மூலோபாய உதவியின் நோக்கம் என்ன?
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ள TH-57 ரக ஹெலிகொப்டர்கள் - ஒரு மூலோபாயப் பார்வை
இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா 10 புதிய ஹெலிகொப்டர்களை வழங்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை நினைவிருக்கலாம். அந்த ஹெலிகொப்டர்கள் இப்போது இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அவை புதியவை அல்ல. அமெரிக்க கடற்படையினால் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்டவைதான் அவை. இதுதான் உண்மை.
இலங்கை விமானப்படைக்குப் பயிற்சி மற்றும் பேரிடர் மீட்பு, உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமெரிக்கா 10 TH-57 ஹெலிகொப்டர்களை கொடையாக வழங்கியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுபற்றிப் பேசப்பட்டு வந்தது. உண்மையில் இந்த ஹெலிகொப்டர்கள் கடந்த ஆண்டில் விமானப்படையின் கைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
கழிக்கப்பட்ட தளவாடங்களின் பின்னணி
அமெரிக்காவின் டெக்சாஸ் நிறுவனம் பெல் ஜெட் ரேஞ்சர்- 206 (Bell Jet Ranger-206) என்ற ஹெலிகொப்டர்களைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கியிருந்தது. அது அமெரிக்க இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கவில்லை, ஆனால் வர்த்தக ரீதியாக அது வெற்றி பெற்றது. இலங்கை விமானப்படை இந்த வகை ஹெலிகொப்டரை 1969 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தியது.
அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் படையினரால் பயன்படுத்தப்பட்ட TH-57 ரக ஹெலிகொப்டர்கள்
பெல் ஜெட் ரேஞ்சர் 206 ஹெலிகொப்டரின் இராணுவ பயன்பாட்டு வடிவமாக உருவாக்கப்பட்டதே TH-57 ரக சீ ரேஞ்சர் (Sea Ranger) ஹெலிகொப்டர் ஆகும். இது அமெரிக்க கடற்படை மரைன் படையினர் மற்றும் கடலோர காவல்படையினரால் விமானிகளுக்கான பயிற்சி, கடல் சார் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு 1968 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 'EDA' திட்டம்
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (DSCA) என்ற ஒரு பிரிவு உள்ளது. அதுதான் U.S. Excess Defense Articles (EDA) program என்ற திட்டத்தின் கீழ் மேலதிக போர்த்தளவாடங்களை பிற நாடுகளுக்கு வழங்குகிறது. அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் கழிக்கப்பட்ட போர்த்தளவாடங்களை கொடையாகப் பெற்றுக்கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது.
அமெரிக்கா இந்த போர்த்தளவாடங்களை இலங்கை மீதுள்ள பற்றினால் கொடுக்கவில்லை. தன்னிடம் மிகையாக இருப்பதை கொடுத்து இலங்கையைத் தட்டிக் கொடுக்கிறது. ஆனால் இந்த ஹெலிகொப்டர்களையோ கப்பல்களையோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வருவதற்கான செலவுகள், பயிற்சிக்கான செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் இலங்கையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படைக்கு ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய நான்காவது ரோந்துக் கப்பல் 'USCGC Decisive'
இலங்கை விமானப்படையின் தற்போதைய தேவை
அண்மைய பேரிடரின் போது இலங்கை விமானப்படைக்கு போதுமான ஹெலிகொப்டர்கள் இருக்கவில்லை. இருந்த ஹெலிகொப்டர்கள் முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காகவும் போக்குவரத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பேரிடர் மீட்பு பணியின் போது, லுணிவிலவில் ஒரு பெல்-212 ஹெலிகொப்டரை இலங்கை விமானப்படை இழக்கவும் நேரிட்டது.
இப்பொழுது அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள ஹெலிகொப்டர்கள் கூட புத்தம் புதியவை அல்ல. மிகவும் பழமையானவை, அவற்றுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, புத்தம் புதிய ஹெலிகொப்டர் போல விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும். இவை விமானிகளைப் பயிற்சி அளிப்பதற்கும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மாத்திரமே உகந்தவை.
மூலோபாய நோக்கம் என்ன?
அமெரிக்கா இதனை ஒரு மூலோபாய திட்டமாகப் பயன்படுத்துகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய உச்சமாக இதனை வர்ணித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் போர் திணைக்கள துணை உதவி இயக்குநர் ஆண்ட்ரூ பையர்ஸ், இந்த நன்கொடை அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறி இருக்கிறார்.
கேள்வி: இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம் என்ன? இலங்கையை பலப்படுத்துவதா அல்லது இலங்கையிடம் இருந்து அமெரிக்கா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதா? இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற்றுக்கொள்வதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிலை இருக்கும்.
0 Comments