1998ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒரு முக்கியமான முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு குழுவை அழிக்கும் நோக்குடன் செய்யப்படும்போது, பாலியல் வன்புணர்வு இனப்படு கொலைச் செயலாக இருக்கலாம் என அது அங்கீகரித்தது.
ஐ.நா. பரிந்துரையின்படி, குற்றவாளிகளுக்கு எதிராக சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தல் மற்றும் சர்வதேச நீதி முயற்சிகளுக்கான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பான அழுத்தங்கள் குறைந்து கொண்டிருந்த சூழலில், இந்த அறிக்கை அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. காலங்காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, சர்வதேச சட்டத்தின் முன் உண்மைகளைக் கொண்டு செல்வதற்கான தடையை அகற்றப் பயன்படும்.
0 Comments