தேர்தலைத் தட்டிக் கழிக்கும் அரசாங்கம்
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியிருந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பதில் அதற்குச் சாதகமானதாகத் தென்படவில்லை. கடந்த 5ஆம் திகதி இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்திய வெளியுறவுச் செயலாளருடனான ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்த விடயங்கள் பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. இதிலிருந்தே, மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டு தரப்புகளுக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், அரசாங்க ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் கருத்துக்கள், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழ்க் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தற்போது தடையாக இருப்பது, நல்லாட்சி அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்திருத்தம்தான். அதனால்தான் புதிய முறைப்படி தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது; ஆனால் அதற்கேற்ற தொகுதி எல்லை நிர்ணயம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் தேர்தல் நடத்துவது இழுபறிக்குள்ளாகிச் செல்லும் நிலையில், உடனடியாக எல்லை நிர்ணய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையில், விரைவாகத் தேர்தலை நடத்துவதற்கு உள்ள ஒரே வழி பழைய முறையில் தேர்தலை நடத்துவதேயாகும்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் சிறியதொரு திருத்தத்தைச் செய்வதன் மூலமாக இதற்கு வழிவகுக்க முடியும். இதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்திருந்தார். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அதே தனிநபர் பிரேரணையை இரா. சாணக்கியன் சமர்ப்பித்திருந்தார். அதனை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவதன் மூலமாக, பழைய முறைப்படி தேர்தலை நடத்தும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் — உடனடியாகத் தேர்தல் நடத்துவதற்கு இருக்கின்ற ஒரே வழியாக இதுவே உள்ளது.
இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை, விருப்பு வாக்கு மோசடிகள் இடம்பெறுகின்றன, வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் நிலை இல்லை என்பன போன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அதனை மக்கள் விரும்பவில்லை என்றும், அதனால் அதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்றும் கைவிரித்திருக்கிறது அரசாங்கம். உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என இந்தியா விடுத்திருக்கின்ற அழைப்பிற்கான அரசாங்கத்தின் பதிலும் இதுதான். இந்தியாவின் அழைப்பிற்கு அமைய உடனடியாகத் தேர்தலை நடத்துவதானால், பழைய முறைப்படியே தேர்தலை நடத்த வேண்டும்; தேர்தலை இழுத்தடிப்பதானால், புதிய முறைப்படிதான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அரசாங்கம் இப்போது அந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி — மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு வலியுறுத்திய அவரது கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் இதுவரை தெளிவற்றதாகவே உள்ளது. (படம்: Wikimedia Commons)
எல்லை நிர்ணய செயற்பாடுகள் முடிந்து, புதிய தேர்தல் முறைப்படி தேர்தல் நடத்தப்படும் அதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்டால், விரைவாகத் தேர்தலை நடத்தத் தயார் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பதில். இந்தப் பதில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஜனாதிபதியைச் சந்தித்த போதும் நேரடியாக வழங்கப்பட்டிருக்கலாம்; அப்படி வழங்கப்பட்டதா இல்லையா என்பதை இந்திய தரப்பு கூறவில்லை, இப்படி ஒரு விவகாரம் பேசப்பட்டதா என்பதையே இலங்கை தரப்பும் வெளிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியத் தயாரில்லை என்ற செய்தியை இதன் மூலம் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தத் தகவலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் வெளிப்படுத்திய அன்று, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்திற்குச் சென்று பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தியத் தூதுவர் பெலவத்தைக்குள் சென்றது இதுதான் முதல் தடவை அல்ல; முன்னரும் சென்று பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். இந்திய வெளியுறவுச் செயலாளரின் சந்திப்புகள் மற்றும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவே ரில்வின் சில்வாவுடன் கலந்துரையாடப்பட்டதாக இந்தியத் தூதுவர் குறிப்பிட்டிருக்கிறார். இது இலங்கை அரசாங்கம் இந்திய நிலைப்பாடுகளுடன் முரண்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் இந்திய தரப்பின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் நழுவுகிறது என்றால், இந்தியா புதிய வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், கொழும்பைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது; அதற்கே முன்னுரிமையும் கொடுக்கிறது. எப்போது கொழும்பு தன் கைக்குள் சிக்காமல் நழுவிக் கொள்கிறதோ அந்தத் தருணத்தில், தமிழர் தரப்பைத் தங்களின் பகடைக்காய்களாக ஆக்கிக் கொள்கிறது. 1980களில் இருந்து இதுதான் நடந்து வந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை அரசாங்கத்தைத் தன் கைக்குள் கொண்டு வருவதில் இந்தியா கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தது; அதனால்தான் தமிழர் தரப்புக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தூரம் அதிகரித்தது. தமிழர்களைப் பயன்படுத்திக் கொழும்பைக் கையாளுகின்ற தேவை அதற்கு இல்லாமல் போனது.
கொழும்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான பிரதிநிதிக் குழு மட்ட பேச்சுவார்த்தை — மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இரு தரப்புகளுக்கும் இடையிலான உடன்பாடின்மை தொடர்கிறது. (படம்: Wikimedia Commons)
இந்தியாவின் அழைப்புகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்ற போது, இந்தியா பிற வழிகளைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலை உருவாகலாம். அது நிச்சயமாகத் தேசிய மக்கள் சக்திக்குச் சாதகமான ஒன்றாக இருக்கும் என்றில்லை. அண்மைக்காலத்தில் தமிழர் தரப்பையும் கையாளுவதற்கான ஒரு அறிகுறி புதுடெல்லியிடம் வெளிப்படுகிறது. இது மிகத் தெளிவான நிலை எனக் கொள்ள முடியாவிட்டாலும், இரண்டு தரப்புகளையும் கையாளுகின்ற ஒரு முடிவுக்குப் புதுடெல்லி வந்திருப்பதான தோற்றத்தையே காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவின் விருப்பங்கள் அல்லது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாண்டிச் செயற்படுகின்ற சூழலில், தமிழர் தரப்பை வைத்துச் சூழலைக் கையாளுவதற்கான — கொழும்புக்கு நெருக்கடி கொடுப்பதற்கான ஓர் உத்தியாகவும் இது இருக்கலாம்.
மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இந்திய தரப்பு விடுத்துள்ள அழைப்பு எந்தளவுக்குக் கனதியானது என்ற கேள்வி உள்ளது. இலங்கை அரசின் தட்டிக்கழிப்புப் பதில், புதுடெல்லியிடம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை அந்தக் கனதிதான் தீர்மானிக்கும். எது எவ்வாறாயினும், இந்தியா அழைப்பு விடுத்தாலும் சரி, தமிழர்கள் கோரினாலும் சரி, எதிர்க்கட்சி சவால் விடுத்தாலும் சரி, இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கத்தை அசைப்பதற்குப் புதுடெல்லி மாற்று உபாயத்தைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதை மறுக்க முடியாது.
0 Comments