பெரியாரும் சீமானும் - ஏமாற்றமா? சந்தர்ப்பவாதமா?
தமிழக அரசியல் சூழலில் வரலாற்றுத் திரிபுகளும் உண்மைகளும் ஓர் அலசல்
இன்றைய தமிழக அரசியல் சூழலில், சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கும், வரலாற்றுத் திரிபுகளுக்கும் நடுவில், உண்மையை எப்படிக் கண்டறிவது? "திராவிடம் தமிழர்களுக்கு எதிரானது" என்றும், "பெரியார் தமிழினத் துரோகி" என்றும் சீமான் முன்வைக்கும் வாதங்கள், பல ஆண்டுகளாக அவர் பேசி வந்ததிற்கு நேர்மாறாக உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, "எங்கள் பாட்டன் பெரியார்," என்று மேடைதோறும் முழங்கியவர் சீமான். "பெரியார் இல்லை என்றால் நான் ஆடு மேய்த்திருப்பேன்" என்று உணர்ச்சிபொங்கப் பேசியவர். ஆனால் இன்று, பெரியார் தமிழினத்தின் எதிரி என்றும், அவர் தெலுங்கர்/கன்னடர் நலனுக்காகவே உழைத்தார் என்றும் அதே நாவால் பேசுகிறார்.
பொய்யான வழிகாட்டுதல்: பெரியார் இறந்த 48 ஆண்டுகளாக, அவரைத் தன் வழிகாட்டி என்று சீமான் கொண்டாடினார். அப்படியென்றால், கடந்த 48 ஆண்டுகளாக அவர் வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு நம்மைப் பொய்யாக வழிநடத்தினாரா?
சீமான் வைக்கும் முக்கிய வாதம், "திராவிடம் என்பது வந்தேறிகளின் சொல்" என்பது. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது? 'திராவிடம்' என்ற சொல்லை அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் பெரியாருக்கு முன்பே பயன்படுத்தியவர்கள் தமிழறிஞர்களும், கிறிஸ்தவ அமைப்புகளுமே.
பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (1816): "திராவிட மொழிக் குடும்பம்" என்ற சான்றை நிறுவியவர். ராபர்ட் கால்டுவெல்: தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்துக்கான அடித்தளமிட்டவர். அயோத்தி தாசப் பண்டிதர்: "திராவிட பாண்டியன்" இதழை நடத்தியவர். இவர்கள் அனைவரும் "ஆரியம்" என்ற ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைக்கக் கையில் எடுத்த அடையாளமே "திராவிடம்".
பெரியார் தமிழை "காட்டுமிராண்டி மொழி" என்று சொன்னார் எனச் சீமான் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அன்றைய தமிழின் நிலையை மறைத்துவிட்டுப் பேசுகிறார். வீரமாமுனிவர் தமிழைச் சாமானிய மக்களும் படிக்கும் வகையில் உரைநடையாக மாற்றினார். ஜி.யு. போப் & கால்டுவெல் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார்கள்.
சீமான் "இந்தியத் தேசியம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு" என்று பேசுகிறார். ஆனால் நடைமுறை என்ன? 1. தமிழ்நாட்டு தமிழர்கள் பயன்படுத்துவது இந்திய பாஸ்போர்ட். 2. வாக்களிப்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கீழ். 3. சீமான் போட்டியிடுவதும் இந்தியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு கட்சியாகத்தான்.
திராவிட இயக்கம் என்பது பெரியாரின் தனிச்சொத்து அல்ல. அது அயோத்தி தாசர், ஜான் ரத்தினம், கால்டுவெல் போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக நீதித் தத்துவம். பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காகவும், பெண் விடுதலைக்காகவும் நின்றார். திராவிடம் என்பது தமிழினத்தை அழித்த சொல் அல்ல; ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழையும், தமிழரையும் மீட்டெடுத்த கவசம்.





0 Comments