வெள்ளிவிழாக் காணும் பொங்குதமிழ் பிரகடனப் பேரெழுச்சி அரங்கு!
சர்வதேசத்தையே அதிரவைத்த பொங்கு தமிழ் நினைவுகளை முன்னிறுத்தி… !!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அந்த வகையில் 2026 பொங்குதமிழ் பிரகடன நிகழ்வின் வெள்ளிவிழா ஆண்டாகவே உணரமுடிகின்றது.
யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வினை அத்தனை இலகுவில் மறந்துவிடமுடியாது. ஈழத்தில் தமிழ் இனம் என்ற ஒன்று அவலத்தினுள் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கின்றது. ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றது என உணர்ந்து கொதித்தெழுந்த தமிழ் மக்களின் பொங்கிப் பிரவாகிக்கும் அடிமன ஆழத்தின் வெளிப்பாட்டை சர்வதேச சமூகதுக்கு வெளிப்படுத்தி நின்ற அரங்க மொழிதான் பொங்குதமிழ் அரங்கு.
தமிழ் மனங்களின் அடிமன ஆசையினை வெளிக்காட்ட பிரயோகிக்கப்பட்ட ஆயுதம் அரங்கு. அந்த வகையில் மக்களின் அடிமன விருப்தைக் கூறும் களமாக இங்கு அரங்கு செயல் நிறை புரிந்தமையினால் இந்த மக்கள் எழுச்சியை பொங்கு தமிழ் அரங்கு என்று கூற விழைகின்றேன்.
ஈழத்து அரங்கின் ஆற்றுதகைப் போக்குகளில் மிக முக்கிய திருப்பு முனையாக 1985 இல் அமைந்தது மண் சுமந்த மேனியர் நாடகம். குழந்தை ம.சண்முகலிங்கத்தினால் எழுதப்பட்டு கலாநிதி க. சிதம்பரநாதனால் நெறியாள்கை செய்யப்பட்டது. இத்துடன் தமிழ் மக்களிடம் புதிய அரங்கப் போக்கின் அறிமுகம் ஆரம்பமானது.
அந்த வகையில் ஈழத்தின் அரங்கப் போக்கில், சர்வதேச அரங்கில் சமுக மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது ” பொங்கு தமிழ் அரங்கு ”. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட 1983, 1985, 1987, 1990, 1993, 1995, காலப்பகுதிகளின் தொடர் இடப்பெயர்வுகள் தமிழ் மக்கள் மீதான மிகக் கொடூரமான ஒடுக்குதல்களை தீவிரப்படுத்தியது. யுத்த சூழல் என்பன மக்களை அவலத்தினுள் ஆட்கொண்டு வைத்திருந்தது. தமிழ் சமுகம் ஒடுக்கப்பட்ட மக்களாக மரணத்துள் வாழ்ந்து வந்தனர். தமது சுதந்திர உரிமை பற்றி வெளியில் துணிந்து பேசமுடியாத பயத்தினுள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் வெளியில் விருப்பைக் கூறமுடியாத அதிபயத்தில் உறைந்து போய் இருந்தார்கள்.
நாடகமும் அரங்கியலும் துறையில் ஒவ்வொரு வருடமும் இறுதி வருட மாணவர்கள் தங்கள் பரீட்சைக்காக நாடகம் ஒன்றை ஆற்றுதகை செய்யவேண்டும் என்பது பல்கலைக்கழக பாடத்திட்டம் . அந்த வகையில் அன்றைய நாடகமும் அரங்கியலும் துறைத் தலைவராக இருந்த கலாநிதி க.சிதம்பரநாதனின் ஆலோசனையையும் வழிகாட்டலையும் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவரினதும் ஆற்றுதகைகளும் தமிழ் சமூகத்தின் அடக்குதல்களையும், மக்கள் மீதான இராணுவக் கட்டவிழ்ப்பையும் வெளிக்காட்டுவனவாக அமைந்தன.
ஈழத்து மீனவர்கள் மீதான ஒடுக்குமுறையாளர்களின் ஆக்கிரமிப்பையும் பாஸ் நடைமுறையின் கொடூரங்களையும் சுட்டிக் காட்டிய ராஜ்குமாரின் ‘’ கரிக்கும் கண்ணீர்க் கடல் அலைகள் ‘’, கணேசராஜாவ் வின் ‘’ தேசாப் பொருள் ‘’. குழு நிலையில் செய்யப்பட்ட ‘’ ஆத்மா ‘விசாரம் ‘ .’’ மண்ணின் புழுதியிடை ‘’ போன்ற நாடகங்கள் சாதாரண படச்சட்ட அரங்கில் இருந்து பல்கலைக்கழக வெளியை நிரப்பிக் கொண்டது. இந்த பிரம்மாண்ட வெளியில் பார்ப்போரும் பங்கு கொள்ளும் வகையில் இந்த ஆற்றுதகை நிகழ்த்தப்பட்டமையினால் பார்வையாளர்கள் பங்கு கொள்பவர்கள் ஆயினர்.
இவ்வாறான திறந்த வெளியில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மனங்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அவற்றின் காரணமாக தமிழ் மக்களின் மனங்களிலும் வெளிக் கொட்ட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் ஈழ விடுதலை வழியை வெளிக்காட்ட, சமுகத்தை ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெளி கொடுத்தது. கலாநிதி, கா. சிதம்பரநாதன் மற்றும் அவர் தம் குழுவின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக ‘’ பொங்குதமிழ் ‘’ என்ற ஈழத் தமிழ் வடிவம் 2000 ஆண்டில் பிறந்தது.
அரங்க செயற்பாட்டுக் குழுவும், பெண்கள் பண்பாட்டு மையமும் சேர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தம்முடன் அரங்கியல் நிலையில் ஒன்றிணைக்க முடிவு செய்தது. இதில் அன்றைய பல்கலைக்கழக மாணவத் தலைவனாக இருந்த செல்வராஜா கஜேந்திரனின் அர்ப்பணிப்பும் தேசிய விடுதலை மீதான வெறியும் ஆழமானது. பொங்குதமிழ் நாயகனாக அவரை அடையாளம் காட்டியது.
ஒவ்வொரு நாளும் ஐந்து மணி தொடக்கம் இரவு பகல் பாராமல் பல்கலைக்கழக புல்வெளியில் இந்த அரங்கியல் சிந்தனைகள் பட்டை தீட்டப்பட்டன. மண்சுமந்த மேனியர் காலம் தொட்டு படிப்படியாக நகர்ந்த தேசிய விடுதலைக்கான அரங்கச் செயற்பாடுகளும், அரங்க ஆற்றுதகைகளும் பண்பாட்டுப் பவனி போன்ற காரணிகளும் இறுதியாக பொங்கு தமிழாக பெரும் வடிவம் பெற்றது.
இறுதியில் பல இலட்சக்கணக்கான மக்களை ஈழத்தின் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத் தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஒன்று சேர்த்ததுடன் சர்வதேச நாடுகளான லண்டன், நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் எங்கும் பொங்கு தமிழ் அரங்கு காட்டுத் தீயானது.
அரங்கு உயர்த்தப்பட்ட நீளமான மேடையாக அமைக்கப்பட்டு அரங்கும், மைதானமும் மட்டுமின்றி அந்த தேசங்களும் சிவப்பு, மஞ்சள் நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டு, தேசியத் தலைவரின் பிரம்மாண்டமான படமும் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு அரங்க காண்பியங்களில் மிக முக்கியமாக மாதிரி வீடு, இராட்சத அரக்க உருவம், பிரம்மாண்டமான கறுப்புச் சப்பாத்து, பொங்கு தமிழ் பானை சுமந்த ஊர்த்தி என்பனவற்றை குறிப்பிட முடியும்.
எங்கள் ஈழத்து வீடுகள் இராணுவ ஒடுக்குதல்களால் முள்வேலி இடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை மாதிரி வீடு வெளிக்காட்டியது. ஆற்றுதகையாளர்களின் உணர்ச்சியின் சக்தியை மக்களை எழுச்சி கொள்ளவைத்தது. இவை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சியின் உச்சம் ஆகும்.
அரங்கில் இயங்கியவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள் என்பது வரலாற்றுப் பதிவாக்க வேண்டிய விடயம் ஆகும். சாதாரண வாழ்வில் பெண் சத்தம் இட்டுக் கதைக்கக் கூடாது, ஆடக்கூடாது என்ற இலக்கணங்கள் எல்லாம் உடைத்தெறிந்த பெண்களாக இவர்களைப் பார்க்க முடிந்தது. புரிதலோடு ஆவேசம் கொண்டு உலக அரங்கை உலுக்கி நின்றனர் மக்கள். மானுட விடுதலைக்காக அகோரங் கொண்டாடியது பெண்களின் உடல் மொழி.
இதன் விளைவாக 2004 பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் பண்பாட்டு மைய நிறுவனர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் வரலாறு காணாத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். இது பொங்கு தமிழ் அரங்கு சமூகத்திற்கு கற்பித்த பாடமாகும்.
முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வின் போது பல்கலைக்கழக சமூகம் தவிர வெளி சமூகம் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இராணுவம் அனைவரையும் தடுத்து நிறுத்தியது. இந்த நேரத்தில் பல்கலைக்கழக மாணவனொருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் உண்டு. இருப்பினும், சிங்கள சகோதரர்களும் புத்த மதகுருமார்களும் கூட இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமிழர்களின் அபிலாசைகளை உணர்ந்து கொண்டனர்.
இங்கு மொழி, வேட உடை, இசைக்கருவிகள், ஆடல் பாடல் என அனைத்தும் ஈழத் தமிழ் தேசிய விடுதலைக்கான அரங்கு என்பதையே உறுதி செய்தன. 2009 போராட்ட அழிவுகளின் பின் இராணுவ கட்டமைப்புகள் பரவலாக்கப்பட்ட அவலம் மீண்டும் உருவானது. இருப்பினும் சர்வதேச நாடுகளில் தொடர்ந்தும் மூண்டுவரும் ஈழத்தீயாக பொங்கு தமிழ் அரங்க உணர்வுகளை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.
2015 ஜை 8 உடன் சிறியதொரு வெளிச்சம் தோன்றிய போதும், வன்னியில் மக்கள் நிலங்களிலுள்ள இராணுவ காவலரண்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. காணாமல் போனோர், சிறைக்கைதிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எனப் பல்வேறு நெருக்கடிகள் மக்களைப் பாதிக்கின்றன. திட்டமிட்டு அழிக்கப்படும் அடையாளங்களாக பௌத்த விகாரைகள், வீதிகளின் பெயர் மாற்றங்கள் எனப் பல நெருக்கடிகளுடன் தமிழ் மக்கள் இன்றும் அவலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.





0 Comments