தளபதி கிட்டு: தமிழீழ தேசத்தின் காவல் அரண்!
புலிகளின் சர்வதேச இராஜதந்திர செயல்வீரன் - இன்று அவரின் நினைவு நாள்
(ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)
இது ஓர் வரலாற்று நினைவுசுமந்த பதிவு. தோழர்களால் செல்லமாக 'கிட்டு' என அழைக்கப்பட்ட தோழர் தோசிவம் கிருஷ்ணகுமார், தனது பதினெட்டு வயதிலேயே தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக்கொண்டு, தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உயர்ந்தார். விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராட்டங்களில் இவரது துடிப்பும் வேகமும் தனித்து நின்றன. தலைவரிடம் நேரடியாகப் போரியல் கற்று, அவரது எண்ணங்களையும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தையும் உள்வாங்கிக்கொண்டார். இவரது முதல் களமே தனி மனித சாதனையாக அமைந்தது.
படம் 1: தளபதி கிட்டு தனது ஆரம்பகாலப் போரியல் வாழ்வில்.
1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையை உயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளூராட்சித் தேர்தலை பகிஷ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
1983இன் இறுதிக்காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கைத் நிலையை உயர்த்தினார். கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.
படம் 2: யாழ்ப்பாணத்தில் மக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த தளபதி கிட்டு.
1987 மார்ச் இறுதியில் இரண்டகர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடது காலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. அங்கு, கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறையிலிருந்தபடி அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் 'தேவி' இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஷ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989 இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். 'களத்தில்', 'எரிமலை', 'உறுமல்', 'செய்திக்கதிர்', 'தாயகம்', 'தேசக்காற்று' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார்.
கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவைக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின.
குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜோனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்க வைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது. தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். வங்கக் கடலின் நடுவே அந்தத் தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.
- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் நவீன போரியற்கலையில் முன்னேறிச் சென்றதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயபூர்வமான போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்து நிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த சிந்தனையாகும்.
தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத்தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம். சிறுவர் நலன்பெணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பெணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் போருக்குப் பின்னரான காலத்திலும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார்.
- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்
எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.


0 Comments