தமிழீழத் தேசியத்தலைவரின் இலட்சியத்தில் விளையாடும் இரகுபதி குழுமம் — உடனடி நிறுத்தம் கோரும் திறந்த மடல்
புலிகளின் 50ஆவது பொன்விழா ஆண்டில், "தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" என்ற கூற்றை முன்னிறுத்தி நிதி திரட்டும் முயற்சிகள் தமிழ் சமூகத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச செயலக உறுப்பினரும், தேசியத் தலைவரின் வீரச்சாவை உலகிற்கு முதன்முதலில் அறிவித்தவருமான அ. தொல்காப்பியன், முன்னாள் அனைத்துலகப் செயற்பாட்டாளர் திரு. விஜயரட்ணம் சிவநேசன் (ரகுபதி) அவர்களுக்கு இந்தத் திறந்த மடலை எழுதியிருக்கிறார். வரலாற்றுப் பொறுப்புணர்வுடன் உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற உந்துதலில் எழுதப்பட்ட இந்த மடல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்கால பாதை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
மதிப்பிற்குரிய திரு ரகுபதி அவர்களே,
வணக்கம்.
நானும் நீங்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரே காலகட்டத்தில் பயணித்தவர்கள். தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் எங்களுக்கு உண்டு. உண்மைகள் உறங்குவதில்லை என்ற அந்த வரலாற்றுப் பொறுப்புணர்வுடன்தான் இந்த மடலை எழுதுகிறேன்.
"The best way to Predict your Future is to Create it"
என்ற நம்பிக்கையுடன்…
தோல்வியில் இருந்து மீண்டெழுதல் — இன்றைய வரலாற்றுக் கடமை
அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ நாம் தவறிழைத்த பக்கங்கள் எவை? திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் எவை? என்று இனங்காண வேண்டும். அவற்றின் படிப்பினைகள் ஊடாக சரியான பாதையைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இந்தத் தவறுகள் தனியே மற்றொரு ஆயுதப் போராட்டத்துக்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு என்றாலும் சரி, இராஜதந்திர ரீதியில் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கு என்றாலும் சரி — எமக்கென்றொரு கொள்கை அணுகுமுறை வகுக்கப்பட வேண்டும். வரலாறு தான் எமது வழிகாட்டி என்று எமது தேசியத் தலைவரே கூறியிருக்கிறார். அந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால் அது எமது இனத்தை நிரந்தர அடிமைத்தனத்துக்குள் கொண்டு செல்லவே வழிகோலும். எனவே இந்தச் சிந்தனைத்தளத்தில் நின்று உங்களுக்கு நான் எழுதும் விரிவான திறந்த மடல் இது.
திரு ரகுபதி அவர்களே — இந்த மடலை எழுதும்போது என் இதயம் வலிக்கிறது
ஒரே காலத்தில் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற பல மூத்த பிரதிநிதிகளும் போராளிகளும் தமிழ் மண்ணின் விடுதலைக்காக தங்கள் இளமையை, கனவுகளை, உயிரையெல்லாம் பலியிட்டவர்கள். நீங்கள், நான் உள்ளிட்ட பல உள்ளார்ந்த களச் செயற்பாட்டாளர்கள் என பலர் நெருப்பாறுகள் நீந்தி கடந்து இவ் விடுதலைப் போருக்கு தங்களையே ஆகுதியாக்கிக்கொண்ட வரலாறுகளை நீங்கள் உங்கள் நினைவில் நிறுத்தி, உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள்.
புலிகளின் தியாகம் என்பது வெறும் வரலாறு அல்ல — அது நமது இதயத்தில் ஓடும் ரத்தம். தமிழ் மக்கள் நூற்றாண்டுகளாக அடக்குமுறையின் கொடுங்கோன்மையில் நசுக்கப்பட்டபோது, அவர்களின் அலறல் கேட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலை வேள்விக்குள் தன்னை இணைத்து ஆயுதம் ஏந்தினார். "அடிமையாக வாழ்வதைவிட, தன்மானத்துடன் போராடி வீழ்வோம்" என்ற இலட்சிய உறுதியுடன், இலட்சக்கணக்கான மாவீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்களின் இரத்தம் மண்ணில் கலந்தது. அவர்களின் கனவுகள் தமிழீழ வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன. அந்தப் புனித இரத்தத்தின் மீது சத்தியம் செய்து இந்த மடலை எழுதுகிறேன்.
காரணம், இன்று — மே 05, 2026 — புலிகள் இயக்கத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டில், நீங்கள் "தலைவர் உயிருடன் இருக்கிறார்... நான் அவரை அணைத்தேன்" என்ற பொய்யைப் பரப்புவது, அந்த மாவீரர்களின் கல்லறைகளின் மீது நடனமாடுவது போல் உள்ளது. இது என் இதயத்தைப் பிளக்கிறது. இது புலிகளின் 50 ஆண்டு தியாக வரலாற்றைச் சேறாக்கும் செயல். இந்தப் புனித பொன்விழா காலத்தில் இப்படியொரு அப்பட்டமான பொய்யை முன்னிறுத்துவது மன்னிக்க முடியாத துரோகம், வெட்கக்கேடான நயவஞ்சகம்!
2009 மே 17-19ஆம் தேதிகளில் முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் இலங்கை இராணுவத்துடனான இறுதிப்போரில் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்தார் என்பது உலகறிந்த உண்மை. இலங்கை அரசு, DNA சோதனை, நெருங்கிய தோழர்களின் உறுதிப்படுத்தல், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களுடன் இதை உறுதி செய்தது. தலைவரின் மகன் சார்ல்ஸ் அண்டனி உட்பட குடும்ப உறுப்பினர்களும் அந்த இறுதி நாட்களில் வீரமரணம் அடைந்தனர். இந்த உண்மையை மறைத்து, "தலைவர் உயிருடன் இருக்கிறார், நான் அவரைச் சந்தித்து அணைத்தேன்" என்று நீங்கள் தொடர்ந்து பரப்பும் கதைகள், மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே தெரிகிறது.
நீங்கள் விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர். இயக்கத்தின் ஒழுங்கு, ஒழுக்கம், உண்மை என்பவற்றை முன்னிறுத்தி பணியாற்றியவர். ஆனால் இன்று தலைவரின் பெயரைப் பயன்படுத்தி, அவரை "உயிருடன்" காட்டி நிதி திரட்டுவது, மக்களின் உணர்வுகளைச் சுரண்டுவது — இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மரபுக்கு நேர்ந்த துரோகம். பல முன்னாள் போராளிகள், தலைவரின் குடும்ப உறவினர்கள் உட்பட பலர் இந்தக் கூற்றுகளை மறுத்துள்ளனர். தலைவர் உயிருடன் இருந்திருந்தால், இத்தனை ஆண்டுகளாக தனது மக்களை அணுகாமல் இருப்பாரா? இது யாருக்கும் புரியாத பொய்.
முள்ளிவாய்க்கால் போர் மௌனிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 17 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? காணாமல் போனோர் குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்? மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் உரிமைகள் — இவற்றுக்காக என்ன உருப்படியான பணியைச் செய்தீர்கள்? தலைவரின் பெயரைச் சொல்லி, கட்டற்ற பொய்களை சொல்லி, மக்களின் உணர்வுகளைச் சுரண்டி பணம் திரட்டுவதைத் தவிர வேறு எதையும் செய்தீர்களா? நீங்கள் தலைவரை உண்மையாக நேசித்தால், அவரது தியாகத்தை, புலிகளின் ஒழுக்கத்தை, இலட்சியத்தை ஏன் இப்படி ஆளுக்கொருவராக நின்று கொச்சைப்படுத்துகிறீர்கள்?
ரகுபதி அவர்களே — உங்களின் செயல் எம் உள்ளங்களை கொதிப்படையச் செய்கிறது
தலைவர் உயிருடன் இருந்தால், ஏன் இந்த 17 நீண்ட, இருண்ட ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒரு முறை கூட சந்திக்கவில்லை? முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த பிறகு, எமது தாய்மார்கள் இரவு பகலாக அழுது, காணாமல் போன பிள்ளைகளின் புகைப்படங்களை நெஞ்சோடு அணைத்து, "என் மகன் எங்கே?" என்று கதறுகின்றனர். தந்தையர்கள் தங்கள் மகன்களின் நினைவில் உடைந்து போகின்றனர். இளைஞர்கள் எதிர்காலமின்றி இருளில் தவிக்கின்றனர். அகதி முகாம்களில், மீள்குடியேற்றமின்றி, துயரத்தில் வாடும் எமது மக்களின் கண்ணீரைத் துடைக்க தலைவர் வரவில்லையா? இந்த 17 ஆண்டு கொடூர துயரத்தைப் பார்த்தும் அவர் மௌனமாக இருப்பாரா?
இது உங்கள் பொய்யை நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாள்களா? அல்லது "பாதுகாப்புக் காரணம்" என்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் எப்படி தலைவர் அவர்களைச் சந்தித்து வந்தீர்கள்? உங்கள் பயணத்தை உளவு அமைப்புகள் அறியாதா? இது மக்களை ஏமாற்றும் குழந்தைத்தனமான பித்தலாட்டம்! காரணம் உங்கள் எதிர்வினையாளர்கள் உங்கள் குழுமத்தை "இரகுபதி கும்பல்" என்ற பெயர் சூட்டி அழைப்பது உங்களுக்குப் பொருந்துகிறது. மக்களின் உணர்வுகளை விற்று பணம் திரட்டும் இந்தச் செயல் — இது துரோகத்தின் உச்சம்.
அன்பார்ந்த தமிழ் மக்களே — எம் உயிர் தோழர்களே!
போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகியும், இவ்வாறான பொய்மாயைகளுக்குள் மூழ்கி, மௌனமாக இருப்பது சாபக்கேடு! மக்களே எஜமானர்கள் என்பது உண்மையானால், இந்தக் கும்பல்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்காமல், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, அவர்களின் பொய்களுக்குள் சிக்கிக்கொள்வது — நமது இலட்சியப் பயணத்தை மேலும் மேலும் நிலைகுலையச் செய்யாதா?
எனவே, தமிழ் மக்களே, எச்சரிக்கையாக இருங்கள். மாவீரர்களின் இரத்தத்தை விற்கும் இந்தக் கும்பல்களிடமிருந்து விலகி நில்லுங்கள். உண்மையான தலைவரின் இலட்சியம் பொய்களில் அல்ல, உண்மையிலும் தியாகத்திலும்தான் வாழும்.
ரகுபதி அவர்களே — என் நிறைவான கருத்து
தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2009 மே 19 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்தார் என்பது உறுதியான வரலாற்று உண்மை. இலங்கை அரசு, DNA சோதனை, விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை, போர்களக் கட்டளைத் தளபதி ஜெயம் மற்றும் சர்வதேசப் பேச்சாளர் பத்மநாதன் (கே.பி.) ஆகியோரின் உறுதிப்படுத்தல், அப்போர்க்களத்தில் தலைவரோடு ஏகாலத்தில் பயணித்த படைத்துறைத் தளபதிகள், தலைவரின் உடன் பணியாற்றியவர்களின் அடையாளம் காணல், குடும்ப உறவினர்களின் அறிக்கைகள் — இவை அனைத்தும் இந்த உண்மையை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன.
இன்று "தலைவர் உயிருடன் இருக்கிறார்" என்று சொல்பவர்கள் பெரும்பாலும் பணம் திரட்டும் மோசடியில் ஈடுபடுபவர்கள் என்பதை தலைவரின் தியாகத்தை போற்றும் பலர் பகிரங்கமாகக் கண்டித்துள்ளனர். இது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சுரண்டும் செயல்.
புலிகளின் தியாகத்தை மதிக்க வேண்டும் — அது உண்மையான வரலாற்றுடன், பொய்களின்றி மதிக்கப்பட வேண்டும். மக்களின் துயரங்களை — காணாமல் போனோர், அரசியல் தீர்வு, உரிமைகள் — உண்மையான அடிப்படையில் போராட வேண்டும். பொய்களால் இலட்சியத்தை களங்கப்படுத்துவது துரோகம் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையை ஏமாற்றும் செயல். தமிழ் மக்களுக்கு உண்மை மட்டுமே விடுதலைக்கான அடித்தளம். பொய்களால் எந்த இலட்சியமும் நிலைக்காது என்பதை புரிந்துகொண்டு, சமகால போக்கை உணர்ந்து, எமது இலட்சியப் பயணத்துக்கான பாதையை ஒருங்கிணைக்கும் செயலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
2009 மே மாத நடுப்பகுதியில் வன்னியில் ஈழத் தமிழினத்துக்கு ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுக்குப் பின்னர் — அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ எதையும் முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலை உருவாகியிருக்கிறது. 2009க்குப் பிற்பட்ட இந்த வெறுமை நிலை ஈழத் தமிழினத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகவே உணர முடிகிறது. தலைவர் அவர்கள் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. இதற்கெல்லாம் காரணம் எமக்குள்ளே இருக்கும் பிளவு நிலை தான்.
அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் உலக அரசியல் சூழல் முதல் தமிழ்நாடு அரசியல் சூழல் வரை அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பார். கண்டிப்பாக அவர் பெயர் பயன்படுத்தி தமிழ்த்தேசியர் என்ற போர்வையில் சிலர் செய்யும் செயல்களை ரசிக்க மட்டும் செய்யமாட்டார்.
ஏனெனில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் சிலரின் அடையாளம் மட்டுமில்லை — தமிழினத்தின் அடையாளம்; விடுதலைக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மனிதர்களின் அடையாளம்...! ஆகவே அவரின் தியாகத்தில், இலட்சியத்தில் விளையாடாதீர்கள். தலைவர் பிரபாகரன் உங்களுக்குத்தான் சொந்தம், உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நீங்களும் உங்களைச்சார்ந்தோரும் பேசிவருவதைப் பார்க்கும்போது, இந்தக் கால தலைமுறையினருக்கு அவர் வேறு விதமாக தெரிந்துவிடுவாரோ என்ற அச்சம் எழுகிறது.
பிரபாகரன் என்ற இப்பெயர் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். ஏனெனில் அவர் செய்திருக்கும் விஷயம் அப்படிப்பட்டது. அத்தகைய தலைவர் இன்று எம்மோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தும், அடுத்தவர்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி நீங்கள் அவரை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவை உலகுக்கு முதன்முதலில் அறிவித்தவனாக எனது வேண்டுகோள்
இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். "தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்."
இந்த அவமானகரமான பொய்ப் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்துங்கள். தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளுங்கள். மாவீரர்களின் தியாகத்தை மதியுங்கள். இல்லையென்றால், வரலாறு உங்களை நயவஞ்சகத் துரோகி என்று நிரந்தரமாகப் பதிவு செய்யும். என் இதயம் இன்னும் வலிக்கிறது... ஆனால் உண்மை ஒருநாள் வெளிவரும் — காரணம் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவை உலகுக்கு முதன்முதலில் அறிவித்தவன் என்ற வகையில்.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்






0 Comments