elugai

இலக்கு மாறவில்லை, சட்டத்தின் பெயர்தான் மாறுகிறதா?

இலக்கு வைக்கும் இன்னொரு சட்டம்

இலக்கு வைக்கும் இன்னொரு சட்டம்

கட்டுரையாளர் - என்.கண்ணன்

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், இதற்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட குரல்கள் மிகமிகக் குறைவு என்றே கூறலாம். 22வது திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகள், அதை எடுத்து அனோஜன் விவகாரம் என பல்வேறு விவகாரங்களுக்குள் கவனம் திசை திருப்பப்பட்டிருந்த சூழலில், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அதனை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் முன்னதாக கூறியிருந்தார். அதுபோல முன்னாள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார். 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகள், பொது அமைப்புகள் என பல்வேறு தரப்புகளும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரும் தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற முடியவில்லை. அதுபோல, உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டாலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாகவும், இவர்கள் எதிர்பார்க்கின்ற வியாக்கியானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்கப் போவதில்லை. சட்டமூலத்தின் எந்தப் பிரிவுகளாவது அரசியலமைப்புடன் முரண்படுகிறதா என்பதன் அடிப்படையில்தான் அதன் வியாக்கியானம் அமைந்திருக்கும். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக இன்னொரு சட்டம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன், உயர்நீதிமன்றம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை. எனவே, இந்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவது என்பது, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல.

அனுர அரசாங்கத்தை பொறுத்தவரையில் தான் நினைத்தவற்றை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதில் மிகத் தெளிவாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையோ, பொது அமைப்புகளின் கருத்துகளையோ அல்லது சர்வதேச கரிசனைகளையோ அது கவனத்தில் கொள்வதாக இல்லை. சில விடயங்களில், நேரடியாக முட்டி மோதிக் கொள்ளாமல், காலத்தை இழுத்தடித்து, நீர்த்துப்போகச் செய்து, அந்த விவகாரத்தை மெதுவாக நடைமுறைக்கு கொண்டு வருகின்ற ஒரு அணுகுமுறையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது முன்னைய பயங்கரவாத தடைச் சட்டத்தை விட, கொடுமையானதென பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படுகின்ற புதிய சட்டத்தை கொண்டு வரத் தயாராகியுள்ளது. இந்தச் சட்டமும் மிக விரைவில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல் எதிரிகள், சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துக் குரல்களுக்கு எதிராக தன்னிச்சையாகப் பிரயோகிக்கப்படும், தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உருவாகும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு எச்சரித்திருக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தபோது, அதனை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே குறிப்பிட்டிருந்தார். ஓரிரண்டு ஆண்டுகளில் நீக்கப்படும் என்ற வாக்குறுதி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நம்பி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்திருந்தார். இந்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்களிப்பு நடத்தப்பட்ட நாளில், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் தமிழர் தரப்பில் அந்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதற்கோ அல்லது எதிராக வாக்களிப்பதற்கோ நாடாளுமன்றத்தில் யாரும் இருக்கவில்லை. ஆனால் ஜே.ஆர். அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1982 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 47 ஆண்டுகளுக்கு பின்னர், அது தவறானது என்று உணரப்பட்டு அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக தமிழர்களை இலக்கு வைத்தே கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருந்த ஆயுதப் போராட்டத்தை அடக்குகின்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், பின்னர் வேறு தரப்பினரையும் இலக்கு வைக்கப் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் இனத்தை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமாக மாறுகின்ற சூழலிலும் தமிழர்கள் குறிக்கப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அமைப்பான சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல் எதிரிகள், சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துக் குரல்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் எனக் கூறியிருக்கிறது அந்த அமைப்பு. இதில், சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர். சிறுபான்மை தமிழ் சமூகத்தினரை இலக்கு வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். இப்போது சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்கக்கூடிய ஒரு சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வருகிறது. ஆக காலம் மாறினாலும் இலக்கு வைக்கப்படுபவர்கள் மாறவில்லை.

1979 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த சூழலில், ஜே.ஆர். அந்த சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கான தேவை அவருக்கு இருந்தது, அதனை நியாயப்படுத்தக்கூடிய சூழலும் இருந்தது. அதனால்தான், அன்றைய தமிழ்த் தலைமை அவரது வாக்குறுதியை நம்பி ஏமாந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி அல்ல. பயங்கரவாதம் தொடர்பான அச்சுறுத்தல் இல்லை. ஆயுதப் போராட்டம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியங்கள் எதுவும் இல்லை. அதைவிட, அனைவரும் சமத்துவமாக சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவோம் எனக் கூறுகின்ற ஒரு அரசாங்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசாங்கம்தான், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் கொண்டு வருகிறது. சிறுபான்மையினரை ஆபத்தில் சிக்க வைக்கக்கூடிய ஒரு சட்டத்தையும் இந்த அரசாங்கமே உருவாக்குகிறது. இது ஒரு முரண்பட்ட நிலையாகும்.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் ஆயுதப்படைகளால் தேடுதல்களை நடத்தவோ, கைது செய்யவோ, நீதிமன்றில் நிறுத்தப்பட முன்னர் தடுத்து வைக்கவோ முடியும். ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கின்ற இந்த சட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய வாக்குறுதிகளுக்கு முரணானது. இது எந்தளவுக்கு பாரதூரமான சூழலை ஏற்படுத்தும் என கணிப்பது கடினமல்ல. ஆயுதப்படைகள் கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை கூறித் தெரிய வேண்டியதில்லை. கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள், சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள், அரச படைகளால் கடத்தப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவசரகால சட்ட விதிகளின் கீழ் ஆயுதப் படைகளுக்கு அப்போது வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களினால் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன. இப்போது அவசரகாலச் சட்டவிதிகள் நடைமுறையில் இல்லை, ஆனால் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம், அவர்களுக்கு தேடுதல் நடத்தும், கைது செய்யும், தடுத்து வைக்கும், விசாரிக்கும் அதிகாரங்களை வழங்குகிறது. அப்படியாயின் நாடு நிரந்தரமாக அவசரகால நிலைக்குள் கொண்டு வரப்படுகிறது. ஆயுதப் படைகள் நிரந்தரமாக மக்களின் உரிமைகள் மீது அதிகாரம் செலுத்துகின்ற நிலை உருவாக்கப்படுகிறது. இந்தச் சூழலில் கைது செய்யப்படுகின்ற - தடுத்து வைக்கப்படுகின்றவர்கள் - காணாமல் ஆக்கப்படுகின்ற சூழல் உருவாகும். இதற்கு வாய்ப்பில்லை என்று கூற முடியாது.

அரசாங்கம் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஒரு சட்டம் அவசியம் என எப்படிக் கருதுகிறதோ அதுபோலத்தான் இதுவும். பயங்கரவாத சூழல் எழலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் அரசாங்கம் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. அதுபோலவே, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்தச் சட்டத்தின் ஊடாக ஆயுதப்படைகள் பெற்றுக்கொள்ளும் அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்படும் என்ற அனுமானங்களையும் ஏற்றேயாக வேண்டும். அவ்வாறு நடக்காது என இந்த அரசாலோ எதிர்காலத்தில் வரக்கூடிய அரசுகளாலோ உறுதி கூற முடியாது. ஏனென்றால் கடந்த காலத்தில் அது நடந்தது, எதிர்காலத்தில் அது நடக்காது என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை.

கடந்தகால தவறுகள் மீள நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது, நல்லிணக்கத்திற்கான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கு பதிலாக, மீள நிகழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம், மீண்டும் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கக்கூடிய சூழலை உருவாக்கும் ஆபத்து உள்ளது. சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பின் எச்சரிக்கை இதனை அடிப்படையாக கொண்டதுதான். இந்தப் புதிய சட்டமூலத்திற்கு எதிராக மக்களை திரட்டுவதோ சர்வதேச ஆதரவை திரட்டுவதோ தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலை பாதிக்கும் போல தெரியவில்லை. அதனிடம் இருக்கின்ற மூன்றில் இரண்டு என்ற அதிகார பலம் எத்தகைய மோசமான சட்டத்தையும் கொண்டு வருவதற்கான வழியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அந்த அதிகாரம் இருக்கும் வரை, இது மாத்திரமல்ல இதைப்போன்ற இன்னும் மோசமான சட்டங்களும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.

Post a Comment

0 Comments