elugai

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் தமிழ் அரசு - சிறிதரன் விவகாரமும் கட்சியின் பலவீனமும்!

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் தமிழ் அரசு

-கபில்
அரசியலமைப்பு பேரவையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விலகிக் கொள்ளுமாறு, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இந்த தீர்மானத்தை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
ஏன் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என, கட்சியின் அரசியல் குழு தீர்மானித்தது என்பதற்கான விரிவான விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார். அரசியலமைப்பு பேரவையில், எட்டு தடவைகள் அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என்பது சிறிதரன் மீதான முதல் குற்றச்சாட்டு. இராணுவ பின்னணி கொண்டவர்களை ஆதரித்ததன் மூலம் இராணுவமயமாக்கலுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்பது, இன்னொரு பிரதான குற்றச்சாட்டு.
Parliament and Governance

அரசியலமைப்பு பேரவை மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் உட்கட்சி முரண்பாடுகள்

சிறிதரன் - சுமந்திரன் இடையிலான இழுபறி
அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு மூன்று வாரங்களாகியும், சிறிதரன் பதவியில் இருந்து விலகியதாக தகவல் இல்லை. கட்சிக்கும் தங்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சுமந்திரன் கடிதம் எழுதியும், சிறிதரன் விலகுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அப்படியானால், தமிழ் அரசுக் கட்சி என்ன செய்யப் போகிறது? அவருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப் போகிறதா?
"உள் வீட்டுக்குள் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகளை வெளியரங்குக்கு கொண்டு வருவதும், வெளியரங்கில் பேச வேண்டிய பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்த்துக் கொள்ள முனைவதும் தான் தமிழ் அரசுக் கட்சியின் பலவீனம்."
தலைமைத்துவப் போட்டியும் பதில் தலைவரின் விளக்கமும்
கடந்த 2026 ஜனவரி 18 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி. வி .கே. சிவஞானம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர் சந்திரசேகர் தமிழ் அரசுக் கட்சியை சீண்டும் வகையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இது அமைந்திருந்தது.
சிறிதரனை கட்சியை விட்டு நீக்கப் போவதாக யார் கூறியது என்று கேட்கும் சிவஞானம், அவர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லை, அந்நியோன்யமாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். ஜனநாயகத்தில் முரண்பாடுகள் இருப்பது வழமை என்றும், இது ஒரு உள்வீட்டு விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Diplomacy and Leadership

தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவ சவால்களும் தற்போதைய அரசியல் சூழலும்

வெளியரங்கில் பேசப்பட்ட உள்வீட்டு விவகாரம்
அரசியலமைப்பு பேரவையில் சிறிதரனின் நடத்தை தொடர்பான விவகாரத்தை வெளியே கொண்டு வந்தது வேறு யாரும் அல்ல - அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான சுமந்திரன் தான். அரசியல் குழுவின் தீர்மானம் தொடர்பாக அவருக்கு கடிதம் எழுதப்பட்ட தகவலையும் அவரே ஊடகங்களிடம் பகிரங்கப்படுத்தி இருந்தார். இப்படியிருக்க, இப்போது இது உள்வீட்டுப் பிரச்சினை, இதில் யாரும் தலையிட தேவையில்லை என்று கூறுவது அர்த்தமற்றது.
சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த விவகாரம் தோற்றம் பெற்றது. சிறிதரன் பதவி விலகாமல் போனால், கட்சியின் தீர்மானம் என்னவானது என்ற கேள்வி வரும். தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்துகின்ற பிரதான கட்சியாக இருக்கிறது.
Law and Order Concept

நிதானமாக கையாளப்பட வேண்டிய அரசியல் நகர்வுகள்

முடிவுரை
வடக்கின் பிரதான எதிரியாக அரசாங்கம் கருதுவது தமிழ் அரசுக் கட்சியைத் தான். இவ்வாறான நிலையில் தமிழ் அரசுக் கட்சி உள்ளக முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அரசாங்கத்துடன் வலுவாக மோதுவதற்குத் தயாராக வேண்டும். அதைவிடுத்து, கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்தால் விளைவு விபரீதமாகத் தான் அமையும்.

Post a Comment

0 Comments