elugai

மீண்டும் படுகுழிக்குள் விழுகிறோமா? ஏறும் பணவீக்கம், சரியும் ரூபா: அநுர அரசாங்கத்திற்குத் தொடரும் சவால்கள்!

மீண்டும் படுகுழிக்குள் விழுகிறோமா?

மீண்டும் படுகுழிக்குள் விழுகிறோமா?

கட்டுரையாளர் - கார்வண்ணன்

அரசாங்கத்தின் வருமான மூலங்கள் அனைத்தும், வெற்றிகரமாக தமது இலக்கை அடைந்து வருவதாக, தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டி கூடுதல் வருமானத்தை பெற்றிருப்பதாக, அரச திணைக்களங்கள் பலவும் அறிவித்திருக்கின்றன.

அவற்றில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் போன்றவை முக்கியமானவை. அதைவிட, ஏற்றுமதி வருமானங்கள் அதிகரித்து வருவதாகவும், அரசாங்கத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி

ஆனால், சுற்றுலாத்துறையில் அவ்வாறான ஒரு கணக்கை காட்ட முடியாத நிலையில், அரசாங்கம் இருக்கிறது. மத்திய கிழக்கு நெருக்கடியினால், சுற்றுலாத்துறை மந்த நிலையை அடைந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வந்திருந்தார்கள்.

இலங்கை சுற்றுலா கடற்கரை சுற்றுலாப் பயணிகள் வெறிச்சோடிய இலங்கை சுற்றுலா கடற்கரை — மத்திய கிழக்கு போரின் காரணமாக சுற்றுலா வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்னர், பெப்ரவரி மாதம், 279,328 சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், ஏப்ரலில், அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்தினால் குறைந்திருக்கிறது. ஏப்ரல் மாதம், ஈஸ்டர் விடுமுறைக் காலத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வழக்கம். ஆனால், இலங்கை எதிர்பார்த்தளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும் இல்லை, வருமானம் கிடைக்கவும் இல்லை.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்பட்டுப் போனதால், உள்ளூரிலும் தொழில்துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு சங்கிலித் தொடர் போல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் கோவிட் தொற்றுப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால், சுற்றுலாத்துறை மேலிருந்து கீழ்நோக்கிய செங்குத்தான சரிவை சந்தித்தது.

தற்போதைய வீழ்ச்சி அவ்வாறான சரிவுடன் ஒப்புடக்கூடியதல்ல, என்றாலும் இது ஒரு சாய்வு நிலை சரிவு என்பதில் சந்தேகம் இல்லை.

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

இன்னொரு பக்கம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 289 ரூபாவாக விற்கப்பட்ட அமெரிக்க டொலர் இப்போது, சில வங்கிகளில் 323 ரூபாவுக்கும் அதிகமாக விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூபாவின் மதிப்பு, கிட்டத்தட்ட 34 ரூபாவினால், வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இலங்கை ரூபா நாணயம் டொலர் பண மாற்று வீழ்ச்சி இலங்கை ரூபா நாணயம். டொலருக்கு எதிராக ரூபா மதிப்பு 34 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வாக்குறுதிகளும் நிஜமும்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ரூபாவின் மதிப்பை அதிகரித்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்துவோம் என்றும், எரிபொருள் விலைகளை குறைப்போம் என்றும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தும் இப்போது செயற்படுத்தக்கூடிய விடயங்களாக இல்லை.

200 ரூபாவுக்கு எரிபொருளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்த நிலையில், இப்போது அது இரண்டு மடங்காக உள்ளது. வரும் நாட்களில் அது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது உலக சந்தையில், ஏற்பட்ட நெருக்கடியினால் ஏற்பட்ட விளைவு மாத்திரம் அல்ல. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு முன்னரே அரசாங்கம் வாக்குறுதி கொடுத்த விலைக்கு எரிபொருளை வழங்கவில்லை.

மின்சார விநியோகத்திலும் அதே நிலை தான். அரசாங்கம் கூடுதல் விலைக்கு நுகர்வோருக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதற்கு முற்படுகிறது. இந்த விடயத்தில் நுகர்வோருடன் முரண்படுகின்ற நிலை இப்போதும் தொடர்கிறது.

பணவீக்க அதிகரிப்பு

அரசாங்கம் பதவியேற்ற போது இருந்த பொருளாதாரச் சூழல் இப்போது இல்லை. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொருளாதார சூழல்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விட்டுச் சென்ற பாதையிலேயே, தற்போதைய அரசாங்கம் செல்கிறதே தவிர, தனக்கான தனித்துவமான பாதையை உருவாக்கியிருக்கவில்லை.

அதனால் முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார வழிமுறைகளையே இது பின்பற்றுகிறது. இதனால், தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. வீழ்ச்சி அடைந்து செல்லுகின்ற பொருளாதார நிலை அரசாங்கத்துக்கு ஆபத்தானது.

இந்த நிலை நாளடைவில் இன்னும் மோசம் அடையும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிகிறது. மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன வெளியிட்ட அறிக்கைகள் இலங்கைக்கு சாதகமானவை அல்ல. பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் பணவீக்கம், 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 2.2 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 3.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது சாதாரண விடயமல்ல.

இலங்கை சந்தை காய்கறி விலை அதிகரிப்பு பணவீக்கம் இலங்கை சந்தை — ஒரே மாதத்தில் பணவீக்கம் 3.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

ஒரே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 2.1 சதவீதத்தினாலும், உணவு அல்லாப் பொருட்களின் பணவீக்கம் 3.9 வீதத்தினாலும் உயர்ந்திருக்கின்றது. எரிபொருள் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், அது மாத்திரமே காரணமல்ல. இலங்கையின் பொருளாதார நிலையும், அதனை கையாளும் முறையும் கூட இதில் பங்களிக்கிறது.

கோட்டாபய அரசாங்கத்தின் பாடங்கள்

இதுவரையில் இலங்கை அடைந்து வந்த சாதகமான முன்னேற்றங்களை தடுத்து, பின்னடைவை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதான சூழலை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இவ்வாறான படிப்படியான பின்னடைவுகளினால் தான், வீழ்ச்சியை சந்தித்தது. முழு அளவிலான பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் அது சிக்கிக் கொள்ள நேரிட்டது.

தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில், எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறது என்று தெரியவில்லை. மக்களிடம் இருந்து வரிகள், கட்டணங்கள் மூலமாக அதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதாக, சாதனைப் பட்டியலைக் காட்டுவதிலேயே, குறியாக இருக்கிறது.

இந்தச் சாதனையின் மூலமாக, சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு அது முற்படுகிறது. அதன் நிபந்தனைகளை நிறைவேற்றி விட்டதாக, நற்சான்று பெற முனைகிறது. ஆனால் இது மாத்திரம் பொருளாதார செழிப்பையோ, வளர்ச்சியையோ ஏற்படுத்தப் போவதில்லை.

தேவை: தனித்துவமான பொருளாதார கொள்கை

அதனைத் தாண்டி இலங்கைக்கான தனித்துவமான பொருளாதாரக் கொள்கை வகுப்பு முக்கியமானது. தனித்துவமான பொருளாதார மீட்சி வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வது அவசியமானது. மக்களின் நலன்களை புறக்கணிக்காத வகையில் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதனை முன்னெடுக்க வேண்டியது முக்கியம்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வருமானம் பெருகி வருவதை காண்பிக்கும் அக்கறையை, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி அடைந்து செல்வதைத் தடுப்பதில் காண்பிக்கவில்லை. நிவாரணப் பொதிகளால் மாத்திரம் இத்தகைய நிலையை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்பதற்கான வழிகளை தேட வேண்டும்.

நாணயப் பெறுமதி வீழ்ச்சியை தடுப்பதும் இதில் முக்கியமானது. உள்நாட்டு நாணயப் பெறுமதி வீழ்ச்சி நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

மக்களின் அச்சம்

அரசாங்கத்தின் பொருளாதார கையாளுகை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடி தொடர்பான அச்சங்கள் மக்களுக்கு மெதுமெதுவாக உருவாகத் தொடங்கியிருக்கிறது. அதிகரித்துச் செல்லும் விலைவாசி, பொருட்களின் வாங்கும் சக்தியைக் குறைத்திருக்கிறது. மக்கள் இப்போது, தங்களின் வாழ்வாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிகளைத் தேட வேண்டிய நிலையில், இருக்கிறார்கள்.

மத்திய கிழக்கு போரின் விளைவாக, வறுமையும் பொருளாதார வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச கணிப்பீடுகள் கூறுகின்றன. இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன வழியை வைத்திருக்கிறது என்று வெளிப்படுத்தவில்லை.

ஆனால் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை மக்களின் கண் முன் காணத் தொடங்கியிருக்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம், டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பன, மீண்டும் ஒருமுறை பொருளாதார நெருக்கடிக்குள் இட்டுச் செல்லப்படுகிறோமா என்ற அச்சத்தை அவர்களுக்கு உருவாக்கியிருக்கிறது. இந்த அச்சத்தைப் போக்குவது அரசாங்கத்தின் கடமை.

Post a Comment

0 Comments