ஈரான் - அமெரிக்க பதற்றம்: இலங்கைக்கு ஆபத்து?
டொனால்ட் ட்ரம்ப்பின் 25% வரி விதிப்பும் பொருளாதாரத் தாக்கமும்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக 25 சதவீத வரிவிதிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. இது இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நட்புறவு மாத்திரமன்றி வர்த்தகத் தொடர்புகளும் இருந்து வருகின்றன.
படம்: சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்
ஈரானிடம் இருந்து முன்னர், இலங்கை அரசாங்கம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. அமெரிக்காவின் தடைகளுக்கு பின்னர் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. ஆனாலும் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
ஈரானிடம் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது தான், அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு துணையளிப்பதாக இருக்கும். அதனால்தான் ஈரானிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டது. ஆனால் ஈரானுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது, அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதாக இருக்காது. இலங்கை தேயிலை முடிவுப் பொருளாகவே ஈரானைச் சென்றடைகிறது. அது மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதற்குத் தடை இல்லை.
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி இதுவரைக்கும் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அதில் இருந்த ஒரே சிக்கல், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான கொடுப்பனவை, அமெரிக்க டொலரில் செலுத்த முடியாத நிலையில் ஈரான் இருந்து வந்தது. அந்தச் சிக்கலையும் தாண்டி, 2024ஆம் ஆண்டில் 62.25 மில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி மூலம் வருமானமாகப் பெறப்பட்டது. கடந்த ஆண்டு ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 48 வீதம் அதிகரித்ததுடன், 9.8 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
படம்: இலங்கையின் பொருளாதாரத் தூணாக விளங்கும் தேயிலை ஏற்றுமதி
இப்பொழுது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக, 25 சதவீத மேலதிக வரி விதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில், ஈரானுடன் வர்த்தக உறவுகள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறதே தவிர விரிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏனெனில் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் பொருட்களை இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இதற்கு மேலதிகமாக 25 சதவீத வரியை விதிக்கும் நிலை ஏற்பட்டால், கிட்டத்தட்ட 750 மில்லியன் டொலர்களை வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அது இலங்கையின் பொருட்களுக்கான கேள்வியைக் குறைக்கும், விற்பனையைக் குறைக்கும். ஏற்றுமதி பாதிக்கப்படுகின்ற போது கிடைக்கின்ற வருமானமும் குறையும்.
இலங்கை அரசாங்கம் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் இருக்க ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்தால், தேயிலை தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும். கிட்டத்தட்ட 9.8 மில்லியன் கிலோவிற்கும் மேற்பட்ட தேயிலை தேங்கிப் போகும். அதனை டொலராக்குவதற்கு மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும். அதனைச் செய்ய முடியாது போனால், உள்நாட்டில் தேயிலைத் தொழில்துறையை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
படம்: சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தாக்கம்
ட்ரம்ப் இந்தியாவைக் கூட தன் வரி விளையாட்டுக்குள் இழுத்துச் சென்றிருக்கின்றார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகின்ற நாடுகளுக்கு எதிராக, 500 சதவீத வரி விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ட்ரம்ப் முற்படுகிறார். அந்தச் சூழலில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டியிருக்கும். அத்தகைய ஒரு விளையாட்டை இந்தியாவுடன் விளையாட முற்படுகின்ற ட்ரம்ப், இலங்கை போன்ற ஒரு நாட்டுடன் விளையாடுவதற்குச் சிறிதேனும் தயங்கப் போவதில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு மிகமிக முக்கியமானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் முயற்சியில் அமெரிக்காவிடம் இருந்து பெரியளவில் பங்களிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குள் இலங்கை சிக்கிக் கொண்டால் அது இலங்கையின் மீட்பு முயற்சிகளைப் பாதிக்கும். அமெரிக்காவிடம் சிக்கிக் கொள்ளாமல் ஈரானுடன் வர்த்தகத்தை முன்னெடுப்பது இலங்கைக்கு சவாலான ஒன்றாகவே இருக்கப் போகின்றது.
0 Comments