தமிழ்ப்பேசும் கட்சிகளின் கூட்டும் கேள்விகளும்
தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை என்ற பெயரில் இயங்கத் தொடங்கியுள்ள ஆறு அரசியல் கட்சிகளும், அடுத்த கட்டமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கவும், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியாத சூழலில், ஒன்றிணைந்து செயற்பட முடியாத சூழலில்தான், தமிழ்ப் பேசும் கட்சிகளின் இந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. ஆனாலும், தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கில் இந்தக் கூட்டில் இணைந்திருக்கின்றனவா அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டதா என்ற வலுவான கேள்வி இன்னமும் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்குப் பின்னர், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் பரவலாக இருந்தது. ஒற்றுமையின்றி தனித்தனியாக போட்டியிடுவதை தமிழ் மக்கள் பலவீனமாக பார்த்தனர். தமிழ்த் தேசிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய போது, தமிழ் மக்கள் தங்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பினர். அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அது அளவிட முடியாத இழப்புகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
இப்போது தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்கும் நிலையில் இல்லை. ஏனென்றால் அது நடக்கப் போவதில்லை, தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அதனை நடக்கவும் விடப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இன்றுள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு - கூட்டுச் செயற்பாடு என்பது வெறும் கானல் நீராகி விட்டது.
இந்தச் சூழலில்தான், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுடன் இணைந்து, தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கின்றன. இது உருவாக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டும் உள்வாங்கப்பட்டன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில் இதுபற்றி அவருடன் கலந்துரையாடப்படவும் இல்லை.
சுயேட்சை உறுப்பினர் என்பதால் அர்ச்சுனா இராமநாதன் சேர்க்கப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சிங்களக் கட்சி ஒன்றில் இருந்து தெரிவானதால், அவரை சேர்க்கவில்லை என்றும் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தெரிவான ஜீவன் தொண்டமான் எப்படிச் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், அவருக்குப் பொருந்திய அந்த விதி, இன்னொருவருக்கு பொருந்தாமல் போவது சரியா என்ற கேள்வி உள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் — கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கூட்டில் இணையுமாறு கோரிக்கை விடுத்தவர். (படம்: Wikimedia Commons)
தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் மனோ கணேசன் முன்பாக ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருக்கிறார். நோக்கங்கள், செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களுடன் எமக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுத்தால் மத்திய குழுவில் பேசி தீர்மானிப்போம் என்று பதிலளித்திருக்கிறார் கஜேந்திரகுமார். இந்தத் தகவல் வெளியானதும், சிலர் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இதுபற்றி வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் - தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒன்றுபட்டு செயற்படும் நோக்கில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டதா அல்லது தனிப்பட்ட அரசியல் நோக்கில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. அவரது கருத்து, முற்று முழுதாக கஜேந்திரகுமார் இந்தக் கூட்டுக்குள் வரக் கூடாது - வர முடியாது என்ற அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
முதலாவதாக, எழுத்து மூல அழைப்பு விடுக்க முடியாது என சாணக்கியன் கூறியுள்ளார். எழுத்துமூலமான அழைப்பின் அடிப்படையில் ஆறு கட்சிகளும் இணையவில்லை என்றும், எனவே எழுத்து மூல அழைப்பு கஜேந்திரகுமாருக்கு விடுக்கப்படுவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆறு கட்சிகளும் இந்த கூட்டின் நிறுவக கட்சிகள். அவை ஒன்றிணைந்தே இந்தக் கூட்டை உருவாக்கின. எனவே யாரும் யாருக்கும் அழைப்பு விடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இப்போது இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டு, அதற்கென ஒரு பெயரும் வைக்கப்பட்டு விட்டது. இனிப் புதியவர் ஒருவரை சேர்க்க அழைப்பு விடுப்பது தான் முறை.
அதேவேளை, ஆறு கட்சிகளும் ஒரு வரைவு ஆவணத்தின் அடிப்படையிலேயே ஒன்றிணைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார். அதனை மறுத்திருந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அப்படியான எந்த வரைவு ஆவணமும் இருக்கவில்லை என்றும், ஆனால் ஒரு கருத்துரு ஆவணம் இருந்தது என்றும் ஒப்புக் கொண்டிருந்தார். கருத்துரு ஆவணத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்ததை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பகிரங்கமாக கூறியிருந்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் எழுத்துமூலமான எந்த ஆவணமும் இல்லை என கூறியிருக்கிறார்.
ஆறு கட்சிகள் தங்களுக்குள் ஒரு கருத்துரு ஆவணத்தை வைத்திருந்தே ஒன்றிணைந்தன. அப்போது தமிழ் காங்கிரசிடம் அதுபற்றி கலந்துரையாடப்படவில்லை. ஒன்றிணைந்த பின்னர் புதிய தரப்பு ஒன்றை அழைக்கும் போது, அழைப்பு விடுவதும், அதற்கான நோக்கத்தை தெளிவுபடுத்துவதும் ஒரு அமைப்பின் கடப்பாடு. ஆனால் அதற்கு மறுப்பை வெளியிடுவது என்பது எதனை உணர்த்துகிறது?
தமக்கு அழைப்பு விடுத்தால் அதுபற்றி தங்களின் மத்திய குழுவில் ஆராய்ந்து பதிலளிப்பதாக கஜேந்திரகுமார் கூறியிருக்கிறார். ஆனால், சாணக்கியன், தானே முடிவெடுத்து அப்படி அழைப்பு விடுக்க முடியாதென அறிவித்திருக்கிறார். அப்படியானால் ஆறு கட்சிகளும் வெவ்வேறு நோக்கில் - கருத்துக்களின் அடிப்படையில் செயற்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஜீவன் தொண்டமான் ஐதேகவில் தெரிவு செய்யப்பட்டு இதொகாவின் செயலாளராக செயற்படுவதை ஏற்றுக் கொள்ளும் இந்தக் கூட்டு, ஏன் தமிழ்க் காங்கிரஸ் மூலம் தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமாரை, தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக ஏற்க மறுக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக இருந்தால், இந்தக் கூட்டு தங்களுக்கிடையில் முரண்பாடற்ற நிலைப்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக அரசியல் வேறுபாடுகளின் அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால், இந்தக் கூட்டின் அடிப்படை நோக்கம் சிதைந்து விடும். தமிழ் மொழிபேசும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் கூட்டாக இருந்தால், அரசியலமைப்பு விடயத்தில் சமஷ்டியை வலியுறுத்துவதோ, 13வது திருத்தத்தை நிராகரிப்பதோ - இந்தக் கூட்டில் இணைந்து கொள்வதற்கான தகுதியீனங்களாக கருத முடியாது.
இந்த விடயங்களில் கஜேந்திரகுமார தரப்பு மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது உண்மை. அப்படியானால் ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில், கொள்கையில் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. வேற்றுமைகள் மத்தியில் ஒற்றுமை காணும் வகையில் தமிழ்ப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தான் இந்த முயற்சியை பலப்படுத்தும். மாறாக வேற்றுமைகளை மையப்படுத்தி, பல்வேறு தரப்புகளை புறக்கணித்து அரசியல் செய்யும் கூட்டாக இருந்தால், இது விரைவிலேயே சிதைந்து போகும் முயற்சியாகி விடும்.
தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு உள்ளே எவரையும் வரவிடாமல் தடுக்கும் வகையில், தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை செயற்படுமானால் அது அர்த்தமற்றது. அவ்வாறான நிலை இருந்தால், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்தக் கூட்டு உருவானதா அல்லது அரசியல் நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கும்.
0 Comments