தமிழ்த் தேசிய விடுதலை அரசியலும் புரிதல்களும்
அய்யா பொழிலன் அவர்களின் கருத்தாக்கத்தின் மீள்பதிவு
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலைப் பேசவேண்டும், ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் தொடர்பு உண்டு, எனவே ஈழத்தமிழர்களைச் சுற்றித்தான் தமிழ்நாட்டு அரசியல் உள்ளது எனப் பேசும் சில புரிதலற்ற புலம்பல்களுக்குச் சில புரிதல்களை முன்வைத்துள்ளார் தமிழின உணர்வாளர் அய்யா பொழிலன் பெருஞ்சித்திரனார் அவர்கள்.
படம்: அரசியல் கருத்தாக்கம் மற்றும் தேசிய இன அடையாளங்கள்
தமிழ் ஈழத்தைத் தமிழீழத் தேசம் என்றே குறிப்பிட வேண்டும். தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்திய அதிகார அரசு, இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமின்றி, தனி இன மக்களாகவே ஏற்பதில்லை.
காஷ்மீரிகள், வங்காளிகள், நாகாலாந்தினர் என யாராக இருந்தாலும் எல்லாரும் இந்தியர் என்று வலுக்கட்டாயமாகப் பதிய வைக்கப்படுகின்றனர். ஓர் இனத்தை அடையாளப்படுத்திக் கொள்வதற்குக்கூட உரிமை இல்லாத அடக்குமுறை அரசையே தமிழீழ விடுதலை இயக்கங்கள் நம்பி வருகின்றன.
எண்ணற்ற அடக்குமுறைகளைக் கடந்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கிறது தமிழ்நாடு. இதற்காகத் தங்கள் உயிரையே ஈகப்படுத்தியவர்கள் பலர். ஆனால், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கோ, உரிமைப் போராட்டங்களுக்கோ தமிழ் ஈழ இயக்கங்கள் துணை நின்றதும் இல்லை, ஆதரவு அறிவித்ததும் இல்லை.
NLPD, PLFD, தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை போன்ற இயக்கங்கள் தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டங்களுக்குத் துணை நின்ற போது, விடுதலைப்புலிகள் இயக்கம் அவற்றைத் தடை செய்திருந்தது மட்டுமின்றி, அவற்றை இயங்க விடாமலும் தடுத்தது.
சீமானை முதலமைச்சராக்க வேண்டும் என்கிற நோக்கம் உடைய கட்சி உறுப்பினர்கள் மட்டும், சீமானை முதலமைச்சராக்குவதே தமிழ்த் தேசியச் செயற்பாடு என்று கருதுகின்றனர். அவர்களின் தமிழ்த் தேசிய இலக்கு என்பது சீமானை முதலமைச்சராக்குவது என்பதைத் தாண்டி, விடுதலை உணர்வு கொண்டதாக மதிப்பிட இயலவில்லை.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைப் பொறுத்த அளவு, இந்தியாவைப் பகைக்காத, எதிர்க்காத, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு உறவு தேவையாய் இருக்கிறது. அத்தகைய உறவுக்குரியவராக அவர்களுக்குக் கிடைத்துள்ளவர் சீமானே. எனவே, தங்கள் விருப்பப்படி சீமானை அரசியல் பேச வைப்பதற்காக அவருக்குப் பொருளியல் ஆதரவு செய்கின்றனர்.
தமிழ்த் தேசிய விடுதலை அரசியலை முன்வைத்துச் சிந்திப்போர் இத்தகைய அவலச் சூழலை விளங்கிக் கொள்ள வேண்டும். தேர்தல் அரசியலுக்கும் உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத்திற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.
0 Comments