இன்னொரு பொருளாதாரப் போர் வருமா?
அண்மையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2028 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதாரப் போரை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என மத்திய வங்கி கூறுகிறது. ஆனால், 2028 ஆம் ஆண்டுக்குள் அந்நியச் செலாவணி கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.
அதற்குத் தேவையான மேலதிக 7 பில்லியன் டொலர்களை இலங்கை எவ்வாறு திரட்டப் போகிறது என்று கேள்வி எழுப்பிய ரணில், அதற்கான தெளிவான திட்டம் தற்போது அரசாங்கத்திடம் இல்லை எனவும் கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி, எதிர்கால கடன் மீளச் செலுத்தலுக்குத் தயாராகத் தவறினால், இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கக் கூடும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த எச்சரிக்கைக்கு அரசாங்கம் கடுமையாக எதிர்வினையாற்றியது. மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர், பிரதிநிதி அமைச்சர் என, அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இதற்குப் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கத் தவறினால் 2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். (படம்: Lanka News Web)
கடந்த ஆண்டும் அந்நியச் செலாவணி இருப்பைத் தக்கவைத்துக் கொண்டே, 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், அதுபோல, இந்த ஆண்டில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறினார். இதுபோலவே, மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணி இருப்பு இருந்தாலும் கடன் மீளச் செலுத்துதலை உரியவாறு முன்னெடுப்போம், பொருளாதார நெருக்கடி வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் போர் என்றதும் நாட்டு மக்கள் எந்தளவுக்குப் பதற்றமடைவார்கள் என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது. அதனால் தான், அப்படி நடப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்று நிறுவ அரசாங்கம் முற்பட்டது. ஆனாலும், தற்போதைய பொருளாதார நிலை நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, பொருளாதார நிலை குறித்து, விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து- கொடுத்த வாக்குறுதிகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். எரிபொருள் விலை, மின்கட்டணம், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்து விட்டது.
நாட்டின் பொருளாதாரம், எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தாம் நினைத்தவாறு செயற்படக் கூடிய நிலையில் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அடிமட்டத்திற்கு வீழ்ந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது சாதாரண விடயம் இல்லை. அதற்குச் சரியான திட்டங்கள், உபாயங்கள் இருந்தால் மட்டும் போதாது, குறிப்பிட்ட காலமும் தேவை.
தற்போதைய அரசாங்கம் தன்னிடம், பொருளாதாரத்தை மீட்கின்ற- கடனை மீளச் செலுத்துகின்ற திறன் இருப்பதாக கூறினாலும், ரணில் விக்கிரமசிங்க, ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதற்கான உபாயம் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். அரசாங்கம் கூறுவது போல, அவர்களின் கருத்து அரசியல் நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டுமானால், அதற்கான புறச் சூழல் இருக்கிறதா என்று சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியும்.
2022ஆம் ஆண்டு பொருளாதாரம் இறுக்கமடைந்து வருவதை சாதாரண மக்களால் உணர முடிந்தது. அவர்களின் கையில் இருந்த பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருந்தது, அவர்கள் கேட்கும் பொருட்களை பெற முடியவில்லை, அந்தப் பொருட்களை பெறுவதற்கு அதிக பணத்தைச் செலவிட வேண்டியிருந்தது. அது சாதாரண மக்களுக்கு, நாடும் தாங்களும் பொருளாதார வீழ்ச்சிக்குள் சிக்கியிருப்பதை நடைமுறையில் உணர்த்தியது.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான காலகட்டம் கடினமானதாக இருக்கும், அரசாங்கம் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதே கூறியிருந்தார். அந்தக் கடினமான காலகட்டத்தை தாண்டிக் கொண்டிருந்த போது, மக்களால் ஓரளவுக்கு நாட்டின் பொருளாதாரம் நிமிர்கிறது என்று உணர முடிந்தது.
தங்களின் கைக்கு வரும் பணம், அது செலவழியும் விதம், இந்த இரண்டும் அவர்களுக்குப் பொருளாதார சூழலைப் புரிய வைக்கும். இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம் கூறுவது போல, பாதுகாப்பான நிலை இருப்பதாக கருதக் கூடிய சூழல் இன்று மக்களிடம் இல்லை என்பதே உண்மை.
பணச்சுருக்கத்தில் (பணவீக்கம் எதிர்மறை நிலையில் இருப்பது) இருந்து பணவீக்க (நேர்மறை நிலை) நிலைக்கு மாறிய பின்னர், பணவீக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கடைசியாக ஆகஸ்ட் மாத பணவீக்கம் 8 சதவீதத்தை தொட்டு விட்டது.
பணவீக்கத்தை 5 சதவீதமாக கட்டுப்படுத்துவது தான், மத்திய வங்கியின், அரசாங்கத்தின் நிதிக் கொள்கையாகும். ஆனால், அதற்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.
டொலர் மதிப்புக் குறையத் தொடங்கினாலும், பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அண்மையில், கோதுமை மா விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது, பால்மா பொதியின் விலை 100 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இவற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் பல உற்பத்திகளின் சங்கிலித் தொடரான விலை அதிகரிப்புக்கு இது காரணமாகியிருக்கிறது.
கடந்த மாதம் உணவல்லா பொருட்களின் பணவீக்கத்தை விட உணவுப் பணவீக்கம் தான் அதிகமாக உயர்ந்திருந்தது. அதுவே 7.3 வீதத்திலிருந்து, 8 வீதமாக பணவீக்கம் உயரக் காரணம்.
பொருளாதார நெருக்கடியின் போது, 2022 செப்டெம்பரில், பணவீக்கம் 67.4 வீதம் வரை உச்சத்தை தொட்டது. அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிலை பரவாயில்லைத் தான். ஆனால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பணவீக்கத்தின் அதிகரிப்பு, மக்களை எதிர்மறையான சிந்தனைக்குள் தான் தள்ளும்.
இவ்வாறான நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொதுக் கடன் முகாமைத்துவ பணியகத்தின் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான அறிக்கை இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மொத்தப் பொதுக் கடன், 2026 மார்ச் மாத இறுதியில் 32.233 டிரில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், ஜூன் 30ஆம் திகதி 32.977 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது சுமார் 744 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
இது கடன்களை வாங்கப் போவதில்லை எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கடன் அதிகரிப்பது எப்படி என்ற கேள்விகளை மக்கள் முன் எழுப்பியிருக்கிறது. இந்தப் புள்ளிவிபரங்களின் பின்னால் பல காரணிகள் இருந்தாலும், சாதாரண மக்களால் அதனை விளங்கிக் கொள்ள முடியாது.
உள்நாட்டு நாணயம் மதிப்பிறங்கும் போது, புதிய கடன்களை வாங்காவிட்டாலும் அந்நிய செலாவணிக் கடன்கள் அதிகரிக்கும். அந்த உண்மை சாதாரண மக்களால் புரிந்து கொள்வது கடினம். அதேவேளை அந்நியச் செலாவணியின் பெறுமதி குறையத் தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டுக் கடன் பெறுமதி உயர்ந்து கொண்டிருப்பது இன்னொரு அதிர்ச்சி தான்.
அதுபோல, ஒரு நபருக்கான தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோட்டு எல்லை, ஜூலை மாதம், 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனி நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்த பட்ச தொகை தான் இது.
ஆனால், இலங்கையில் குறைந்தபட்ச ஊதியத்தை 30 ஆயிரம் ரூபாவாக அரசாங்கமே நிர்ணயித்திருக்கிறது. இன்றைக்கும் 8 மணிநேர வேலைக்கு 25 ஆயிரம் ரூபா சம்பளம் என விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 17,679 ரூபா தேவைப்படுகின்ற நிலையில், 4 பேர் கொண்ட குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற 70,716 ரூபா தேவைப்படும். ஆனால் அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகின்ற ஒருவரால், எப்படி குடும்பம் நடத்தக் கூடிய நிலை இருக்கும்? இந்த அடிப்படைச் சூழல்கள் பொருளாதார நிலையை மக்களுக்கு தெளிவாக காண்பிக்கும்.
அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி வராது, அதனை தவிர்ப்பதற்கான திட்டங்கள் உள்ளன என்று கூறினாலும், அதனை சாதாரண மக்கள் நம்பக் கூடிய ஏது நிலைகள் இல்லை என்பதே யதார்த்தம். அதனை மக்களுக்கு நம்ப வைப்பதற்கேற்ற பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
0 Comments