தொடர் போராட்டத்துக்கு தயாரா?
எழுதியவர்: சத்ரியன்
மாகாண சபை தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக அரசாங்கம், தெரிவுக்குழு ஒன்றை நியமித்து தேர்தலை எப்படி நடத்துவது என்று ஆராய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இந்தச் சூழலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் நடந்த சந்திப்பின்போது, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அதனை பிற்போடுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக செயற்படுவதற்கும், இணக்கம் கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு அரசியல் தரப்புகளும், ஒன்றிணைந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும், சுரேஷ் பிரேமச்சந்தினும், கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தனர்.
கடைசியாக, 2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஊவா மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க என நான்கு ஜனாதிபதிகள் வந்து விட்டனர். அவர்களில் 3 பேர் மாகாண சபை தேர்தல்களை நடத்தாமலேயே காலத்தை கடத்தி விட்டார்கள்.
கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள சிங்கள குடியேற்றங்களுக்கு குடிநீர் வசதியை - விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம்.
இந்தத் திட்டம் முற்று முழுதாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது. தமிழர்களின் பாரம்பரிய காணிகளையும் கிராமங்களையும் அபகரித்து இந்தத் திட்டத்தை உருவாக்க அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது. இது நிறைவேற்றப்பட்டால் சிங்களக் குடியேற்றங்கள் இன்னும் வலுவடைந்து, இந்த மாவட்டங்களில் இனப்பரம்பல் மாற்றமடையும்.
ஜேவிபி தங்களின் இயல்பை மாற்றிக் கொண்டு அல்லது மறைத்துக் கொண்டு, தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பக்கம் நிற்பதாக காட்டிக் கொள்கிறது. அது தமிழ் மக்களை அரவணைப்பது போல அவர்களின் குரல்களை அங்கீகரிப்பது போல காட்டுகின்ற போதும் - அதன் உண்மை நோக்கம் அதுவல்ல.
தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அவர்களிடம் வாக்குகளை பெறுவதற்காக மட்டும் அந்த வாக்குறுதிகள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது மீண்டும் தமிழ் மக்களை வசியம் பண்ணும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டிருக்கிறது.
சுலோக அட்டைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதாலோ அல்லது பேரணி ஒன்றை நடத்துவதாலோ மாற்றங்கள் சாத்தியமாகப் போவதில்லை. அதனை சாத்தியப்படுத்துவதற்கு அரசியல் ரீதியான தற்துணிவும் அர்ப்பணிப்பும் அவசியம். தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் மக்களுடன் இறங்கி செயற்பட வேண்டும். மக்களோடு மக்களாக செயற்பட வேண்டும். அவ்வாறான ஒரு போராட்ட களம் திறக்கப்படாமல் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க முடியாது.


0 Comments