elugai

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து: அடுத்த தலைமுறையையும் அடகு வைக்கப்போகிறோமா?

கண்களை மூடியிருக்கும் தமிழ்க்கட்சிகள்: புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் நீளும் அபாயமும்!

- சத்ரியன்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள, பயங்கரவாத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டவரைவு தொடர்பாக, கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிவில் சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மாத்திரமன்றி அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Sri Lanka Law and Justice

புதிய சட்டவரைவு: பாதுகாப்பா அல்லது அடக்குமுறையா?

1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக ஜே.ஆர் ஜயவர்த்தனவின் அரசாங்கம் கொண்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டம், 46 ஆண்டுகளாக, நடைமுறையில் இருக்கிறது. இந்த கொடூரமான சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அதனை நீக்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது.

ஆட்சிக்கு வந்த பின்னர், அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, மாற்றீடாக ஒரு சட்டத்தை கொண்டு வரப் போவதாக அறிவித்தது. இது சிவில் சமூக மற்றும் உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பரந்துபட்ட வரைவிலக்கணமும் ஒளிந்திருக்கும் ஆபத்தும்

இந்த சட்டவரைவில், பயங்கரவாதம் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்ட ஒன்று. அது அரசாங்கம் நினைப்பதை - பொலிஸ் அல்லது இராணுவ அதிகாரி நினைப்பதை பயங்கரவாதமாக அடையாளப்படுத்துவதற்கு இடமளிக்கும். சிங்கள பௌத்த தேசியவாத தரப்புக்களும் கூட இந்த சட்ட வரைவில் உள்ள சில விடயங்களை எதிர்க்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்க விடயம். முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் இதனை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது எனக் கூறியுள்ளார்.

Human Rights Protest Sri Lanka

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிவில் சமூகம்

இந்த சட்ட வரைவு தொடர்பாக வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புகளையோ, திருத்த யோசனைகளையோ அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்று நம்ப முடியாது. அரசாங்கத்திடம் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு இது ஒருநாள் நிறைவேற்றப்படும். இந்த சட்ட வரைவுக்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது தமிழர்கள் தான்.

மௌனம் காக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

தமிழர் தரப்பில் இருந்து இன்னமும் எந்த அமைப்பும் தெளிவான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றே தெரிகிறது. தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சட்ட வரைவை முழுமையாக ஆராய்ந்து அதுபற்றிய கருத்தை முன்வைப்பதாக கூறியிருந்தார். பல சட்டத்தரணிகளைக் கொண்ட அந்த கட்சி இதுவரையும் தமது பரிந்துரையையோ அல்லது இந்த சட்டவரைவு தொடர்பான தெளிவுபடுத்தலையோ மக்களுக்கு மேற்கொள்ளவில்லை.

1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, தமிழர் விடுதலைக் கூட்டணி அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவு 46 ஆண்டுகளாக தமிழர்கள் துன்பப்படும் நிலை ஏற்பட்டது. இப்போது இந்த சட்ட வரைவைக் கண்டும் காணாமல் இருந்து விட்டால், அடுத்தடுத்த தலைமுறைகளும் இதே அவலத்துக்குள் தான் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே இந்த சட்டவரைவு தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்பாக தமிழர் தரப்பே உள்ளது. இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும், வெகுஜன எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான அடித்தளங்களை கூட, தமிழ் அரசியல் கட்சிகள் இன்னும் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

முற்றும்.

Post a Comment

0 Comments