பீரிசின் நூல் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை
"இலங்கையில் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியுடன் போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால், எந்தப் பிரச்சினைகளுக்காகப் போர் வெடித்ததோ, அந்தப் பிரச்சினைகளுக்கு இந்தப் போரின் முடிவு ஒரு தீர்வைத் தந்துவிட்டது என்று பாசாங்கு செய்யக் கூடாது" - இப்படி, அண்மையில் ஒரு நூலாய்வு கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் கிருஷ்ணன் சிறீநிவாசன்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரான கிருஷ்ணன் சிறீநிவாசன், 1994ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அந்தப் பதவியில் இருந்தவர். அதன் பின்னர், கொமன்வெல்த் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளராக 1995 முதல் 2002 வரை 7 ஆண்டுகள் பதவி வகித்தவர்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் — 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் தொடங்கிய பேச்சுக்களின் போது அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்தவர். (படம்: Wikimedia Commons)
அண்மையில் வெளியான, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் "இலங்கை அமைதிச் செயல்முறை: ஓர் உள் பார்வை" (The Sri Lanka Peace Process: An Inside View) என்ற நூல் குறித்து எழுதியுள்ள திறனாய்வுக் கட்டுரையின் இறுதியிலேயே, போர் தொடங்கியதற்கு காரணமான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு போரின் முடிவு தீர்வு காணவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கிருஷ்ணன் சிறீநிவாசன். போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.
ஜி.எல்.பீரிஸ் சட்டப் பேராசிரியராக இருந்து, சந்திரிகா குமாரதுங்கவினால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் அரசாங்கங்களில் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர். 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் தொடங்கிய பேச்சுக்களின் போது, அவரே அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்தார். பேச்சுக்கள் தொடர்பாக அவர் எழுதியுள்ள நூல் முற்றிலும் நேர்மையானதாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர் பேச்சுக்களில் ஒரு தரப்பை பிரதிநிதித்துவம் செய்தவர். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில விடயங்களை மையப்படுத்தி, கிருஷ்ணன் சிறீநிவாசன் தனது கட்டுரையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் நூலை மேற்கோள்காட்டி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என, கிருஷ்ணன் சிறீநிவாசனின் கட்டுரை பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறது:
அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இரு துருவங்களாக வெவ்வேறு இலக்குகளுடன் செயற்பட்டதால் பேச்சுவார்த்தை பலவீனமடைந்தது. விடுதலைப் புலிகள் இந்த அமைதிப் பேச்சுகளைத் தங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு பாதையாக மட்டுமே பார்த்தனரே தவிர, சமஷ்டித் தீர்வை நோக்கி அவர்கள் உண்மையான விருப்பத்துடன் செயற்படவில்லை. அரசியலமைப்பின் ஒற்றையாட்சி (Unitary State) தன்மையிலிருந்து விலகிச் சென்று அதிகாரப்பகிர்வை வழங்க இலங்கை அரசுத் தரப்பிடம் போதிய அரசியல் துணிச்சல் இருக்கவில்லை.
இந்த விடயங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ஒஸ்லோ பேச்சுக்களின் போது, விடுதலைப் புலிகள், உள்ளக சமஷ்டி யோசனையை பரிசீலிக்கத் தயார் என அறிவித்திருந்தனர். அப்படியிருந்தும் அந்தப் பேச்சுக்கள் முன்நோக்கி நகரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமானது, புலிகள் பரிசீலிக்க இணங்கிய உள்ளக சமஷ்டி தீர்வு யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேயில்லை. இந்த நிலையில், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை உருவாக்கும் வரைவு ஒன்றை புலிகள் முன்வைத்திருந்த போதும் அதனை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் சமஷ்டி தீர்வில் அக்கறையின்றி இருந்திருந்தால், அவர்கள் அதுபற்றிப் பேச இணங்கியிருக்கமாட்டார்கள். எனவே அரசாங்கம் சமஷ்டி தீர்வில் - அந்த முறையிலான அதிகாரப் பகிர்வில் - அக்கறை கொண்டிருந்ததா என்பது கேள்வி. 2000ஆம் ஆண்டு சந்திரிகாவும், ஜி.எல்.பீரிசும் இணைந்து அதிகாரப்பகிர்வு திட்டத்தை முன்வைத்த போது, ரணில் விக்கிரமசிங்க அதனை நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்து தோற்கடிக்கச் செய்தார். அதே சந்திரிகா, பின்னர் புலிகள் சமஷ்டித் தீர்வை பரிசீலிக்கத் தயார் என வந்த போது, அந்த முயற்சியை முறியடித்தார்.
சந்திரிகா குமாரதுங்க — 2000ஆம் ஆண்டு அதிகாரப்பகிர்வு திட்டத்தை முன்வைத்த, பின்னர் புலிகளின் சமஷ்டி முயற்சியையும் முறியடித்த முன்னாள் ஜனாதிபதி. (படம்: Wikimedia Commons)
இது சந்திரிகா - ரணில் என்ற இரண்டு தனிநபர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல. இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் மாறாத நிகழ்ச்சி நிரல். உள்நாட்டு அரசியலிலோ, சர்வதேச அரசியலிலோ அழுத்தங்கள் உருவாகும் போது, சிங்களத் தேசிய அரசியல் சக்திகள் தங்களுக்குள் இணைந்து செயற்படுகின்றன. இதன் மூலமாக தமிழர்களுக்கு தீர்வொன்று கிடைப்பது தடுக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டா-செல்வா உடன்பாடு, டட்லி-செல்வா உடன்பாடு, தொடக்கம் ரணில்-புலிகள் பேச்சுக்கள் வரை இதே நிலைதான் நீடித்தது.
புலிகள் இந்த இடத்தில் பலிக்கடா ஆக்கப்பட்டனர். சர்வதேச அளவில் அவர்களை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்டு, அவர்கள் அதற்குள் கொண்டு வரப்பட்டனர். அப்படியானால், புலிகள் இணங்கியிருந்தால், சந்திரிகாவும் ரணிலும் இணைந்து சமஷ்டி அதிகாரப்பகிர்வு ஒன்றைக் கொண்டு வந்திருப்பார்களா? நிச்சயம் இல்லை. அதற்காகத்தான் அவர்கள் துருவநிலை அரசியலை முன்னெடுத்தனர்.
இந்த இடத்தில் பீரிசின் நூலை மேற்கோள்காட்டி கிருஷ்ணன் சிறீநிவாசன் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒற்றையாட்சித்தன்மையிலிருந்து விலகிச் சென்று அதிகாரப்பகிர்வை வழங்க, இலங்கை அரசுத் தரப்பிடம் போதிய அரசியல் துணிச்சல் இருக்கவில்லை என்பதே அது. அப்படியானால், ஒற்றையாட்சியில் இருந்து விலகத் தயாரில்லாத சிங்களத் தலைமைகள், எப்படி சமஷ்டி தீர்வுக்கு வந்திருக்கும்? விடுதலைப் புலிகள் அர்ப்பணிப்புடன் சமஷ்டித் தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அது சாத்தியமாகியிருக்காது என்பதை, பீரிசின் நூலை அடிப்படையாக வைத்து, கிருஷ்ணன் சிறீநிவாசன் எழுதியுள்ள கட்டுரை உணர்த்துவதாக உள்ளது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் எவரும் சமஷ்டியை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. ஒற்றையாட்சியைக் கைவிடுவதற்கும் தயாராக இல்லை. இன்று வரை அதே நிலைதான் நீடிக்கிறது. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. அவரும் கூட, நல்லாட்சி அரசின் காலத்தில், புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், இரா.சம்பந்தனைப் பார்த்து, "உங்களுக்கு என்ன தேவை?" என்று கேள்வி எழுப்பினார் என அண்மையில் ஒரு செவ்வியில் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கு இரா.சம்பந்தன், சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு எனக் கேட்ட போது, பதிலுக்கு அனுரகுமார திசாநாயக்க, சமஷ்டி என்ற பெயர் இருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சம்பந்தன் அதற்கு, இல்லை, அந்தப் பெயர் இல்லாவிட்டாலும் அதன் அம்சங்களுடன் கூடிய அதிகாரப்பகிர்வு இருந்தால் சரி எனக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் பேசத் தயார் என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். சமஷ்டியின் பண்புகளின் அடிப்படையில் பேசத் தயார் என அப்போது வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருந்த அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தாலும், இப்போது அதே நிலைப்பாட்டில் அவர் இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது.
விடுதலைப் புலிகள் சமஷ்டி தீர்வில் அக்கறை செலுத்தவில்லை என்பதால் போர் வெடித்தது சரி என்றால், அந்த தீர்வை அமுல்படுத்தும் விருப்பம் அரசாங்கத்திடம் இருந்திருந்தால், அதனை பின்னர் வந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தியிருக்கலாம். ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. தீர்வாக எதையும் வழங்கும் மனோநிலை சிங்களத் தலைவர்களிடம் இல்லை என்பதே உண்மை. அதனால்தான், எந்தவொரு தீர்வும் இன்று வரை தமிழர் பிரச்சினைக்கு கிட்டாமல் இருக்கிறது. பிரச்சினை எங்கிருந்து உருவாகிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
பேராசிரியர் பீரிஸ், சமஷ்டித் தீர்வில் புலிகள் அக்கறையின்றி இருந்ததை ஒரு குற்றச்சாட்டாக முன்நிலைப்படுத்தியிருந்தாலும், அது மாத்திரமே போருக்கான காரணியோ, தீர்வு எட்டப்படாமல் போவதற்கான காரணமோ அல்ல என்பதே உண்மை. அதனைத் தாண்டி தீர்வு ஒன்றை வழங்க வேண்டிய தரப்பான அரசதரப்பு அதற்கு தயாராக இருந்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அதனால்தான் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரான கிருஷ்ணன் சிறீநிவாசன், எந்தப் பிரச்சினைகளுக்காகப் போர் வெடித்ததோ, அந்தப் பிரச்சினைகளுக்கு இந்தப் போரின் முடிவு ஒரு தீர்வைத் தரவில்லை என்பதுடன் அந்த நூலாய்வுக் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
0 Comments