இந்தியாவிடம் சரணடைந்த ஜேவிபியின் கொள்கை: 450 மில்லியன் டொலர் நிதியும் 'கூட்டுக் குழு' மர்மமும்!
- என்.கண்ணன்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் பிரதமர் மோடியின் சிறப்புத் தூதுவராக கொழும்பு வந்திருந்த போது, பேரிடர் மீள்கட்டுமான பணிகளுக்காக, 450 மில்லியன் டொலர் உதவியை இந்தியா வழங்கும் என அறிவித்திருந்தார். இதில் 350 மில்லியன் டொலர் கடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகள் மற்றும் நிதியுதவி அறிவிப்பு (கோப்புப்படம்)
இந்த நிதியுதவியை, இந்தியா நேரடியாக இலங்கை அரசாங்கத்தின் கையில் கொடுக்கும் திட்டத்தில் இல்லை. இந்தியாவும், இலங்கையும் இணைந்து அமைக்க உள்ள ஒரு கூட்டுக் குழுவே இந்த திட்டங்களை மேற்பார்வையிடவுள்ளது. நிதியுதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்தியா இந்த நேரடிக் கண்காணிப்பு முறையைக் கையில் எடுத்துள்ளது.
கடந்த கால கசப்பான அனுபவங்கள்
போருக்குப் பின்னரான மீள்கட்டுமான பணிகளின் போது வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கையாண்ட விதம் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. வடக்கு, கிழக்கு மீள் கட்டுமானம் என்ற பெயரில் பெறப்பட்ட நிதிகள், தெற்கைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டன. வவுனியாவில் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களைக் கூட, சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்க வேண்டும் என அப்போதைய ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு தான், இந்தியா இந்தமுறை நேரடியாக நிதியைக் கொடுக்காமல் கூட்டுக் குழுவின் ஊடாகக் கையாளத் தீர்மானித்திருக்கிறது. இது இலங்கையின் மீதுள்ள தனது செல்வாக்கை இந்தியா இன்னும் வலுப்படுத்துவதற்கான ஒரு நகர்வாகும்.
ஜேவிபியின் கொள்கை முரண்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியத் தலையீடுகளைக் கடுமையாக எதிர்த்து வந்த ஒரு பின்னணியைக் கொண்டது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தையே நடத்திய ஜேவிபி, இன்று இந்தியாவுடன் இணைந்து ஒரு கூட்டுக் குழுவை அமைத்து மீள்கட்டுமானத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சுனாமி பேரழிவுக்கு பின்னர், விடுதலைப் புலிகளுடன் இணைந்து 'சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பை' (P-TOMS) உருவாக்க சந்திரிகா அரசாங்கம் முயன்றபோது, அதனைத் தடுத்து நிறுத்தி அரசாங்கத்தை விட்டே வெளியேறியது ஜேவிபி. ஆனால், அன்று புலிகளுடன் ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுவதைக் குழப்பிய ஜேவிபி, இன்று இந்தியாவுடன் இணைந்து அத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்க இணங்கியிருப்பது அதன் அடிப்படைக் கொள்கையின் தோல்வியையே காட்டுகிறது.
யாரை எதிர்க்க நினைத்ததோ அவரிடமே ஜேவிபி சரணாகதி அடைந்திருக்கிறது. இந்தியாவின் தலையீட்டை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை நடத்திய வரலாற்றை மறந்து விட்டு, இந்திய நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவது ஜேவிபியின் இராஜதந்திரமா அல்லது வீழ்ச்சியா என்ற கேள்வி எழுகிறது.
0 Comments