elugai

ஈரான்–அமெரிக்க மோதலில் இருதலைக் கொள்ளியாகும் இலங்கை

இருதலைக் கொள்ளி நிலையில் இலங்கை

இருதலைக் கொள்ளி நிலையில் இலங்கை

கட்டுரையாளர் - ஹரிகரன்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்து வரும் பிணக்கு, இலங்கையை இருதலைக் கொள்ளி நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கிய சில நாட்களிலேயே, காலி கடற்பரப்புக்கு மிக நெருக்கமாக, ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது. அந்த சம்பவம், சாதாரணமான - தனித்த ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. சர்வதேச மோதல்கள் இலங்கையை நெருங்கி விட்டதன் அபாயத்தை சுட்டிக் காட்டுவதாக இருந்தது.

இந்தியப் பெருங்கடலில் தரித்து நிற்கும் கப்பல்கள் இலங்கைக்கு அண்மையிலான இந்தியப் பெருங்கடல் பரப்பில் தரித்து நிற்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்.

மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்த மாலுமிகளில் - கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும், உயிர் தப்பியவர்களையும், இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு ஈரானிடம் ஒப்படைத்தது. இன்னொரு கப்பலை பொறுப்பேற்று தற்போது திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதிலிருந்த மாலுமிகள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் கடந்த பல வாரங்களாக இலங்கை கடற்பரப்புக்கு வெளியே - இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்குள்ளாக - அதிகளவிலான ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் தரித்து நிற்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கொழும்பு துறைமுகத்திற்கும் காலிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தரித்து நிற்கும், ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை தொடர்பாக, மாறுபட்ட தகவல்கள் உள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் வெளியிட்ட தகவல்களின்படி, 47 கப்பல்கள் வரை இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் தரித்து நிற்பதாகவும், அவற்றில் 19 கப்பல்கள் ஈரானுக்கு சொந்தமானவை என்றும் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. அந்த தடையை தாண்டி, ஈரான் தனது எண்ணெய் கப்பல்களில் எரிபொருளை எடுத்துச் சென்று, சர்வதேச கடற்பரப்பில் வைத்து சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்களுக்கு விற்பனை செய்து வந்தது. அவ்வாறு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட நிழல் கப்பல் படையைச் சேர்ந்த கப்பல்கள்தான், இந்திய பெருங்கடலில் தரித்திருக்கின்றன. மலேசியாவுக்கு அருகிலேயும் இலங்கைக்கு அண்மையிலேயும் இவை பெருமளவில் காணப்படுகின்றன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக, ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பல்களின் வேலியைக் கடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால், ஈரானியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முடியவில்லை. அதனால் இந்த கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் குறிப்பாக இலங்கைக்கு அண்மையிலும், மலேசியாவுக்கு அருகிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் நிறுத்தப்படுவதை விட, ஒரு நாட்டின் கரைக்கு அண்மையில் நிறுத்தப்படுவது பாதுகாப்பானது. உடனடி உதவியை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்கும்.

மாதக்கணக்காக இந்த கப்பல்கள் தரித்து நிற்கின்ற நிலையில், இவற்றுக்கான விநியோகம் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த கப்பல்களுக்கு இலங்கையில் இருந்து விநியோகங்களை மேற்கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் கடற்படை மூலம் வழங்குவது. பெரும் எண்ணிக்கையான கப்பல்களுக்கு அரசாங்கம் இவ்வாறான உதவிகளை வழங்குவது கடினமானது. இன்னொரு வழி, கப்பல் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி இந்த கப்பல்களுக்கான விநியோகங்களை மேற்கொள்ள முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான வாய்ப்புகள் இல்லாமல், ஈரானிய கப்பல்களால் மாதக்கணக்கில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள், மரக்கறிகள் போன்றவை இல்லாமல் கடலில் தரித்து நிற்க முடியாது.

இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் நிறுத்தப்பட்டபோதே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் குழப்பத்தை உருவாக்கும் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. ஏனென்றால் இலங்கை அமெரிக்காவுடனும் ஈரானுடனும் பாரம்பரியமான உறவுகளை வைத்திருக்கின்ற நாடு. ஈரானுடன் நீண்டகால எண்ணெய் மற்றும் தேயிலை வர்த்தக தொடர்புகள் இருக்கின்றன. இலங்கைக்கு சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கட்டிக் கொடுத்ததும், உமா ஓயா நீர்மின் திட்டத்தையும் அமைத்துக் கொடுத்ததும் ஈரான்தான். அதேவேளை, இன்று இலங்கையின் பிரதான ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது. இதனால் மாத்திரமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை கடன்களை பெறுவதற்கும், பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அமெரிக்காவே உதவியது என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைகளில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. பாரம்பரியமாக அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து வந்த ஜேவிபி, ஆட்சி அமைத்த பின்னர் அமெரிக்காவுடன் நெருங்கி செயற்படுகிறது என்றால் அதற்கு கொள்கை ரீதியான காரணம் அல்ல. இது ஒரு தந்திரோபாய உறவு. இலங்கையை மீண்டும் பொருளாதார ரீதியாக பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமானால், அமெரிக்காவுடன் இந்த உறவு தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையில்தான், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கத்தை பேணி வருகிறது.

இவ்வாறாக இலங்கையுடன் நெருக்கத்தை பேணிவரும் இரண்டு நாடுகள் தமக்கு இடையே மோதிக் கொள்ளத் தொடங்கியபோது, அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. இந்த நாடுகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டபோது, இந்த நாடுகளுடன் உறவுகளை பேணி வந்த நாடுகள் குழப்பத்திற்கு உள்ளாகின. ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலையும், அந்த நாட்டுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையும் இலங்கைக்கு ஏற்பட்டது. ஈரானுடன் வர்த்தக தொடர்புகளை பேணிக் கொள்வது, அமெரிக்காவின் தடைகளை மீறும் செயல் என்பதால் அந்த நிலை ஏற்பட்டது. அமெரிக்காவைப் போல, ஈரான் அச்சுறுத்தக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அதனால் அமெரிக்க உறவுகள், வர்த்தகத்தை தடையின்றி மேற்கொள்ள முடிகிறது.

அண்மையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில்தான், இரண்டாம் நிலை தடைகள் தொடர்பாகவும், அதனால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த இரண்டாவது நிலைத் தடைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த செப்ரெம்பர் மாதம் அமெரிக்கா இரண்டு கூட்டு பயிற்சி அல்லது கருத்தரங்குகளை இலங்கையில் நடத்தியிருக்கிறது.

முதலாவது, அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கும் சட்டபூர்வமான உலகளாவிய வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, கடல்சார் தடைகளை கண்டறிந்து, அவற்றுக்கு பதிலளிக்கும் திறனை வலுப்படுத்துவதற்கான 3 நாள் பயிற்சித் திட்டமாகும். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் Cooperative Threat Reduction அலுவலகம், Atlantic Council உடன் இணைந்து, கொழும்பில் அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சி, செப்ரெம்பர் 9 முதல் 11ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்தியப் பெருங்கடலில் முக்கியமான கப்பல் சரக்கு பரிமாற்ற மையமாக இலங்கை விளங்குவதால், சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளிலிருந்து துறைமுகங்கள் மற்றும் கடற்பரப்புகளை பாதுகாப்பது சட்டபூர்வமான வர்த்தகத்தை உறுதி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கத் தூதரகம் கூறியிருந்தது. அணுசக்தி ஒழுங்குமுறை சபை, மத்திய வங்கி, கடலோரக் காவல் படை, வணிகக் கப்பல் செயலகம், துறைமுக அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் மற்றும் ஏமாற்று கடல்சார் நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், தடைகள் மற்றும் அபாயங்களை மதிப்பிடுதல், இலங்கை கடற்பரப்பில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கடல்சார் நடவடிக்கைகள் கண்டறியப்படும்போது அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சட்டவிரோத வலையமைப்புகளை எதிர்கொள்வதற்கும், சட்டபூர்வமான வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும், முக்கியமான கடற்பரப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் நிபுணத்துவத்தை இலங்கைப் பங்காளிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கே இந்த பயிற்சி என அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் கூறியிருந்தார். தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ சேவைகளை வழங்கக்கூடிய கப்பல் முகவர்கள், எரிபொருள் வழங்குநர்கள் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்கள் குறித்தும் இதன்போது இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இரண்டாவதாக, இலங்கை கடற்பரப்பிற்குள் கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்கான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்கும், ஐந்து நாள் பயிற்சி முகாம் கொழும்பில் நடத்தப்பட்டது. கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வு, அமெரிக்க எரிசக்தித்துறையின் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவு, சிறப்புப் படகுப் படைப்பிரிவு மற்றும் கடலோரக் காவல்படை, அணுசக்தி ஒழுங்குமுறை சபை, அணுசக்தி சபை, துறைமுக அதிகார சபை, சுங்கம், பேரிடர் முகாமைத்துவ மையம், வர்த்தக கப்பல் செயலகம், மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய தேசிய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகளில் கடல் எல்லைக்குள் சட்டவிரோத அணுசக்திப் பொருட்களை இடைமறிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட செயற்பாட்டு வழிகாட்டுதல்களை நிறுவுவது குறித்த நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. கதிரியக்க அவசரநிலைகளின்போது, முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், உள்ளூர் கடல்சார் அதிகார அமைப்புகளிடையே செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த இரண்டு பயிற்சிகளின் அடிப்படை நோக்கம், இலங்கை அரசாங்கம் மற்றும் படைகள் அமெரிக்காவின் தடைகளை எவ்வாறு அனுசரித்து நடப்பது, நடைமுறைப்படுத்துவது என்பதை மையப்படுத்தியது. அமெரிக்க படைகள் செய்ய வேண்டிய வேலைகளை, இலங்கைக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமே இது. இந்த இரண்டு பயிற்சி முகாம்களினதும் அடிப்படை இலக்கு ஈரானிய கப்பல்கள்தான். அதேவேளை, இலங்கைக்கு அருகே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்கக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட செய்திகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்திருக்கிறார். அமெரிக்கா அத்தகைய அழுத்தங்களை கொடுக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்ததோ இல்லையோ அமெரிக்காவை மீறிச் செயற்பட முடியாத நிலையில் இலங்கை இருக்கிறது என்பதே உண்மை. இதனைத் தாண்டி ஈரானிய கப்பல்களுக்கு விநியோகங்களை மேற்கொள்ளக்கூடிய தற்துணிவு இலங்கைக்கு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Post a Comment

0 Comments