elugai

ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் என்ற வஜிரவின் அதீத நம்பிக்கை... நகைச்சுவையா அல்லது அரசியல் சூழ்ச்சியா?

ஏன் இந்த அவசரம்?

ஏன் இந்த அவசரம்?

கட்டுரையாளர் - சத்ரியன்

ஈரான் போர் நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருக்க, உள்நாட்டில் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் சில நகர்வுகளும் கருத்துகளும் சிறுபிள்ளைத்தனமானவையாக உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, கடந்த வாரம் வெளிப்படுத்திய ஒரு கருத்து, மிகச் சிறந்த நகைச்சுவையாக கருதத் தக்கது.

தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாவிட்டால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இதுதான் சரியான தருணம் என அவர் கூறியிருக்கிறார்.

வஜிர அபேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன — நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். (படம்: Parliament of Sri Lanka)

அவர் ரணில் விக்கிரமசிங்கவின் தீவிர விசுவாசிகளில் ஒருவர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பார் என்று அடித்துக் கூறியவர் வஜிர அபேவர்த்தன.

அவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. இப்படி நடக்கும் என்று கூட யாரும் நம்பியிருக்கவில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழல்தான் அப்போது காணப்பட்டது.

ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறப்படுவதை மெய்யாக்கும் வகையில், சாத்தியமே இல்லாமல் இருந்த ரணில் ஜனாதிபதியானார்.

நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லாமல் இருந்த ரணில் விக்கிரமசிங்க, தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். பின்னர் மெதுவாக பிரதமர் பதவிக்கு வந்தார். அதே வழியில் ஜனாதிபதியானார்.

அப்படி அவர் அதிகாரத்துக்கு வருவார் என — வஜிர அபேவர்த்தனவைத் தவிர வேறு யாரும் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

நாடாளுமன்றம் கலைவதற்கான சாத்தியமே இல்லை

இப்போது அவர், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த இதுதான் சரியான தருணம் என்று கூறியிருக்கிறார்.

இப்போது நாடு மெதுமெதுவாக முடக்க நிலையை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. வாரத்தில் வேலைநாட்களின் எண்ணிக்கை நான்காக சுருங்கிவிட்டது. போக்குவரத்து, அரசு நிர்வாக செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

கோவிட் பெருந்தொற்றின் போதும், முன்னைய பொருளாதார நெருக்கடியின் போதும், அவற்றுக்கு முன்னர் போர்க்காலத்திலும் மக்கள் தேவைகளை சுருக்கி வாழ்ந்தது போல, இப்போதும், வாழப் பழக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போர் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்சினைகளால் எரிபொருள் தொடக்கம் உணவுப் பொருட்கள் வரை எல்லாவற்றினதும் விநியோகங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறுகிறது. எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்தை மட்டுப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார் வஜிர அபேவர்த்தன. இது அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்ப வைக்கிறது.

ஜனாதிபதி சர்வதேச நிலை குறித்து அறிந்திருக்க வேண்டும், நாட்டில் என்ன நடக்கிறது, வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டே, அதுபற்றி எதுவும் தெரியாதவர் போல இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இது நகைச்சுவையாகப் பார்க்கக் கூடிய ஒன்று அல்ல. ஏனென்றால் நாடாளுமன்றத்தை கலைப்பது என்பது, அவ்வளவு சுலபமான விஷயமல்ல.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரே அதிகாரம் கிடைக்கும். தற்போதைய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அதிகாரத்தை ஜனாதிபதி பெறுவதற்கு, 2027 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும். அதற்கு இன்னமும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் — நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்க 2027 மே 21 வரை காத்திருக்க வேண்டும். (படம்: Wikipedia)

எனவே நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதனால், அதற்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு பிரேரணையை நிறைவேற்ற வேண்டும்.

இது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சாத்தியமாகக் கூடிய விஷயமே இல்லை. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது.

இப்படியிருக்க, எப்படி அவர்களை மீறி நாடாளுமன்றத்தை இடையில் கலைக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்? இது சிந்தித்துப் பார்க்க முடியாத விஷயம்.

ரணில் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற கனவு

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு வாய்ப்பேதும் இல்லாத சூழலில் கூட, அதனை கலைப்பதுதான் சரியானது என வாதிடும் அளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் இருக்கிறார்.

அவருக்கும் அவரது கட்சிக்கும், இன்னமும் ஒரு ஆசை ஒட்டிக்கொண்டிருக்கிறது — ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்பதே அது.

அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதற்கான சாத்தியம் இல்லை என்பது அதன் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

கடந்த முறை அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்தது போல எங்கிருந்தாவது அதிர்ஷ்டம் அடிக்கும், யாராவது தூக்கி வந்து ஜனாதிபதி பதவியை கொடுத்துவிட்டுப் போவார்கள் என்று நம்புகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க — இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமே இல்லை என்று கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. (படம்: Wikipedia)

ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கின்ற அந்த வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால், அவர் இப்போது குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராக கூட பதவியில் இல்லை.

தேர்தல் இல்லாமல் பின்கதவு வழியாக ஜனாதிபதியைப் பிடிப்பதற்குக் கூட, குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் எப்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக முடியும் என எதிர்பார்க்க முடியும்? அது சாத்தியமே இல்லை.

அப்படியிருந்தும், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் வஜிர அபேவர்த்தன கூறியிருப்பது புதிரானது. அவர் இப்படி ஒரு நம்பிக்கையை ஏன் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏனென்றால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவது தற்போதைய நிலையில் மிகப்பெரிய செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும்.

அது தவிர, தற்போதைய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் மக்களாணையுடன் அதிகாரத்துக்கு வந்தது. அந்த ஆணையை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. அதற்குள்ளாகவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அந்த கட்சி எப்படி இணங்கும்?

ஆட்சி நடத்தக் கூடிய சூழல் இல்லை என்று கூற முடியாது

தற்போதைய அரசாங்கம் பல விஷயங்களில் செயலற்ற நிலையில் இருக்கின்றது என்பது உண்மை. அது அவர்களின் அனுபவமின்மைக் குறைபாடு. அரச நிர்வாகத்தை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை.

பிரச்சினைகள் வரும்போதுதான் அவற்றிலிருந்து தீர்வுகளை தேடிக்கொள்ள முடியும். அதற்காக ஆட்சியைக் கொண்டு நடத்தக் கூடிய சூழல் இல்லை என்று கூற முடியாது.

ஆட்சி நிர்வாகத்தை கற்றுக்கொள்வதற்கிடையிலேயே, இந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருவது அபத்தம். குறித்த கால அவகாசத்திற்குள் தங்களின் இயலுமை இயலாமையை அவர்கள் நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

அதற்கு அவகாசம் கொடுக்காமல் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கூச்சல் போடுவது ஒரு பொறுப்புவாய்ந்த கட்சியின் தவிசாளருக்கான பண்பல்ல.

அவர் ரணில் மீது அதிக விசுவாசத்தை கொண்டிருக்கலாம். அவரை மீண்டும் ஒருமுறை அதிகாரத்தில் அமர்த்திப் பார்க்க ஆசைப்படலாம். அதற்காக ஒட்டுமொத்த நாட்டினதும் மக்களினதும் ஆணையை மீறுவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இருக்க முடியாது.

தற்போதைய நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்படி கையாளப் போகிறது? பிரச்சினைகளை எப்படித் தீர்த்துவைக்கப் போகிறது? என்று நாடு எதிர்பார்த்திருக்கிறது.

ஏனென்றால், முன்னர் இத்தகைய நெருக்கடியில் கோட்டாவின் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என போராட்டம் நடத்தியவர்கள், அதே நிலை இப்போது அவர்களுக்கு வந்திருக்கிறது. ஒரு நெருக்கடிக்குள் நாட்டை நிர்வகிப்பது எப்படி என்ற முன்னுதாரணத்தை இவர்கள் உருவாக்க வேண்டும்.

அவர்கள் அந்த முன்னுதாரணத்தை உருவாக்குவார்களோ இல்லையோ அதற்குள் அவசரப்படுவது சரியல்ல.

Post a Comment

0 Comments