elugai

ஹரிணியை குறிவைக்கும் 'ஸை - லிங்கிக' சர்ச்சை: 60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரங்கேறும் அதே நாடகம்!

பிறவலைத்தளப்பார்வை:
இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸை - லிங்கிக'!

முன்னுரை:
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அநுர - ஹரிணி தலைமையிலான அரசாங்கம் குறைகள் எதுவும் அற்ற, சர்வ சம்பூர்ணமான ஒரு அரசாங்கமாக இருந்து வருகிறது என்று எவரும் சொல்ல முடியாது. எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குரிய தருணம் இன்னமும் வரவில்லை (It is too early). அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாகத் தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் 'ஸை-லிங்கிக' சர்ச்சை: விளக்கமில்லாத குழப்பம்!

இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸை - லிங்கிக' என்பது. தன்பாலீர்ப்பை (Homosexuality) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிங்களச் சொல் அது. ஆண்கள் பெண்களை மோகிப்பதும், பெண்கள் ஆண்களை மோகிப்பதும் (எதிர்ப்பாலீர்ப்பு - Hetero sexual) இயல்பானது என்பதும், ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது என்பதும் பொதுச் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதி.

ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உயிரியல் ரீதியான யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது. சமயக் கிரந்தங்கள் கூட வரலாற்றில் அத்தகைய கூட்டத்தினரின் இருப்பு குறித்து (எதிர்மறையாக) குறிப்பிட்டிருக்கின்றன. இந்து சமயத்தில் மாற்றுப் பாலீர்ப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளன (உதாரணம்: தமிழ் நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூவாகத் திருவிழா).

அந்த மாற்றுப் பாலீர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து. அவர் மட்டுமல்ல இலங்கையின் பெரும்பபோக்கு அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியமான தலைவர்கள், முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்கள் தேசிய பெருவாழ்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் (Inclusion) என்ற கருத்தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே பாலியல் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கும் ஆண்டு ஆறு ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய மாடியூளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

'ஹரிணி ஒரு கலஸ்பியனாக' இருந்து வருவதனால் LGBTQA கலாச்சாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்' என்பது அவர் மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. தான் ஒரு கலஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாகக் கூறியிருக்கவில்லை. அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட - பிரதமர் மந்திரிக்கு இருந்து வரக்கூடிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தைப் பயன்படுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் - அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வர முடியாது.

அரசியல் மற்றும் மதவாத விமர்சனங்கள்

சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' என ஹரிணி திட்டவட்டமாகக் கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்பும், ராஜபக்ச முகாமைச் சேர்ந்த ஒரு சில முன்னணி பிக்குகளும், சில அரச எதிர்ப்பு யூடியூபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

"உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்" என்று பிரதமருக்குப் புத்திமதி சொல்கிறார் அரசியல் கோமாளியான பத்தரமுல்லே சீலரத்ன தேரர். 'பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது' என்பது அவருடைய வாதம். ஹரிணி மீது கல்லெறிந்திருக்கும் மற்றைய இரு பிக்குகள் பலங்கொட கஸப்ப தேரர் மற்றும் 'மிகிந்தலை ஹாமிதுருவோ' எனப் பிரபலமடைந்திருக்கும் வாவஹங்குன்னவெவே தர்மரதன தேரர். மிகிந்தலை தேரரின் கருத்துக்கள் முகம் சுளிக்க வைப்பவை. ஒரு துறவி கட்டாயமாகத் தவிர்த்திருக்க வேண்டிய சொற்பிரயோகங்கள்.

மறுபுறம், எதனை இயற்கைக்கு மாறானது என இவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்களோ அந்த வழக்கம் நீண்ட காலமாக இலங்கைச் சமூகத்தில் நிலவி வருகிறது என்பதற்கான அத்தாட்சி இந்த ஹாமிதுரு பயன்படுத்தியிருக்கும் 'சொல்லகராதி'! 'கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்' என இத்தேரர்களுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் சுதத்த திலகசிறி போன்ற ஒரு சில யூடியூபர்கள், சமய ஸ்தாபனங்களுக்குள் இளம் பிக்குகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வரும் அதே நபர்கள் இன்று Homosexuality க்கு எதிராக உரத்துக் குரலெழுப்புவது பெரும் நகைமுரண் என்கிறார்கள்.

வரலாறு மீண்டும் நிகழ்கிறது

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து தல்பாவில சீலவங்கச தேரர் செய்த அதே அபத்தமான பிரச்சாரத்தை இப்போது ஆறாம் ஆண்டு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து பத்தரமுல்லே சீலரத்ன தேரர் செய்து கொண்டிருக்கிறார். 'பௌத்த மதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் மத வெறுப்புப் பேர்வழிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற அதே பழைய துருப்புச் சீட்டு.

அநுரகுமாரவைப் போல ஹரிணியை அவருடைய குடும்பப் பின்னணியின் அடிப்படையில் இழிவுபடுத்த முடியாது. காலி அத்தீதன அமரசூரிய வளவ்வ என்ற பெரிய வீட்டின் உயர் குடி செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அதனால் அவர் மீது அவதூறு பொழிவதற்கு வேறு ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும். பார்வையாளர்களின் ஆர்வத்தைப் பெருமளவுக்குத் தூண்டக் கூடிய ஒரு ஆயுதம் அவருடைய பாலியல் வாழ்க்கை தொடர்பான புனைவுகள்.

முடிவுரை:
எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாகத் தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலைக் கைவிடுவதற்கான தருணம் இப்பொழுது வந்திருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே என் பி பி க்கு எதிரான வலுவான ஒரு மாற்று அணியாகத் திகழ்வதற்கான தார்மீக உரிமை SJB-க்குக் கிடைக்கும்.

Post a Comment

0 Comments