elugai

இந்திய பாதுகாப்பு கவசத்துக்குள் இலங்கை

இந்திய பாதுகாப்பு கவசத்துக்குள் இலங்கை

இந்திய பாதுகாப்பு கவசத்துக்குள் இலங்கை

கட்டுரையாளர் - சுபத்ரா

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் இலங்கைப் பயணம் எதிர்பார்க்கப்பட்டது போலவே, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளின், புதிய எல்லையை தொடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியப்படைகள் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில், கே.சி.பந்த் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்திற்கு பின்னர், கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் இடம்பெற்றது. இந்தப் பயணத்தின் போது அவர், இந்தியாவுக்கு எதிராக, இலங்கையை பயன்படுத்துவதற்கு வேறு நாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, மூன்று உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று, இரண்டு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது. இன்னொன்று, இரண்டு நாடுகளினதும் கடெட் படையணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது. மூன்றாவது, இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கிய 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயப்படுத்திக் கொடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஆகும்.

இதற்கு முன்னர் இந்தியா இராணுவ ரீதியாக பல கொடைகள், உதவிகள், ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தாலும், இவ்வாறான சிறியளவிலான புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்து கொள்வதில்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு ஒன்றுக்கு அமைய, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை சீராக முறைப்படுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.

2006ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில், இந்தியா எல்-70 ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 24ஐ கொடையாக வழங்கியது. இவற்றில் 18 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ஏற்கனவே இந்தியாவினால் மேம்படுத்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது, புரிந்துணர்வு உடன்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போது மூன்று பாதுகாப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

தற்போது, எஞ்சியுள்ள 6 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை மறுசீரமைப்புச் செய்து, நவீனமயப்படுத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. இதற்காகவே இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. எல்-70 வகை விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மிகவும் பழையவை என்றாலும், தற்கால வான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.

இந்தியா இவற்றை பெல் எனப்படும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம், நவீனமயப்படுத்தி தன்னியக்க பொறிமுறை மூலம் கையாளத் தொடங்கி விட்டது. ராடார், கணினி மயப்படுத்தப்பட்ட குறிபார்த்துச் சுடும் வசதி, மற்றும் தன்னியக்க டிஜிட்டல் சூட்டுக் கட்டுப்பாட்டு தொகுதிகளை கொண்டதாக, இதனை மாற்றியமைத்திருக்கிறது இந்தியா. ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கித் தொகுதியை நவீனமயப்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 8 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் டொலர் வரை செலவாகும்.

இதுபோலத் தான் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய எல்-70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையும் எந்தச் செலவுமின்றி இந்தியா மறுசீரமைத்துக் கொடுக்கவுள்ளது. இந்த நவீனமயப்படுத்தல் திட்டத்தில் பெல் நிறுவனம் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில், பழைய ஹைட்ரோலிக் அமைப்புகளுக்குப் பதிலாக மின்சார இயக்கிகள் பொருத்தப்படுவது, துரித செயற்பாடு, நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை உயர்த்தும். நவீன சென்சார்கள் பொருத்தப்பட்ட, இந்த ஒருங்கிணைந்த சூட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு இதன் திறனை மேலும் வலுப்படுத்தும். அத்துடன், பகல்நேர தொலைக்காட்சிப் பார்வைக்கருவி (Daylight Television Sight), வெப்பப் படமாக்கல் அமைப்பு (Thermal Imaging System), கண்களுக்குப் பாதுகாப்பான லேசர் தொலைவு கண்டறியும் கருவி (Eye-Safe Laser Range Finder), டிஜிட்டல் சூட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு (Digital Fire-Control Electronics) கொண்டதாக இந்த துப்பாக்கிகள் மறுசீரமைக்கப்படும் போது, பகல் மற்றும் இரவு நேரச் செயல்பாடுகளில் இலக்குகளைக் கண்டறிந்து தாக்குவது இலகுவாகும். அத்துடன், தன்னியக்க எறிபொருள் கணக்கீட்டுத் திறன்களும் இதில் இணைக்கப்படும். இது துப்பாக்கி முனை வேகத் திருத்தங்கள், துப்பாக்கியின் சீரமைப்பு, சாய்வு ஈடுசெய்தல், சுடும் துல்லியத்தை மேம்படுத்தல், இயக்குபவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் உதவும்.

அதேவேளை, இன்றும் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கும், இந்தியா முன் வந்திருக்கிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோது, எந்த நெருக்கடியான சூழலிலும் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார். இது எதிர்காலத்தில் இலங்கையில் எந்த ஒரு சூழலிலும் பிற நாடுகளின் தலையீட்டை தவிர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கான ஒரு உத்தரவாதம் எனலாம். இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளுகின்ற போது, பிற நாடுகள் உதவ முன் வர முடியாத ஒரு தடுப்பை உருவாக்குவது தான், இதன் அடிப்படை நோக்கம்.

கடல் சார் ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்துவது பற்றி இருதரப்புகளும் கலந்துரையாடியிருக்கின்றன. கூட்டாக இதனை செயற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்புக்களின் போது, ராஜ்நாத் சிங் வெளியிட்ட கருத்துக்கள், அவர் இலங்கையுடனான உறவுகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார் என்பதை எடுத்தியம்புகின்றன.

புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள சூழலில், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் மீது குறி வைத்து செயற்படுகின்ற நிலையில், இலங்கையில் தனியுரிமையை நிலைநிறுத்துவதில் இந்தியா அநேகமாக வெற்றி பெற்று வருகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணமும், அதனை சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இணக்கப்பாடுகளும் இதனையே உறுதி செய்கின்றன.

ராஜ்நாத் சிங்கின் வருகையை முன்னிட்டு, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.உதயகிரி என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் வந்திருந்தது. அந்தக் கப்பலில் கடந்த 9ஆம் திகதி இரவு ஒரு வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜ்நாத் சிங் பங்கேற்ற அந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ உள்ளிட்டவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பலில் எடுத்து வரப்பட்ட ஒரு தொகுதி இராணுவ உபகரணங்களையும், ராஜ்நாத் சிங் கொடையாக வழங்கியிருந்தார்.

இந்திய கடற்படை ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த போது நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல்கள் தீவிரமாக இருந்த போது, அதனை எதிர்கொள்வதற்கு, இந்தியா இந்திரா எம்.கே-2 ரக ராடார் தொகுதிகளை கொடையாக வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் வருவதை முன் எச்சரிக்கை செய்வதற்காக, அவை வவுனியா, புத்தளம், கட்டுநாயக்க உள்ளிட்ட இடங்களில் அப்போது நிறுவப்பட்டிருந்தன. அவை பொருத்தப்பட்டு 20 வருடங்களாகி விட்டன. அவற்றுக்குத் தேவையான உதிரிப்பாகங்களையும், இலங்கை கடற்படைக்கு இந்தியாவினால் கொடையாக வழங்கப்பட்ட சயுரா என்ற போர்க்கப்பலுக்கு தேவையான உதிரிப் பாகங்களையும், ஐஎன்எஸ் உதயகிரி கப்பல் எடுத்து வந்து கொடையாக வழங்கியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் இலங்கைக்கு - குறிப்பாக பாதுகாப்பு தரப்புகளுக்கு கொடைகளை வழங்குவதை இந்தியா அதிகரித்து வருகிறது. டிட்வா சூறாவளிக்கு பின்னர் பெய்லி பாலங்கள் பலவற்றை இந்தியா அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதற்கென கடந்த 10 மாதங்களாக இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினர், இலங்கையில் நிலை கொண்டுள்ளனர். அவர்களின் இருப்பு இந்தியாவுக்கு ஒருவித பாதுகாப்பு மனோநிலையைக் கொடுக்கிறது. பாதுகாப்பு துறையில் இலங்கையுடனான நெருக்கத்தை எந்த வழிகளில் எல்லாம் அதிகரித்துக் கொள்ள முடியும், எந்த வழிகளில் இலங்கையுடன் பிறநாடுகள் உறவுகள், ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த கூடும் என்பதை ஆராய்ந்து, இந்தியா செயற்படத் தொடங்கியிருக்கிறது.

ஐஎன்எஸ் உதயகிரி கப்பலில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை இராணுவத்திற்கான செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா உதவும் எனக் கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் இலங்கைப் படைகளின் திறன்களை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ள போதும், சரியான தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், தரவுப் பகுப்பாய்வு, கண்காணிப்பு, தளபாடத் திட்டமிடல் மற்றும் விரைவான முடிவெடுத்தல் போன்ற துறைகளில் இந்த ஆய்வகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை இராணுவத்திற்கு கிடைத்துள்ள ஒரு பொன்னான வாய்ப்பு என்றே சொல்லலாம்.

செயற்கை நுண்ணறிவு இராணுவ தொழில்நுட்பம் கண்காணிப்பு இலங்கை இராணுவத்திற்கான செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைப்பதற்கு இந்தியா உதவும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

சர்வதேச நாடுகள் தங்களின் இராணுவச் செயற்பாடுகளை அதிவேகமாகவும், துல்லியமாகவும், குறைந்த மனித இழப்புகளுடனும் கையாளுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டன. புலனாய்வுத்துறை மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் சென்சார்கள் மூலம் பெறப்படும் பில்லியன் கணக்கான தரவுகளை மனிதர்களால் குறுகிய நேரத்தில் ஆய்வு செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் இந்தத் தரவுகளை மிகச் சொற்ப நேரத்தில் பகுப்பாய்வு செய்து, எதிரிகளின் நடமாட்டம் மற்றும் பதுங்கு குழிகளைத் துல்லியமாகக் கண்டறிகின்றன.

போர்க்களத்தில் எதிரி வாகனங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களை மனிதத் தவறுகள் ஏதுமின்றி துல்லியமாக அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் வான்வழித் தாக்குதல் இலக்குகளைத் தேர்வு செய்ய இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. தானாகவே இயங்கும் நூற்றுக்கணக்கான டாங்குகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற 'ட்ரோன் கூட்டங்களை' (Drone Swarms) ஒருங்கிணைத்து எதிரிப் பகுதிகளைத் தாக்கும் உத்திகளுக்கு, செயற்கை நுண்ணறிவு அவசியமாகிறது.

இராணுவத்தின் இரகசியத் தரவுகள் திருடப்படுவதைத் தடுக்கவும், எதிரி நாடுகளின் கணினி வலையமைப்புகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தவும், அதேநேரத்தில் வரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும் இது பாதுகாப்பு அரணாகச் செயற்படும். ஆயுதங்கள், உணவுகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் போர்க்களத்திற்குச் சரியான நேரத்திற்குப் பகிர்ந்தளிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவும். அத்துடன், போர் விமானங்கள் அல்லது வாகனங்கள் எப்போது பழுதடையும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் 'முன்னறிவிப்பு பராமரிப்பு' தொழில்நுட்பத்திற்கும் இது பயன்படுகிறது.

சர்வதேச நாடுகள் இராணுவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு வேகம் மற்றும் துல்லியம் என்பனவே முக்கிய காரணம். மனிதர்களை விட பன்மடங்கு வேகமாக முடிவுகளை எடுக்க முடிவதுடன், அதிகரித்து வரும் இராணுவ ஆள்சேர்ப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கும், ஆபத்தான போர்க்களங்களுக்கு மனிதர்களுக்குப் பதிலாகப் பொறிகளை அனுப்பி உயிரிழப்புகளை குறைப்பதற்கும் இது உதவும். இதனால், அமெரிக்க போர்த் திணைக்களம், தனது இராணுவத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு மயமாக்கப்பட்ட படையாக மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனா தனது 'இராணுவ-சிவிலியன் இணைவு' கொள்கை மூலம், சாதாரண நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை நேரடியாக இராணுவப் பயன்பாட்டிற்கு மாற்றி வருகிறது.

இந்திய ஆயுதப் படைகளும், நவீனப் போர்முறையை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மிக வேகமாகத் தங்களின் பாதுகாப்பு கட்டமைப்பில் இணைத்து வருகின்றன. இந்திய இராணுவம் போர்க்களக் கண்காணிப்பிற்காக 'சஞ்சய்' திட்டத்தையும், வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த 'ஆகாஷ்தீர்' திட்டத்தையும் ஒருங்கிணைந்த முப்படைத் தரவு மேகக்கணி மூலம் இயக்கி வருகிறது. முன்கூட்டியே சைபர் அச்சுறுத்தல்களைக் கண்டறியவும், தானியங்கி பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்கவும் 'ஏஐ கவாச்' போன்ற பாதுகாப்புத் திட்டங்களை இந்திய இராணுவம் செயற்படுத்தி வருகிறது. எல்லைப் பாதுகாப்பு பகுதிகளில் ட்ரோன்களை வேட்டையாட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் 'கில் வெப்' அமைப்புகளையும், 'டென் ஏஐ' ஆயுத அமைப்பையும் இந்தியா பரிசோதித்து வருகிறது. இது மனிதர்களின் நடமாட்டம் இன்றி எல்லையைக் கண்காணிக்க உதவுகிறது. இராணுவ அதிகாரிகளை உள்நாட்டிலேயே பாதுகாப்பாகப் பயிற்றுவிப்பதற்காக, இந்தியா தனக்கென ஒரு பிரத்யேக இராணுவத் தரவு வங்கியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு முக்கியமான இராணுவத் தேவையாக மாறியுள்ள சூழலில் இந்தியாவின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் உருவாக்கப்படுவது அதன் திறனை மேம்படுத்துவதற்கும் துல்லியத்தன்மை வேகம் போன்றவற்றை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஆனாலும், இதனை இலங்கை அரசாங்கம் எந்த அளவுக்கு விரும்பும் என்று தெரியவில்லை. ஏனென்றால், இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் இலங்கை கொண்டு வரப்படுவதற்கு வாய்ப்பை உருவாக்கி விடும். அது நாட்டின் இறையாண்மை பற்றிய கவலைகளை தூண்டும் என்பதால், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்குமா என்பது சந்தேகம் தான்.

Post a Comment

0 Comments