elugai

அந்நியப்படும் தமிழ் அரசுக் கட்சி

அந்நியப்படும் தமிழ் அரசுக் கட்சி

அந்நியப்படும் தமிழ் அரசுக் கட்சி

கட்டுரையாளர் - கபில்

கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கையிலும் நினைவு கூரும் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கில் உள்ள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் நீதிக்கான நீள் பயணம் என்ற தொனிப்பொருளில் பேரணி ஒன்றையும்- தந்தை செல்வா அரங்கில் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இந்த மாநாட்டில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுப் பொருட்களை, அவர்களின் உறவுகள் காட்சிப்படுத்தியிருந்தது, அதனைப் பார்வையிட்ட பலரையும் கண்கலங்க வைத்தது. இந்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் உறுப்பினரும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதியும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டுக்கு முன்னதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பரவலான கவனத்தை பெற்றது.

“ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம். இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்வதில் தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து, அவர்களின் பிரச்சினைகளில் இருந்து எந்தளவுக்கு விலகிச் செல்கிறது என்பதை அடையாளப்படுத்தியிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்பது தமிழ்ச் சமூகத்தில் பரந்துபட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினை விடயத்தில் தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகள் மீது, பாதிக்கப்பட்ட தரப்பினர் நீண்டகாலமாகவே விமர்சனங்களைக் கொண்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான போராட்டங்களில், தமிழ் அரசுக் கட்சி ஆரம்பக் கட்டத்திலேயே தன்னை விலக்கிக் கொண்டு விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட விரிசலும் அதற்குக் காரணம்.

இதன் விளைவாக, யாழ்ப்பாணத்தில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டதும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. அது தவிர, யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணியின் போது, இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. அதையடுத்து இடம்பெற்ற பல்வேறு நடவடிக்கைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியது.

தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சிறிநேசன், சிறிநாத், கோடீஸ்வரன், ரவிகரன் உள்ளிட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பேரணிகள், கூட்டங்களில் பங்கேற்று வந்த போதும், தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், தலைவர் சி.வி.கே.சிவஞானம் போன்றவர்கள், பெரும்பாலும் விலகியே இருந்து வருகின்றனர்.

செம்மணியில் அணையா விளக்குப் போராட்டக் களத்திற்குச் சென்ற சி.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக சிலர் கோஷங்களை எழுப்பி, அவரை விரட்டிய சம்பவம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையுடன் தொடர்புடையதல்ல. தமிழ் அரசுக் கட்சியில் இருந்து அப்போது நீக்கப்பட்டிருந்த ஒருவரே, அந்தச் செயற்பாட்டிற்குக் காரணமாக இருந்தார். அதேநபருடன், இப்போது கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அருகருகே அமர்ந்திருந்த படங்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.

செம்மணி அணையா விளக்குப் போராட்டக் களம் நினைவு நிகழ்வு செம்மணியில் உள்ள அணையா விளக்குப் போராட்டக் களம் — காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து நினைவுகூரும் இடம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையில் தமிழ் அரசுக் கட்சியினால் ஏன் முழு அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாதிருக்கிறது? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களில், அவற்றின் ஒழுங்கமைப்புகளில் தமிழ் அரசுக் கட்சி தங்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது என்பதை கட்சியின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமாக நீடிப்பது தான் சரியானது. கட்சிகள் தங்களின் நலன்களுக்காக இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தூர வீசி விட்டுப் போகும். தமிழ் அரசுக் கட்சியும் முன்னர் இவ்வாறான போராட்டங்களை பயன்படுத்தி விட்டுக் கைவிட்டது வரலாறு.

அதுபோல நடக்காமல் இருப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இதுபோன்ற போராட்டங்களைத் தங்களின் கைகளில் வைத்துக் கொள்வது தான் பொருத்தமானது. பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பாக மட்டும் இருக்கும் போது தான், அது சர்வதேச கவனத்தை பெறும், அதற்கென பெறுமானம் ஒன்று இருக்கும். மாறாக அது அரசியல் கட்சிகளின் அமைப்பாக, அரசியல் கட்சிகளால் ஏவப்படும் ஒரு அமைப்பாக மாறினால் அவற்றுக்கான பெறுமானங்களும் குறைந்து விடும். அவற்றின் மீதான கவன ஈர்ப்பும் குறைந்து போகும்.

அந்த வகையில் தமிழ் அரசுக் கட்சி தங்களுடன் கலந்துரையாடியிருக்கவில்லை எனக் குற்றம்சாட்ட முனைந்தது அபத்தமானது. நீதிக்கான நீள் பயணம் என்ற பேரணிக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் அரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது மிக மிக அபத்தமான ஒரு விடயம். ஏனென்றால், அழைப்பு விடுவதற்கு இது ஒன்றும் விழா அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம். அவர்களின் அரங்கு, அவர்களுக்கான அரங்கு. அவர்களின் வலிகளை வெளிப்படுத்துவதற்கான அரங்கு. அங்கு அழைப்பு விடுத்துப் போய் அமர்ந்திருந்து அரசியல் பேசுவதற்கு இடம் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெரிய தவறு.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். அவரும் சேர்ந்தே அந்த மாநாட்டுக்கான அழைப்பை விடுத்தார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அதனால் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிகழ்வை அறிந்திருந்தனர். அதனால் தான், மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்த கட்சியின் தலைவர், அழைப்பு வரவில்லை என ஒதுக்கிக் கொண்டார். அரசியல் கட்சிகள், மக்களுக்கானதே தவிர தலைவர்களுக்கானது அல்ல. தமிழ் அரசுக் கட்சி மக்களுக்கான கட்சி என்ற நிலையில் இருந்து தலைவர்களுக்கான கட்சியாக தன்னை சுருக்கிக் கொண்டு விட்டது என்பதை இது காட்டுகிறது.

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்ட போது, தமக்கு அழைப்பு விடுத்தால் அதனை பரிசீலிக்கத் தயார் என, ஹக்கீமிடம் கூறியிருந்தார் கஜேந்திரகுமார். அதுபற்றி அறிந்ததும், தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன், நாங்கள் யாரும் அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்றிணையவில்லை என்றும் அழைப்பு விடுப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

அந்த அமைப்பில், கஜேந்திரகுமார் அழைப்பு விடுக்காமல் இணைய வேண்டும் என தமிழ் அரசுக் கட்சி எதிர்பார்த்தது. அதுபோலத் தான், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கும் தமக்கு அழைப்பு வரவேண்டும் என எதிர்பார்த்தது. இது அந்தக் கட்சியின் இரட்டை வேடத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ் அரசுக் கட்சி தானாகச் சென்று தன் பெயரைக் கெடுத்துக் கொண்ட விடயமாக இந்த அறிக்கையை குறிப்பிடலாம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை உணர்வு பூர்வமான ஒன்று. அந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் இலக்குடன் அரசாங்கம் மட்டும் செயற்படவில்லை. தமிழ் அரசுக் கட்சியும் கூட அத்தகையதொரு இலக்குடன் தான் செயற்படுகிறதா என்ற ஐயத்தையே இந்த அறிக்கை ஏற்படுத்தியது. வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றும் கனவுடன் இருக்கும் ஒரு கட்சி, இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Post a Comment

0 Comments