அட்லஸ் ஏஞ்சல் கூட்டுப் பயிற்சியின் நோக்கம்
அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவல்படை இலங்கை விமானப்படையுடன் இணைந்து அட்லஸ் ஏஞ்சல்-2 என்ற கூட்டுப் பயிற்சியை நிறைவு செய்துள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி ஆகஸ்ட் 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 4ஆம் திகதி வரை – 5 நாட்கள் கட்டுநாயக்க, கண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவல்படையின் விமானப்பிரிவின் சி-130 விமானம், 69 அமெரிக்க இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் இதற்காக வந்திருந்தது. 275 இலங்கை விமானப்படையினர் மற்றும் பிரித்தானியா மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 3 பார்வையாளர்கள் உட்பட மொத்தம் 347 பேர் இந்த கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மனிதாபிமான உதவி, பேரிடர் மீட்பு மற்றும் அவசர காலங்களில் கூட்டாளிப் படைகளுடன் இணைந்து செயற்படுவதை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான இந்த கூட்டுப் பயிற்சிக்காக, மொன்டானா தேசியக் காவல்படையின் தளபதியும், விமானப்படைக்கான உதவித் தளபதியுமான பிரிகேடியர் ஜெனரல் டிரேஸ் தோமஸ் மற்றும் மொன்டானா தேசியக் காவல்படையின் தரைப்படைக்கான உதவித் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரெனியா டோர்வால் ஆகியோரும் இலங்கைக்கு வந்திருந்தனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு அட்லஸ் ஏஞ்சல்-1 முதல்கட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டம் இப்போது முடிந்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் முக்கியமானதொரு கட்டம். இதன் பின்னால் பல சூட்சுமமான விடயங்கள் உள்ளன.
மொன்டானா தேசிய காவல்படை என்றால் என்ன? அமெரிக்க இராணுவம் அல்லது விமானப்படை அல்லது கடற்படையுடன் அல்லாமல், மொன்டானா தேசிய காவல்படையுடன் இலங்கை ஏன் இந்த கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கிறது? இந்த கேள்விகளுக்கான பதில்களின் ஊடாகவே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.
மொன்டானா தேசிய காவல்படை என்பது- அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய காவல்படை. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேசிய காவல்படை உள்ளது. இது முழுநேர இராணுவப் படைப்பிரிவு அல்ல. சிவில் பணிகளில் ஈடுபடுகின்ற, இராணுவப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட படைப்பிரிவு தான் இது.
அமெரிக்காவில் மாநில கூட்டுத் திட்டம் (SPP) எனப்படும் ஒரு திட்டம் உள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படும் ஒரு தனித்துவமான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் இதுவாகும். இதற்கமைய, அமெரிக்க மாநிலங்களின் தேசிய காவல்படைகள், 100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் 105 பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளை செய்துள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுடன் மொன்டானா தேசிய காவல்படை உடன்பாடு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்தக் கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவல்படை அமெரிக்கக் கடலோரக் காவல்படை மாவட்டம் 13 ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையின் ஆயுதப்படைகள் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டதன் பிரதான நோக்கம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்துவதாகும்.
மொன்டானா காவல்படை, காட்டுத்தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைக் கையாள்வதில் சிறந்த அனுபவத்தைக் கொண்டது. இலங்கையில் சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை திறம்பட முன்னெடுப்பதற்கான கூட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கு மொன்டானா காவல்படை உதவுகிறது.
வெளிப்படையாக கூறப்படும் காரணமாக இது இருந்தாலும், அதனைத் தாண்டிய நோக்கங்கள் உள்ளன. இலங்கை இந்தியப் பெருங்கடலின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளதால், பிராந்தியப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல்களைத் தடுத்தல், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள், கடல் எல்லைக் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துதல் போன்ற இலக்குகளும் இதற்கு உள்ளன. இவ்வாறான சூழலில், இரு நாட்டுப் படைகளும் இணைந்து செயற்படும் திறனை வளர்ப்பது இந்த உடன்பாட்டின் நோக்கமாகும்.
பாரம்பரியப் பயிற்சிகள் மட்டுமின்றி, தற்காலப் பாதுகாப்பு சவால்களான சைபர் பாதுகாப்பு மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பாதுகாப்புத் திறன்களை இலங்கைப் படைகளுக்கு வழங்கவும், இந்த உடன்பாடு வழிவகுத்திருக்கிறது.
இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் தேசிய காவல்படை பணியகம் நிர்வகிக்கிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப, அந்தந்தப் பிராந்தியத்திற்கான அமெரிக்க இராணுவக் கட்டளைகளின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. இதற்கான முழு நிதியையும் அமெரிக்க அரசாங்கம் வழங்குகிறது.
அமெரிக்கா இந்த மாநில கூட்டுத் திட்டத்தை (SPP) இலங்கையுடன் நடைமுறைப்படுத்தியதன் பின்னால் மிக முக்கியமான இந்தோ-பசுபிக் பிராந்திய மூலோபாய அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
அமெரிக்க இராணுவம், கடற்படை, விமானப்படையுடன் நேரடியான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு இலங்கை தயாராக இருக்கவில்லை. இலங்கையுடன் SOFA எனப்படும் படைகளை நிலைப்படுத்தல் உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திட விரும்பிய போதும், இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.
SOFA உடன்பாட்டின் நிபந்தனைகளின்படி, அமெரிக்க இராணுவத்தினர், இலங்கைக்குள் சீருடையுடனும், ஆயுதங்களுடனும் தடையின்றி நடமாடவும், அவர்களின் கப்பல்கள் மற்றும் விமானங்களைச் சோதனையின்றி துறைமுகங்களுக்குள் கொண்டு வரவும் அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா கோரியது.
இது இலங்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தை, வெளிநாட்டு படைக்கு வழங்குவதாக அமையும் என்பதால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதி இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்தது.
அதேவேளை, அமெரிக்காவுடன் நேரடியாக பாதுகாப்பு உடன்பாடு செய்தால், போர்கள் அல்லது மோதல்களின் போது, அமெரிக்காவிற்கு ஆதரவாக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற அச்சமும் இலங்கைக்கு உள்ளது. அணிசேரா கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறும் இலங்கை, இவ்வாறான உடன்பாடு அதற்கு இடையூறாக இருக்கும் என்றும் கருதியது.
மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதி, சீனா மற்றும் இந்தியா ஆகிய வல்லரசுகளின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள நிலையில், அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கையில் தளம் அமைக்கவோ அல்லது தடையற்ற நடமாட்டத்திற்கோ வழிவகுக்கும் உடன்பாடுகளைச் செய்தால், அது சீனா மற்றும் இந்தியாவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக் கூடிய சூழலும் உள்ளது.
பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு ரீதியாக சீனாவுடனும், பிராந்தியப் பாதுகாப்பு ரீதியாக இந்தியாவுடனும் கொண்டுள்ள உறவுகளைச் சமநிலையில் பேண விரும்புவதால், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்வதை இலங்கை தவிர்க்கிறது. இன்னொரு பக்கத்தில், அமெரிக்காவுடன் நேரடி பாதுகாப்பு உடன்பாடு செய்வது, உள்நாட்டில் கடுமையான அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சமும் அரசாங்கத்துக்கு உள்ளது.
இவ்வாறாக, பாதுகாப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ள பின்னடித்துக் கொண்டிருந்த இலங்கையை, பின்கதவு வழியாக அமுக்கிப் பிடித்திருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக மொன்டானா தேசிய காவல்படையுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு போர் சார்ந்த உடன்பாடு அல்ல- பேரிடர் முகாமைத்துவம், மனிதாபிமான உதவி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக்கான ஒரு சிவில்-இராணுவக் கூட்டுத் திட்டம் மட்டுமே.
இலங்கை இராணுவ ஆட்பலத்தைக் குறைத்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பாதுகாப்புப் படையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. மொன்டானா காவல்படையுடன் சைபர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பயிற்சிகள் இதற்கு உதவியாக அமைகிறது. இலங்கையில் இராணுவத் தளங்களை அமைக்காமல், இத்தகைய காவல்படை கூட்டணிகள் மூலம் நெருங்கிய பாதுகாப்பு உறவைத் தக்கவைக்க அமெரிக்கா விரும்புகிறது.
அமெரிக்காவின் தீவிரமான முன்னணிப் போர்ப் பிரிவுகளை இலங்கைக்கு அனுப்பினால் அது பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும். அதற்குப் பதிலாக, தேசிய காவல்படை போன்ற ஒரு சிவில்-இராணுவ அமைப்பை அனுப்புவது, அரசியல் ரீதியாக அதிக எதிர்ப்பையும் தராது; அதே நேரம் அமெரிக்காவின் பாதுகாப்பு நோக்கமும் நிறைவேறும். சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு மென்சக்தி இராஜதந்திரம்.
இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் பெரும்பாலான கப்பல்கள், இலங்கை கடல் பகுதி வழியாகவே செல்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதம், கடல் கொள்ளை போன்ற அச்சுறுத்தல்கள் இல்லாமல் நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவிற்கு இலங்கை போன்ற நாடுகளின் நட்பு அவசியமாகிறது. இதன் மூலம், அமெரிக்கா தன் இலக்குகளை நோக்கி முன்னேறுவதை உறுதி செய்து கொள்கிறது.
அதேவேளை, இலங்கைக்கும் பல நன்மைகள் உள்ளன. மொன்டானா தேசியக் காவல்படைக்கும் இலங்கைக்கும் இடையிலான அரச கூட்டாண்மைத் திட்டம், அமெரிக்காவிற்கும் அதன் இராணுவத் தயார்நிலைக்கும் நேரடியாக குறிப்பிடத்தக்க மூலோபாய மற்றும் செயற்பாட்டு நன்மைகளை வழங்குகிறது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், சட்டவிரோதக் கடத்தல், முறையற்ற குடியேற்றம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கூட்டுத் திறன்களை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்கிறது. இதன் மூலமாக, இலங்கை, சுதந்திரமான, பாதுகாப்பான, திறந்த மற்றும் மீள்திறன் கொண்ட இந்தோ-பசுபிக் பிராந்தியத்தைப் பராமரிக்கும் பரந்த அமெரிக்க இலக்கிற்குப் பங்களிக்கிறது.
அட்லஸ் ஏஞ்சல் 2 போன்ற பயிற்சிகள் மொன்டானா தேசியக் காவல்படை, அமெரிக்க பசுபிக் விமானப் படைகள் மற்றும் இலங்கைப் படைகளை ஒன்றிணைக்கின்றன. இது தடையற்ற திறனை உருவாக்குகிறது, அதாவது அமெரிக்க மற்றும் இலங்கைப் படைப் பிரிவுகள் எவ்வாறு துல்லியமாகத் தொடர்பு கொள்வது மற்றும் திட்டங்களை இணைந்து செயற்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சி உதவுகிறது.
அமெரிக்கப் படைகள் சிக்கலான, மாறுபட்ட சூழல்களில் செயற்படுவதில் அனுபவத்தைப் பெறுகின்றன. பிராந்திய வானிலை முரண்பாடுகள், பருவமழையின் தாக்கங்கள், நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெப்பமண்டலத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான சிறப்புத் தந்திரங்களை அவர்கள் இலங்கைப் படைகளிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
பகிரப்பட்ட கட்டளைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, தெற்காசியாவில் ஒரு பெரிய புவிசார் அரசியல் நெருக்கடி அல்லது சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டால், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளூர் படைகளுடன் விரைவாக ஒருங்கிணைந்து அமெரிக்கக் குடிமக்களைப் பாதுகாத்து வெளியேற்றுவதை உறுதி செய்வது இலகுவாகும்.
அதைவிட, இது செலவு குறைந்த ஒரு பாதுகாப்பு இராஜதந்திரமாகும். இந்தக் கூட்டாண்மையை, அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம், நம்பகமான உலகளாவிய இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான மிகவும் செலவுகுறைந்த சிக்கனமான வழியாக கருதுகிறது.
முழு உலகிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்காவினால் – முழு உலகிலும் தன் படைகளை நிலைப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதற்குப் பதிலாக, பிராந்திய அவசரகால மீட்பு நடவடிக்கைகளின் சுமையை இலங்கை போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், அமெரிக்க இராணுவம் பிராந்தியப் பாதுகாப்பு நிலைப்படுத்தலை தனியாக நிர்வகிக்க வேண்டிய நிலையைத் தவிர்த்துக் கொள்கிறது.
இலங்கைக்கும் இந்தக் கூட்டுப் பயிற்சியினால் நன்மைகள் இருந்தாலும், அமெரிக்கா நடத்துகின்ற பயிற்சிகளுக்குப் பின்னால், பல்வேறு நோக்கங்கள் இருப்பதை மறுக்க முடியாத உண்மை.
0 Comments