பேரிடர் மீட்பு படை: இலங்கையில் வெளியார் தலையீட்டுக்கு இந்தியா வைக்கும் 'ஆப்பு'!
- சுபத்ரா
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) போன்ற ஒரு உடனடி பேரிடர் மீட்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு உதவ இந்தியா முன்வந்திருக்கிறது. இந்தக் கட்டமைப்புக்கு தேவையான பயிற்சிகளையும் உபகரணங்களையும் இந்தியா வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடருக்கு பிந்திய இந்தியாவின் உதவித் திட்டத்தில் இது ஒரு முக்கியமான விடயமாக இருக்கப் போகிறது.
பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் மீட்புப் படையினர் (கோப்புப்படம்)
அண்மைய பேரிடர் இலங்கைக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று, பேரிடரை எதிர்கொள்வதற்கு தயாரின்மை ஆகும். இலங்கையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பெருமளவிலான படையினர் இருந்தபோதும், அவர்களை உடனடியாக ஈடுபடுத்தக் கூடிய ஒழுங்கமைப்புகள் இருக்கவில்லை. பெரும்பாலான படையினர் வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டிருந்ததால், பேரிடர் பகுதிகளில் உடனடி நடவடிக்கைகளில் இறங்க முடியவில்லை.
இந்தச் சூழலில், இந்தியா பேரிடர் மீட்பு படை ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க முன்வந்திருக்கிறது. அண்மைய பேரிடரின் போது, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 80 பேர் ஒரு வாரம் தங்கியிருந்து நிவாரண பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தியாவின் மூலோபாய நகர்வு
இந்தியா தனது பேரிடர் மீட்புக் குழுவை கொழும்புக்கு அனுப்பியது வெறும் மனிதாபிமான நடவடிக்கை மாத்திரமல்ல, பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான ஒரு நகர்வும் கூட. குறிப்பாக, சீனா போன்ற நாடுகள் பேரிடர் மீட்பு என்ற பெயரில் உள்ளே நுழைவதை இது தடுத்தது. ஆனாலும், பாகிஸ்தான் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை இந்தியாவினால் தடுக்க முடியவில்லை.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் வெளியார் தலையீடுகள்
2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் பல இலங்கைக்கு வந்திருந்தன. அப்போது அவர்கள் வெளியேறமாட்டார்கள் என்ற அச்சம் நிலவியது. அதுபோலவே 1987இல் இந்திய அமைதிப்படை வந்தபோதும் அதே ஊகம் நிலவியது. பேரிடர்களைப் பயன்படுத்தி இதுபோன்ற தலையீடுகள் இடம்பெறுவது பிராந்திய முதல்வனான இந்தியாவுக்கு அச்சுறுத்தலேயாகும்.
ஒரே நேரத்தில் பேரிடரை இந்தியாவும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், இலங்கைக்கு உதவி அணிகளை அனுப்ப முடியாமல் போகலாம். அந்தச் சந்தர்ப்பத்தில் சீனா அல்லது பாகிஸ்தான் உள்ளே நுழைவதை இந்தியாவினால் வெளிப்படையாகத் தடுக்க முடியாது. எனவே, இலங்கைக்குத் தனியான வலுவான பேரிடர் மீட்பு படையை உருவாக்கிக் கொடுப்பதே நிரந்தரமான பாதுகாப்பு வழிமுறையாகும் என இந்தியா கருதுகிறது.
அமெரிக்க கடற்படை, இலங்கைக் கடற்படையில் 'மரைன் படைப் பிரிவு' ஒன்றை உருவாக்கியது போன்ற ஒரு மூலோபாய தந்திரத்தையே இந்தியாவும் கையாள்கிறது. பேரிடர் மீட்பு என்ற பெயரில் பிறநாடுகளின் படைகள் உள்ளே நுழைவதை தடுப்பதற்காக அமைக்கப்படும் ஒரு 'வேலி' தான் இந்தப் புதிய பேரிடர் மீட்புப் படை.
இலங்கைக்கு பயிற்சியளித்து உபகரணங்களை வழங்கினால், ஒவ்வொரு முறையும் இந்தியா ஓடி வரவேண்டிய அவசியமிருக்காது. அதேவேளை பிறநாடுகள் உதவிக்கு வருகின்ற சாக்கில் தங்களின் பாதுகாப்பு நலன்களை ஈட்டிக் கொள்வதற்கும் சாத்தியம் இருக்காது. இத்தகைய ஒரு நிலையை உருவாக்கவே இந்தியா தீவிரமாக முனைகிறது.
0 Comments