சமகாலத் தோழன்: கப்டன் பண்டிதர் நினைவு சுமந்து...
மத்திய குழு உறுப்பினர் | யாழ் மாவட்ட முதல் தளபதி
கப்டன் பண்டிதர் (இளங்கோ) - இயற்பெயர்: சின்னதுரை
எங்கள் ஆணிவேர்களில் ஒருவன், மத்திய குழு உறுப்பினர் கப்டன் பண்டிதர் நினைவு சுமந்து... தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் யாழ் மாவட்ட தளபதியும், ஆயுதங்களின் பராமரிப்புப் பொறுப்பாளர் மற்றும் நிதிப் பொறுப்பாளருமாகிய கப்டன் பண்டிதரின் (இளங்கோ) இயற்பெயர் சின்னதுரை.
பார்ப்பதற்குச் சாதுவான தோற்றம் கொண்ட இளைஞன், செயல்களில் மட்டும் அசாத்திய திறமை படைத்தவன். பன்முக ஆளுமை கொண்ட ஒரு தளபதியை நாம் அன்று இழந்தோம். எமது விடுதலை அமைப்பின் அஸ்திவாரம் போடப்பட்டபோது, ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரின் ஆளுமையும், அறிவும், பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரை 'பண்டிதர்' என்றே அழைத்தனர்.
நான் பண்டிதர் என்ற உயர் சிந்தனை கொண்டவரை 1981 ஆரம்ப காலங்களில் சந்தித்த போது மிகவும் பயத்துடனேயே சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பிலேயே அந்தப் பயம் முற்றாக நீங்கியிருந்தது. எளினமையான தோற்றம், அமைதியான பேச்சு, புன்சிரிப்பு - புலிகளின் உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்ற எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட மிகச் சாதாரண மனிதராகவே அறிமுகமாகி அவ்வாறே வாழ்ந்தார்.
கல்வியங்காட்டியிலிருந்த நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தில் அவரைப் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சந்திப்போம். பல இளையவர்களை எமது போராட்டத்தில் இணைப்பதற்காக பண்டிதரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். பண்டிதரால் துண்டுப்பிரசுரங்கள் வழங்குகின்ற பணியும் என்னிடம் தரப்பட்டது.
பண்டிதர் வல்வெட்டித்துறை வந்து மீண்டும் யாழ் செல்லும் போது மண்டான் என்ற சிறிய கிராமம் வழியாக, சிறிய ஆற்றைக் கடந்து கப்பூது என்ற கிராமம் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றின் நீரைக் குடித்துவிட்டு, "தமிழீழம் கிடைத்த பின்பு இந்த ஆற்றைப் பாதுகாப்பதும், கப்பூது கிராமத்தை மையமாகக் கொண்டு அனைத்து வசதிகளுடனும் ஒரு பெருநகரமாக மாற்ற வேண்டும்" என்ற தனது கனவைச் சொல்லிக் கொண்டே வருவார்.
1983 ஜூலை மாதம் திருநெல்வேலியில் இராணுவத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள இனவெறியின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடியது. அந்தச் சூழலில், பண்டிதர் என்னைச் சந்தித்து இந்தியாவுக்குப் புறப்படுவதற்குத் தயாராகுமாறு கூறினார். புறப்படுவதற்கு முன்னர், "பயிற்சி முடிந்ததும் நீ உடன் தாயகம் திரும்ப வேண்டும்" என அன்புக் கட்டளையிட்டு வழி அனுப்பி வைத்தார்.
பண்டிதர் நிதிக் கையாள்கைகளையும் மேற்கொண்டதால், ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அவரிடம் வந்து கணக்குக் காட்டியே நிதியைப் பெற்றுச் செல்வார்கள். அந்த விடயத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். மூத்த தளபதிகள் உட்பட பலர் வெளியெ காத்து நின்று கணக்குக் காட்டிச் சென்றது இப்போதும் நினைவில் உள்ளது. பாரபட்சமில்லாத அவரது நிர்வாகத் திறமை கண்டு நான் வியந்ததுண்டு.
துரதிர்ஷ்டவசமாக, 1985 தை மாதம் 9-ஆம் திகதி அதிகாலை அச்சுவேலி முகாம் முற்றுகையிடப்பட்டது. தன்னுடனிருந்த போராட்டாளிகளைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் சமரிட்டு பண்டிதர் உட்பட ஆறு பேர் வீரச்சாவடைந்தார்கள். இலங்கை அரசுக்கு இது பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
நான் எமது பண்டிதரைத் தமிழ் மக்களின் 'சேகுவேராவாகவே' பார்க்கின்றேன். நாம் பெற்றெடுக்கும் தமிழீழத்தில் பண்டிதர் உட்பட்ட அனைத்து மூத்த உறுப்பினர்களும், மாவீரர்களும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவார்கள்.
0 Comments