elugai

இலங்கையில் தளம் அமைக்க முனையும் சீனா: அமெரிக்காவின் எச்சரிக்கை சொல்வது என்ன?

இலங்கையில் தளம் அமைக்க முனையும் சீனா: அமெரிக்காவின் எச்சரிக்கை சொல்வது என்ன?

- ஹரிகரன்

இலங்கையில் தளம் ஒன்றை அமைக்கும் இலக்குடன் சீனா செயற்படுவதாக, அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் போர்த் திணைக்களத்தினால், கடந்த 25ஆம் திகதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை, "சீனாவுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்- 2025" என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

US Pentagon Report Defense

அமெரிக்க போர்த் திணைக்களத்தின் பாதுகாப்பு அறிக்கை - 2025 (கோப்புப்படம்)

சீனாவின் படைத் தளங்கள், ஆயுத தளபாடங்கள், அதன் பலம், அதன் பாதுகாப்பு நோக்கங்கள், அதனை அடைவதற்கான வியூகங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது அந்த அறிக்கை. 100 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் “சீனாவில் கடல்கடந்த தளங்கள் முன்னேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள்” என்ற பிரிவில் இலங்கை பற்றிய ஒரு குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

சீனா தனது பூகோள விநியோக மற்றும் தள வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தூர இடங்களில் இராணுவத்தளங்களை அமைக்க முனைகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக சீனா இரண்டு விதமான உபாயங்களை கையாளுகிறது. ஒன்று - நேரடியாக தனது படைத்தளங்களை நிறுவுவது. இன்னொன்று - வர்த்தக நோக்கில் விநியோகத் தளங்களை உருவாக்குவது.

Hambantota Port Sri Lanka China

அம்பாந்தோட்டை துறைமுகம்: வர்த்தகமா அல்லது இராணுவ விநியோக மையமா?

பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் சீனா முன்நிற்கிறது. அதனை சீனா கடற்படைத் தளமாக பயன்படுத்தவுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனாவும் பாகிஸ்தானும் மறுத்து வருகின்றன. அதேபோல, கம்போடியாவில் றீம் கடற்படைத் தளத்தில் ஒரு கூட்டு விநியோக மற்றும் பயிற்சி மையத்தை திறந்து இருக்கிறது சீனா.

இந்தியாவைச் சுற்றியுள்ள 'சீன வேலி'

சீனா தளம் அமைக்க எதிர்பார்க்கின்ற நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டுள்ளவற்றில் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகியனவும் உள்ளன. இவை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள். இவ்வாறான தளங்களை அமைப்பதன் ஊடாக இந்தியாவை நான்கு புறமும் சீனாவினால் சுற்றிவளைக்க முடியும். இது இந்தியாவுக்கு ஆபத்தான நகர்வாக இருக்கும்.

Indian Ocean Geopolitics

இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீனக் கடற்படையின் ஆதிக்கம்

சீனாவிடம் அம்பாந்தோட்டைத் துறைமுகம் வழங்கப்பட்ட போது, அதனை இராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. அந்த உத்தரவாதம் எழுத்துக்களில் உள்ளதே தவிர, அது முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனென்றால் இந்த துறைமுகம் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் சில பாதுகாப்பு மூலோபாயங்கள் இருக்கின்றன, அவை 5- 10 ஆண்டுகளுக்கு உரியவை அல்ல. அது 50, 100 ஆண்டுகளையும் தாண்டியவை. பராக் ஒபாமா, ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வந்து போவார்கள், ஆனாலும், அமெரிக்காவின் நிரந்தரமான பாதுகாப்பு மூலோபாயம் ஒருபோதும் மாற்றம் காணாது.

அதேபோன்று சீனாவும் இப்பொழுது தனது நீண்டகால மூலோபாய திட்டங்களை வகுத்து செயற்படத் தொடங்கியுள்ளது. 14ஆம் நூற்றாண்டில் சீனாவின் அட்மிரல் செங் ஹீ (Zheng He) என்ற தளபதி, காலி துறைமுகத்தில் வந்திறங்கி, அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்திய வரலாறு உள்ளது. அதேபோல மீண்டும் தனது கடற்படையின் ஊடாக கடல் கடந்த தேசங்களில் அதிகாரத்தை நிலைப்படுத்த சீனா விரும்புகிறது.

இலங்கையை அவ்வாறான ஒரு தளமாக பேணுவதற்கான முயற்சிகளில் சீனா மாத்திரமல்ல, அமெரிக்காவுக்கும் அத்தகைய எண்ணம் உள்ளது. இலங்கையுடன் இப்பொழுது அமெரிக்கா தனது பாதுகாப்பு உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்தி வருகிறது.

இந்தியாவை சுற்றி வளைக்கின்ற வகையில் சீனா அமைக்க விரும்புகின்ற இந்த இராணுவ வேலி சர்ச்சைக்குரியது. அது இந்தியாவை சினம் கொள்ள வைக்கும். இந்தியா இதுபற்றி கருத்துக்களை வெளியிடாத போதும் அது நிச்சயமாக தன்னை உஷார்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனாவின் வியூகங்கள் என்றைக்கும் இந்தியாவுக்கு ஆபத்தானது.

முற்றும்.

Post a Comment

0 Comments